Saturday, 22 September 2012

வரவிருக்கும் அறிவிப்புகள் ஐமுகூ அரசை கரை சேர்த்து விடுமா?


தேசிய அரசியலில் வேகமாக காட்சிகள் மாறிக் கொண்டிருக்கின்றன. திரைப்படங்களை காட்டிலும் விறுவிறுப்பான திருப்பங்கள் வருகின்றன. நேற்றுவரை நண்பர்களாக கைகோர்த்து நடந்தவர்கள் முட்டி மோதிக் கொள்கிறார்கள். எதிரிகளாக முறைத்துக் கொண்டிருந்தவர்கள் ஒரே மேடையில் கட்டித் தழுவுகிறார்கள். இடதுசாரி கம்யூனிஸ்டுகளையும் வலதுசாரி பாரதிய ஜனதாவையும் ஒன்றாக போராட்ட களத்தில் இறங்கவைத்த பெருமை  மம்தா பானர்ஜியை சாரும். டீசல் விலை உயர்வையும் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டையும் திரும்பப் பெறாவிட்டால் நடப்பது வேறு என்று மிரட்டியவர்கள் 24 மணி நேரத்தில் தனித்தனி பாதைகளில் பயணம் தொடங்கிவிட்ட வினோதமும் நடக்கிறது. இதே கோரிக்கைக்காக எதிர்க்கட்சிகள் நடத்திய கதவடைப்புக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தாவோ, தமிழக முதல்வர் ஜெயலலிதாவோ ஆதரவு தரவில்லை. ஆனாலும் பரவாயில்லை நானாக அரசுக்கு பாடம் கற்பிப்பேன் என்று காம்ரேடுகள் நடுவே நின்று கர்ஜித்த முலாயம் சிங் யாதவ், 'மன்மோகன் அரசு கவிழாமல் காப்பாற்றுவேன்' என 12 மணி நேரத்தில் பல்டி அடித்திருக்கிறார். இந்த விஷயத்தில் அவரது சமாஜ்வாடி கட்சியுடன் மோத மாயாவதியின் பகுஜன் சமாஜ் தயாராகி வருகிறது. மைனாரிடியாகிவிட்ட மன்மோகன் அரசை காப்பாற்றுவதற்கு பிரதியாக இரு தலைவர்களும் எதிர்பார்ப்பது ஒன்றுதான். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சிபிஐ தொடர்ந்துள்ள வழக்கை 'கவனித்துக் கொள்ள வேண்டும்'. மத்திய மாநில அரசுகளின் ஒத்துழைப்பு இல்லாமலே இத்தகைய வழக்குகளில் கின்னஸ் புத்தகம் கிழியும் அளவுக்கு வாய்தா மேல் வாய்தா வாங்கியே காலத்தை ஓட்ட முடியும் என்பதை இவர்களுக்கு எடுத்துச் சொல்ல சட்ட மேதைகள் எவரும் கிடைக்கவில்லை போலிருக்கிறது. இத்தனை மாற்றங்களுக்கு மத்தியிலும் மன்மோகன் அரசுக்கு எதிரான ஒரு கட்சிகூட பாரதிய ஜனதாவின் தேசிய ஜனநாயக  கூட்டணியை பலப்படுத்த முன்வரவில்லை. ஆக, எந்த கோணத்தில் பார்த்தாலும் காங்கிரஸ் இதுவரை கண்டிராத சோதனையாக எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. அமைச்சரவை மாற்றம், தெலங்கானா உதயம், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி இணைப்பு என அடுத்தடுத்து வரவிருக்கும் அறிவிப்புகள் ஐமுகூ அரசை கரை சேர்த்து விடும் போலிருக்கிறது.




