கார்ட்டூன் வரைந்ததற்காக அன்னா ஹசாரே குழுவின் முக்கிய புள்ளியான அசீம் திரிவேதி தேச துரோக குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மும்பை வழக்கறிஞர் அவர் மீது புகார் கொடுத்திருக்கிறார். அன்னா பிரசாரம் செய்தபோது அசீமின் கார்ட்டூன்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டு இருந்தன. ஒரு கார்ட்டூனில் நாடாளுமன்றம் மலம் கழிப்பிடமாகவும் எம்.பி.க்கள் அதை மொய்க்கும் ஈக்களாகவும் ஓட்டுச்சீட்டு கழிவை துடைக்கும் பேப்பராகவும் சித்தரிக்கப்பட்டு இருந்தது. அடுத்ததில் அசோகர் தூண் மீது மூன்று சிங்கங்களுக்கு பதில் நாக்கை தொங்கவிட்டு ஓநாய்கள் நிற்கின்றன. மூன்றாவது படத்தில் பாரத மாதாவை அரசியல்வாதி, அதிகாரி, ஊழல் பேய் ஆகிய மூவரும் பலாத்காரம் செய்வதாக சித்தரித்துள்ளார். 'சீக்கிரம் முடி' என்று அரசியல்வாதி அவசரப்படுத்துகிறார். மற்றொரு கார்ட்டூனில் இந்திய அரசியல் சாசனம் மீது அஜ்மல் கசாப் சிறுநீர் கழிக்கிறான். இவை தவிர தேசிய பறவை, விலங்கு, 'சத்யமேவ ஜெயதே' ஆகியவற்றையும் மாற்றியிருக்கிறார். 'என் தாய்நாட்டின் தேசிய சின்னங்களையும் அடையாளங்களையும் புனிதமான அரசியல் சாசனத்தையும் அசீம் அசிங்கப்படுத்தி விட்டார். என் மனம் புண்பட்டிருக்கிறது' என வழக்கறிஞர் அமித் அரவிந்த் புகாரில் கூறியுள்ளார். 'கார்ட்டூன் என்றால் கேலிச் சித்திரம். யாரையும் எப்படியும் கேலி செய்ய கார்ட்டூனிஸ்டுக்கு சுதந்திரம் இருக்கிறது. ஊழலை தடுக்காமல் அதை விமர்சனம் செய்பவர்களை ஒடுக்குவதா?' என்று சுதந்திர சிந்தனையாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். நரேந்திர மோடியை, மம்தாவை கிண்டலடித்த கார்ட்டூனிஸ்டுகளுக்கு மட்டுமல்ல; பாரத மாதாவை தவறாக சித்தரித்ததாக ஓவியர் எம்.எஃப்.உசேனுக்கும் சிக்கல் எழுந்தது. சட்ட அடிப்படையில் அமைந்த உரிமைகளுக்கு நம்பிக்கையின் அடிப்படையிலான உணர்வுகள் எந்த வகையிலும் மதிப்பு குறைந்தவை அல்ல என்பதை உணர்ந்த மிதவாத படைப்பாளிகள் இது போன்ற விவகாரங்களில் சிக்குவதில்லை. இந்தியாவில் செய்தியாளர்கள் மிகவும் செல்வாக்கு மிகுந்த ஜாதி. எனவே அசீம் சீக்கிரம் வெளியே வந்துவிடுவார். வழக்கும் காலாவதி ஆகிவிடும். இருப்பினும், கருத்து சுதந்திரம் எல்லையற்றதா அல்லது வரையறைகளுக்கு உட்பட்டதா என்பதை விவாதித்து முடிவெடுக்க கிடைத்த இன்னொரு சந்தர்ப்பமாக இதை பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம்.
நன்றி: Dinakaran
No comments:
Post a Comment