நன்றி: Dinakaran 

Thursday, 20 September 2012

மம்தா பானர்ஜி எடுத்த முடிவு


மம்தா பானர்ஜி முடிவு எடுத்து விட்டார். முன்பே எடுத்திருக்க வேண்டிய முடிவு என்று அவரது கட்சி தலைவர்கள் இப்போது வெளிப்படையாக பேசுகிறார்கள். எப்போதுமே எடுத்திருக்க கூடாத முடிவு என்று நண்பர்களிடம் மட்டும் மனம் திறந்து சொல்பவர்களும் மம்தாவின் திருணாமுல் காங்கிரஸ் கட்சியில்  இருக்கிறார்கள். மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இருந்து மம்தா கட்சி விலகும் என்பது எதிர்பாராத செய்தி அல்ல. தனிப்பெரும்பான்மை இல்லாத காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு வெளியில் இருந்து  ஆதரவு கொடுப்பார் என பேச்சு அடிபட்டது. அப்படி ஆதரிக்க போவதில்லை என்று அறிவித்துள்ளது ஆச்சரியம் தருகிறது. ஆதரவை வாபஸ் பெறுவதாக கூறிவிட்டு, தனது அமைச்சர்கள் ராஜினாமா கடிதங்களை பிரதமரிடம் கொடுப்பதற்கு வெள்ளிக்கிழமை வரையில் மம்தா அவகாசம் கொடுத்திருப்பது இன்னும் புதிராக இருக்கிறது. தனக்கும் தனது கட்சிக்கும் மத்திய அரசில் ஒரு மரியாதையும் தரவில்லை என்று மம்தா குற்றம் சாட்டுகிறார். காங்கிரசின் தந்திரங்கள் எல்லாம் தனக்கு தெரியும் என்றும், ஆனாலும் மத்திய அரசால் இன்னும் ஆறு மாதங்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாது என்றும் அவர் கூறியிருப்பது அடிமனதில் தேங்கியிருந்த கசப்பை பிரதிபலிக்கிறது. அதை பார்க்கும்போது அமைச்சர்களின் ராஜினாமா கடிதங்களை ஃபேக்சிலேயே அனுப்ப சொல்லியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். காங்கிரஸ் வட்டாரங்களில் கலக்கம் தெரியவில்லை. முலாயம் சிங், மாயாவதி, லாலு பிரசாத் ஆகியோர் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதால் அரசுக்கு ஆபத்தில்லை என்பது முக்கிய காரணம். நீண்டநாள் தலைவலி தீர்ந்தது என்ற நிம்மதி அடுத்த காரணம். டீசல் விலை உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுத்த அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் பேசும்போது 'போராடி தோற்றோம் என்றாவது  வரலாறு சொல்லட்டும்' என்று குறிப்பிட்டது மம்தாவின் மாதாந்திர மிரட்டல்களை மனதில் கொண்டுதான் என நம்புவதற்கு முகாந்திரம் இருக்கிறது.எதிர்க்கட்சிகளை விடவும் மம்தாவுக்கு பயந்துதான் முடிவுகளை கைவிட வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு இருந்தது. அதிலிருந்து விடுதலை கிடைத்துவிட்டதா அல்லது இது வேறு நிர்ப்பந்தங்களுக்கான தொடக்கமா என்பதை விரைவில் பார்ப்போம்.





நன்றி: Dinakaran 

Tuesday, 18 September 2012

ஆள் இல்லாத தீவு யாருக்கு சொந்தம்


ஆள் இல்லாத தீவு யாருக்கு சொந்தம் என்பதில் சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே நடக்கும் பலப்பரீட்சை மோசமான கட்டத்தை நோக்கி நகர்வதாக தோன்றுகிறது. கிழக்கு சீன கடலில் உள்ள 5 தீவுகள் செங்காக்கு என அழைக்கப்படுகின்றன. சிறியது 800 சதுர மீட்டர், பெரியது 4.32 சதுர கிலோமீட்டர் பரப்புள்ளது. அவற்றில் யாரும் வசிக்கவில்லை. 1945 முதல் 72 வரை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் ஜப்பானியருக்கு கொடுக்கப்பட்டது. சீனாவும், தைவானும் ஏற்கனவே உரிமை கொண்டாடின. என்றாலும் பிரச்னை பெரிதாக வெடிக்கவில்லை. தீவுகளை சுற்றிலும் உள்ள கடலுக்கு அடியில் எண்ணெய், எரிவாயு என்று இயற்கை வளம் குவிந்திருப்பதாக செயற்கைக்கோள் மூலம் எடுத்த படங்கள் காட்டுகின்றன. இதன் காரணமாகவும், சீனா பெரிய வல்லரசாக வளர்ந்துவிட்டதாலும் இப்போது விவகாரம் சிக்கலாகி இருக்கிறது. ஜப்பான் அரசு இந்த தீவுகளை தனிநபர்களிடம் இருந்து விலைக்கு வாங்கிய தகவல் வெளியானதும் தீ பற்றிக் கொண்டது. சீனாவில் உள்ள ஜப்பானியர்கள் மிரட்டப்படுகின்றனர். பிரபலமான ஜப்பானிய கம்பெனிகளின் சீன அலுவலகங்கள்  தாக்கப்படுகின்றன. 'எங்கள் தீவுகளை திருப்பி கொடு' என ஜப்பானிய தூதரகங்கள் முன்பு கோஷம் போட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி அழுகிய முட்டையும் தக்காளியும் வீசுகின்றனர்.  சீன அரசு இந்த போராட்டத்தை ஆதரிப்பது வெளிப்படையாக தெரிகிறது. ஜப்பான் , சீனா இடையே சென்ற ஆண்டு நடந்த வர்த்தகம் 34,500 கோடி டாலர் அளவிலானது. அவ்வளவும் பாதிக்கும் என தெரிந்தும் சீனா தன் பிரஜைகளை உசுப்பிவிட இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் பத்தாண்டுகளுக்கு ஒரு முறை செய்யப்படும் மாற்றம் அடுத்த மாதம் நடக்க இருக்கிறது. அதையொட்டி மக்கள் மனதில் தேசிய உணர்வுகளை தூண்டிவிட்டால் சாதகமான தீர்மானங்களை கொண்டுவர வழி கிடைக்கும் என சில முக்கிய தலைவர்கள் திட்டமிட்டு இருக்கலாம். ஆனால், இந்தியா மாதிரி போராட்டங்களுக்கு பழக்கப்படாத ஒரு நாட்டில் பொதுமக்களை அரசாங்கமே தூண்டிவிட்டால் அப்புறம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு விபரீதமும் நிகழலாம் என்பது அங்கே எத்தனை பேருக்கு தெரியும்?




நன்றி: Dinakaran

மக்கள் காதில் பூ


டீசல் விலை உயர்வை  காரணம் காட்டி லாரி வாடகையை 15 சதவீதம் உயர்த்துவதாக அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கும் இதற்கும் சம்பந்தம் இருப்பதாக தெரியவில்லை. அமைப்பின் பெயர் அப்படி வைத்திருக்கிறார்கள். இதை அறியாதவர்கள் லாரி வாடகை உயர்வுக்காகவும் காங்கிரசை கண்டித்து அறிக்கை விடக்கூடும். இந்த அமைப்பின் மேற்பார்வையில் 80 லட்சம் லாரிகள் ஓடுகிறதாம். தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கமும் கட்டண உயர்வை அறிவித்துள்ளது. பயண தூரத்தை பொருத்து ரூ. 20 முதல் ரூ. 40 வரை உயர்த்தியுள்ளனர். ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணங்களும் ஏற்றப்பட்டுள்ளன. சென்னை நகரில் ஓடும் 70 ஆயிரம் ஆட்டோக்களில் பத்தாயிரம் மட்டுமே டீசலில் இயங்குபவை. குறைந்தபட்சம் 20 ரூபாய் உயர்த்தி இருப்பதாக டிரைவர்கள் சங்கம் தெரிவிக்கிறது.

மூலப்பொருள் விலை உயரும்போது அதை பயன்படுத்தி உற்பத்தியிலோ சேவையிலோ ஈடுபடுபவர்கள் அதற்கான விலை அல்லது கட்டணத்தை உயர்த்துவது தப்பில்லை. ஆனால் அந்த உயர்வில் ஒரு நியாயம் இருக்க வேண்டும். பெட்ரோலைவிட டீசல் விலை குறைவு. ஆனாலும் டீசலில் இயங்கும் ஆட்டோக்கள் பெட்ரோல் ஆட்டோவுக்கு நிகரான கட்டணமே வசூலிக்கின்றன. சொல்லப்போனால் பயணிகளுக்கு இரண்டு வகை ஆட்டோக்களுக்கும் எந்த வித்தியாசமும் தெரியாது. பெட்ரோல் விலை உயரும்போது டீசல் ஆட்டோவுக்கும் சேர்த்து கட்டணம் உயர்த்துகின்றனர். இப்போது அதே போல டீசல் விலையை காரணம் காட்டி பெட்ரோல் ஆட்டோக்களும் கட்டணத்தை உயர்த்தி விட்டன. ஆம்னி பஸ் சங்கம் கூறும் கணக்குப்படி, டீசல் விலை உயர்வால் ஒரு பஸ்ஸுக்கு ரூ. 900 கூடுதலாக செலவாகும்.  ஆனால் கட்டண உயர்வால் 1200 ரூபாயாவது கூடுதலாக கிடைக்கும். ஆக, மத்திய அரசால் இவர்களுக்கு குறைந்தபட்சம் 300 தினசரி கூடுதல் லாபம்.  விலை, வரி, கட்டணம் எது உயர்ந்தாலும் அந்த சுமையை மக்கள் தலையில் ஏற்றிவைப்பது வாடிக்கையாகி விட்டது. அதன் பிறகு அப்பாவிகள் போல டீசல் விலை உயர்வை எதிர்த்து போராட்டம் அறிவித்து மக்கள் காதில் பூ சுற்றுவது நல்ல வேடிக்கை.




நன்றி: Dinakaran 

மனநலம் பாதித்தவர்களின் மனித உரிமைகள்


மாற்றுத் திறனாளிகளில் பரிதாபத்துக்கு உரியவர்கள் மனநலம் பாதித்தவர்கள். தனியாக ரூமில் அடைத்தும், சங்கிலியால் போட்டு கட்டியும் வைத்திருப்பார்கள். மனநல மருத்துவமனைகளிலும் இவர்களுக்கு இந்த கதிதான். இனி இது மாறும். இதற்கான மசோதாவை மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. மனநலம் பாதித்தவர்களின் மனித உரிமைகளை யாரும் மதிப்பதில்லை. வீட்டில் இருந்தாலும் அல்லது அதற்கான சிகிச்சை மையங்களில் இருந்தாலும் அவர்களுக்கு மொட்டை போட்டு விடுவார்கள். சீருடை அணிவித்து விடுவார்கள். கொஞ்சம் முரட்டுத் தனமாக நடந்து கொண்டாலும் உடனே இரும்பு சங்கிலி போட்டு கம்பத்தில் கட்டி வைத்து விடுவார்கள். ஏர்வாடியில் கடந்த 2001ல் ஏற்பட்ட தீ விபத்தில் இப்படி கட்டிப் போடப்பட்ட 20 நோயாளிகள்தான் தீயில் கருகி பலியானார்கள். புதிய விதிமுறைகளின்படி, மனநல சிகிச்சை மையங்கள் நோயாளிகளுக்கு சந்தோஷ அனுபவமாக மாறப்போகிறது. நோயாளிகள் ஓய்வு எடுக்கவும், பொழுது போக்கவும், படிக்கவும், வழிபடவும் வசதிகள் கிடைக்கும். யாரையும் கட்டாயப்படுத்தி வேலை வாங்க முடியாது. பிரியப்பட்டு வேலை பார்ப்பவர்களுக்கும் உரிய சம்பளத்தை தர வேண்டும். மொட்டை போட முடியாது. நோயாளிகள் தாங்கள் விரும்பிய ஆடைகளை அணிந¢து கொள்ளலாம். சீருடை தேவையில்லை. தனி அறையில் போட்டு அடைத்து வைக்கவோ, சங்கிலி போட்டு தூணில் கட்டி வைப்பதோ கூடாது. நோயாளிகளுக்கு ஷாக் ட்ரீட்மென்ட் சிகிச்சை அளிக்கும்போது கூட, மயக்க மருந்து கொடுக்காமல் செய்ய தடை வருகிறது. விதிமுறை மீறல் நடந்தால், சிகிச்சை மையத்தின் மருத்துவ அதிகாரி அல்லது மனநல மருத்துவர்தான் பொறுப்பு ஏற்க வேண்டும். இதுபோன்ற கடுமையான விதிமுறைகள், ஏற்கனவே அனைத்து சுகங்களையும் இழந்து தவிக்கும் மனநலம் பாதித்தவர்களுக்கு ஆறுதலாக இருக்கப் போகிறது. இந்தியாவில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மனிதர்களாகவே மதிப்பது கிடையாது. குடும்ப உறுப்பினர்களே அவர்களை ரயிலில் ஏற்றி கண்காணாத இடத்தில், கொண்டுபோய் விட்டுவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். தமிழகத்தில் திரியும் ஏராளமான வடமாநில நோயாளிகள் பலர் அப்படி அனாதையாக விடப் பட்டவர்கள்தான். புதிய சட்டம் அமலுக்கு வந்தால் இந்த பரிதாப நிலைமை மாறும் என நம்பலாம்.





நன்றி: Dinakaran 

Monday, 17 September 2012

சிங்கம் களம் இறங்கிடுச்சி...


சாது மிரண்டால் நாடு தாங்காது என்று நிரூபிக்க மன்மோகன் சிங் முடிவு எடுத்துவிட்டார் போலிருக்கிறது. டீசல் விலையை  உயர்த்தியதால் உருவான புயல் கரையை கடப்பதற்குள் அடுத்தடுத்த சூறாவளிகளை ஏவியிருக்கிறார். வெளிநாட்டு கம்பெனிகள் இந்தியாவில் சிங்கிள் பிராண்ட் சூப்பர் மார்க்கெட் தொடங்கலாம்; மல்ட்டி பிராண்ட் சூப்பர் ஸ்டோர் திறக்கலாம்; விமான போக்குவரத்து, ஒளிபரப்பு துறைகளில் முதலீடு செய்யலாம்; முக்கியமான பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்கலாம் என்று அதிரடியாக பல முடிவுகளை மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுத்திருக்கிறார். எதுவும் புதிய யோசனை அல்ல. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முந்தைய ஆட்சியிலேயே பேசப்பட்ட திட்டங்கள். எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி கூட்டணியில் உள்ள சில கட்சிகளும் கடுமையாக ஆட்சேபித்ததால் கிடப்பில் போடப்பட்டிருந்தன. எதிர்பார்த்து காத்திருந்த முதலீட்டாளர்கள் , நுகர்வோருக்கு 'பொறுங்கள், காலம் கனியட்டும்' என்றும்; எதிர்ப்பாளர்களுக்கு 'உங்களை மீறி  செய்துவிடுவோமா, என்ன' என்றும் வெவ்வேறு சிக்னல் கொடுத்தபடி போய் கொண்டிருந்த மத்திய அரசு திடீரென்று சிலிர்த்து எழுந்திருக்கிறது. காரணம் என்ன? முறைகேடு புகார்கள் முடிவின்றி வருகின்றன.

பொருளாதார வளர்ச்சி பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. எந்த முடிவும் எடுக்க முடியாத பலவீனமான பிரதமர் என்று ஊடகங்கள் கோரஸ் பாடுகின்றன. அடுத்த தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்குவதுதான் புத்திசாலித்தனம் என்று கட்சிக்குள்ளேயே முணுமுணுப்பு கிளம்பியது. இதே நிலை தொடர்ந்தால் சர்வதேச அளவில் இந்தியாவின் செல்வாக்கு மங்கும்; அதனால் முதலீடுகள் பின்வாங்கலாம் என்று முன்னணி தொழில் நிறுவனங்கள் கவலைப்பட்டன. 'பொறுத்தது போதும் பொங்கி எழுவோம். போராடி தோற்றோம் என்ற பெருமையாவது மிஞ்சட்டும்' என்று காங்கிரஸ் மேலிடம் கருதியிருக்கலாம். விளைவாக பிரதமருக்கு வேகத்தடை விலக்கப்பட்டுள்ளது. பொருளாதார சீர்திருத்தம் மட்டுமே வளர்ச்சிக்கு வழி என்ற நம்பிக்கை இம்மியும் குறையாத மன்மோகன் சிங்கத்தின் பின்னால் காங்கிரஸ் அணி திரண்டிருக்கிறது.எதிரிகளையும் அவர்களைவிட தீவிரமாக எதிர்க்கும் நண்பர்களையும் சமாளித்து சிங் அணி வெற்றி பெறுமா என்பது சீக்கிரம் தெரிந்துவிடும்.






நன்றி: Dinakaran 

முன்பதிவு - போகாத ஊருக்கு வழி


பொங்கலுக்கு சொந்த ஊர் செல்வதற்காக ரயிலில் டிக்கட் முன்பதிவு செய்ய விரும்பிய தென் மாவட்டங்களை சேர்ந்த சென்னைவாசிகள் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள். ஜனவரி 11ம் தேதி பயணத்துக்கான டிக்கெட்டுகள் எல்லாம் நேற்றே செப்டம்பர் 13  தீர்ந்துவிட்டது. 120 நாட்கள் முன்னதாக பதிவு செய்யலாம் என்பதால் அடுத்தடுத்த நாட்களுக்கான டிக்கெட்டுகள் இன்றும் நாளையும் விற்று தீரும். மோசமான சாலைகள், தாறுமாறான ஆட்டோ கட்டணம், கூவத்தின் நறுமணம் போல பண்டிகைக்கால ரயில் பயண முன்பதிவும் சென்னையில் வசிக்கும் மக்களுக்கு சலிப்பூட்டும் அவதியாக உருவெடுத்து வருகிறது. உண்மையில் என்னதான் நடக்கிறது என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் யாரும் மவுனம் கலைக்க தயாராக இல்லை. விழாக்கால விடுமுறை நாட்களுக்கான முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் அத்தனை டிக்கெட்களும் விற்று தீர்ந்து விட்டதாக அறிவிக்கப்படுகிறது. ஆனால் தனியார் பயண ஏற்பாடு நிறுவனங்களை கடைசி நேரத்தில் அணுகினால்கூட நமது பெயரிலேயே பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டை பெற்றுத் தருகிறார்கள். ரயில்வே அதிகாரிகள், ஊழியர்களின் ஒத்துழைப்பின்றி இது சாத்தியமில்லை. முறைகேடுகளை தடுக்கும் நோக்கத்துடன் அறிமுகம் செய்யப்பட்ட கம்ப்யூட்டரைஸ்ட் ரிசர்வேஷன் முறை வெற்றி பெறவில்லை.

அரசு விரைவு பேருந்து கழகங்கள், மாவட்ட  போக்குவரத்து கழகங்கள் ஆகியவையும் சிறப்பு பேருந்துகளை இயக்குகின்றன. ஆனால் அவை முன்கூட்டியே திட்டமிடுவது கிடையாது. பண்டிகைக்கு சில நாட்கள் முன்னதாக அறிவித்து டிக்கெட் முன்பதிவை தொடங்குகின்றனர். சிறப்பு ரயில்கள் விஷயத்தில் அந்த அளவுக்கு தாமதம் இல்லை. ஆனால் விடப்படும் ரயில்களின் எண்ணிக்கை போதுமானதாக இருப்பதில்லை. இந்த குளறுபடியால் ஆதாயம் அடைவது தனியார் ஒப்பந்த பேருந்து நிறுவனங்கள். மூன்று அல்லது நான்கு மடங்கு கூடுதலாக வசூலிக்கின்றன. குடும்பத்துடன் பண்டிகை கொண்டாடுவதற்காவது மக்களுக்கு தேவையான போக்குவரத்து வசதியை செய்துகொடுப்பதைவிட ஒரு அரசுக்கு வேறு வேலை இருக்க முடியாது. உரிய கட்டணம் செலுத்தி எங்கும் எப்போதும் பயணம் செய்யலாம் என்ற நிலை ஏற்படாதவரை நாடு முன்னேற்றப் பாதையில் செல்கிறது என்பது உண்மைக்கு மாறான பிரசாரமாகவே இருக்கும்.





நன்றி: Dinakaran

இதுதான் விதிமுறை


எந்த நாட்டில் இருக்கிறோமோ அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு ஏற்றபடிதான் தொழில் செய்ய முடியும். இதுதான் வழக்கம். ஆனால் நிறுவனங்களே தங்கள் இஷ்டத்துக்கு ஏற்ப விதிமுறைகளை மாற்றிக் கொள்ள நினைப்பது பிரச்னையைத்தான் ஏற்படுத்தும். சமீபத்திய உதாரணங்கள் எஸ்பிஐ வங்கி, மெக்டொனால்ட்ஸ். வங்கிகள் பொது மக்களிடமிருந்து டெபாசிட் வசூலிப்பதால் சிஆர்ஆர் என்ற பெயரில் குறிப்பிட்ட சதவீத பணத்தை ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்க வேண்டும். இதற்கு வட்டி கிடையாது. இன்சூரன்ஸ் நிறுவனங்களும், நிதி நிறுவனங்களும் இதுபோல்தான்  மக்கள் பணத்தை நிர்வாகம் செய்து வருகின்றன, ஆனால் அவற்றுக்கு இதுபோன்ற கட்டுப்பாடுகள் இல்லை, வங்கிகளுக்கு மட்டும் ஏன் இப்படி என எஸ்பிஐ தலைவர் போர்க் கொடி தூக்கினார். இதற்கு பதில் அளித்த ரிசர்வ் வங்கி துணைத் தலைவர், இந்தியாவில் இதுதான் விதிமுறை. அதற்கு கட்டுப்பட்டு தொழில் செய்வதாக இருந்தால் செய்யட்டும். இல்லாவிட்டால் வேறு எங்காவது  தொழில் செய்யட்டும் என காரசாரமாகவே பதில் அளித்தார். 

பாகிஸ்தானில் மெக்டோனால்ட்ஸ் பாகிஸ்தான் என்ற பெயரில் பன்னாட்டு உணவகம் திறக்கப்பட்டுள்ளது. கராச்சியில் உள்ள இந்த உணவகத்துக்கு சமீபத்தில் ஒருவர் தன் மனைவியுடன் சென்றுள்ளார். அருகருகே அமர்ந்து, மனைவியின் சேர் மீது கையை போட்டபடி உட்கார்ந்திருந்தார். அங்கிருந்த ஊழியர், ஜோடியாக வரும் ஆண், பெண் அருகருகே உட்கார அனுமதியில்லை என்றும் எதிரெதிர் சீட்டில்தான் அமர வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். தாங்கள் கணவன், மனைவிதான், காதலர்கள் அல்ல என வந்தவர் சொல்லியும் ஊழியர் கேட்கவில்லை. குடும்பத்தினர் வரும் உணவகம் என்பதால், தம்பதியாக இருந்தாலும் சரி, அருகருகே அமர அனுமதி கிடையாது, இது நிறுவனத்தின் கொள்கை என்றும் விளக்கம் சொல்லியிருக்கிறார். மேனேஜரை கூப்பிடுங்கள், அவரிடம் கேட்போம் என சாப்பிட வந்தவர் கூற, அவர்களும் இதையே சொல்லியிருக்கிறார்கள். 

வெளிநாடுகளில் விதிக்கப்படும் விதிமுறைகளை அப்படியே ஏற்றுக் கொள்ளும் அதே நிறுவனங்கள் இந்தியாவில் மட்டும் பின்பற்ற எதிர்ப்புக் காட்டுவது இருக்க இடம் கொடுத்தால் படுக்க இடம் கேட்பது போல் உள்ளது.



நன்றி: Dinakaran 

கார்ட்டூன் கருத்து சுதந்திரம் எதுவரை?


கார்ட்டூன் வரைந்ததற்காக அன்னா ஹசாரே குழுவின் முக்கிய புள்ளியான அசீம் திரிவேதி தேச துரோக குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  மும்பை வழக்கறிஞர் அவர் மீது புகார் கொடுத்திருக்கிறார். அன்னா பிரசாரம் செய்தபோது அசீமின் கார்ட்டூன்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டு இருந்தன. ஒரு கார்ட்டூனில் நாடாளுமன்றம் மலம் கழிப்பிடமாகவும் எம்.பி.க்கள் அதை மொய்க்கும் ஈக்களாகவும் ஓட்டுச்சீட்டு கழிவை துடைக்கும் பேப்பராகவும் சித்தரிக்கப்பட்டு இருந்தது. அடுத்ததில் அசோகர் தூண் மீது மூன்று சிங்கங்களுக்கு பதில் நாக்கை தொங்கவிட்டு ஓநாய்கள் நிற்கின்றன. மூன்றாவது படத்தில் பாரத மாதாவை  அரசியல்வாதி, அதிகாரி, ஊழல் பேய் ஆகிய மூவரும் பலாத்காரம் செய்வதாக சித்தரித்துள்ளார். 'சீக்கிரம் முடி' என்று அரசியல்வாதி அவசரப்படுத்துகிறார். மற்றொரு கார்ட்டூனில் இந்திய அரசியல் சாசனம் மீது அஜ்மல் கசாப் சிறுநீர் கழிக்கிறான். இவை தவிர தேசிய பறவை, விலங்கு, 'சத்யமேவ ஜெயதே' ஆகியவற்றையும் மாற்றியிருக்கிறார். 'என் தாய்நாட்டின் தேசிய சின்னங்களையும் அடையாளங்களையும் புனிதமான அரசியல் சாசனத்தையும் அசீம் அசிங்கப்படுத்தி விட்டார்.  என் மனம் புண்பட்டிருக்கிறது' என வழக்கறிஞர் அமித் அரவிந்த் புகாரில் கூறியுள்ளார். 'கார்ட்டூன் என்றால் கேலிச் சித்திரம். யாரையும் எப்படியும் கேலி செய்ய கார்ட்டூனிஸ்டுக்கு சுதந்திரம் இருக்கிறது. ஊழலை தடுக்காமல் அதை விமர்சனம் செய்பவர்களை ஒடுக்குவதா?' என்று சுதந்திர சிந்தனையாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். நரேந்திர மோடியை, மம்தாவை கிண்டலடித்த கார்ட்டூனிஸ்டுகளுக்கு மட்டுமல்ல; பாரத மாதாவை தவறாக சித்தரித்ததாக ஓவியர் எம்.எஃப்.உசேனுக்கும் சிக்கல் எழுந்தது. சட்ட அடிப்படையில் அமைந்த உரிமைகளுக்கு நம்பிக்கையின் அடிப்படையிலான உணர்வுகள் எந்த வகையிலும் மதிப்பு குறைந்தவை அல்ல என்பதை உணர்ந்த மிதவாத படைப்பாளிகள் இது போன்ற விவகாரங்களில் சிக்குவதில்லை. இந்தியாவில் செய்தியாளர்கள் மிகவும் செல்வாக்கு மிகுந்த ஜாதி. எனவே அசீம் சீக்கிரம் வெளியே வந்துவிடுவார். வழக்கும் காலாவதி ஆகிவிடும். இருப்பினும், கருத்து சுதந்திரம் எல்லையற்றதா அல்லது வரையறைகளுக்கு உட்பட்டதா என்பதை  விவாதித்து முடிவெடுக்க கிடைத்த இன்னொரு சந்தர்ப்பமாக  இதை பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம்.






நன்றி: Dinakaran 

தீர்ப்புகளில் நியாயம்


கொலை, கொள்ளை வழக்குகளுக்கும் குடும்ப கோர்ட் வழக்குகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது. முன்னதில் எப்படியாவது தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என வாதாடுவார்கள். பின்னதில், யாருக்கும பாதிப்பு இல்லாமல், சமாதானமாக போக வேண்டும் என வாதாடுவார்கள். நீதிபதிகளுக்கும் அங்கு வேறு விதமான சூழல்தான். கர்நாடகா உயர் நீதிமன்றத் தில் பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக கூறி, ஒரு நீதிபதியின் வழக்குகள் அனைத்தையும் வேறு நீதிபதிக்கு மாற்றியுள்ளது நீதிமன்றம்.

முதல் வழக்கு: கணவன், மனைவி இருவரும் சாப்ட்வேர் இன்ஜினியர்கள். ஒரு குழந்தை இருக்கிறது. இருவருக்கும் கருத்து வேறுபாடு. பிரிந்து விடலாம் என முடிவு செய்து கோர்ட் படியேறி விட்டார்கள். அந்த வழக்கை விசாரித்திருக்கிறார் நீதிபதி பக்தவத்சலா. கணவன் குழந்தையையும் மனைவியையும் நன்றாகவே பார்த்துக் கொள்வது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. ஆனால் கணவன் தன்னை அடித்து துன்புறுத்துவதாக புகார் தெரிவித்து, விவாகரத்து கேட்டிருக்கிறார் மனைவி. உன்னையும் குழந்தையையும் கணவன்தான் நன்றாக பார்த்துக் கொள்கிறாரே… ஏன் உன்னை அடித்ததையே பேசிக் கொண்டிருக்கிறாய்… சேர்ந்து வாழ வழியைப் பார் என நீதிபதி சொன்னதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது. 

இரண்டாவது வழக்கு: ஒரு விவாகரத்து வழக்கில் இளம் பெண் வக்கீல் ஒருவர் வாதாடியிருக்கிறார். திருமணம் ஆகாத உனக்கு குடும¢பத்தை பற்றி என்ன தெரியும்? இந்த வழக்கில் வாதாட உனக்கு தகுதி இல்லை என பக்தவத்சலா சொன்னதாகவும் செய்தி வெளியானது. அவ்வளவுதான் பெண்கள் அமைப்புகள் கொந்தளித்து விட்டன.

மனைவியை அடிப்பதை யாராவது நியாயப்படுத்துவார்களா? ஒரு குடும்பம் பிரிந்து விடக் கூடாதே என்ற எண்ணத்தில், பழசெல்லாம் மறந்து சேர்ந்து வாழ வேண்டும் என்று சொன்னேன். அதைத்தான் பத்திரிகைகள் வேறு மாதிரி புரிந்து கொண்டன என்கிறார் நீதிபதி பக்தவத்சலா. குடும்ப நீதிமன்றங்களில் சட்டப்படி மட்டுமே வழக்கை பார்க்காமல், நியாயமாகவும் ஆராய்ந்து அறிவுரை சொல்வார்கள். ஊர் பெரியவர் அந்தஸ்தில் தீர்ப்பு அளிப்பார்கள். அதனால் தீர்ப்புகளில் நியாயம் இருக்கும். எந்த தரப்பும் பாதிக்கக் கூடாது என்ற அக்கறை இருக்கும். அது சில நேரங்களில் தப்பாக தெரியும். இந்த விவகாரத்திலும் அப்படித்தான் ஆகியிருப்பதாக தெரிகிறது.





நன்றி: Dinakaran 

Sunday, 9 September 2012

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 150


இன்றுடன் நூற்று ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்யும் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு தமிழ்நாட்டில் வசிக்கும் அனைத்து குடிமக்களும் மனதார வாழ்த்து கூறுவார்கள்.  ஆங்கில பெயரை தமிழாக்கம் செய்ததால்  தலைநகரின் பெயர் சென்னை என்று ஆனதே தவிர, இந்த பழம்பெரும் நீதிமன்றம் இன்னும் 'மெட்ராஸ் ஹைகோர்ட்' என்றே அதிகாரபூர்வமாக அழைக்கப்படுகிறது. பெயரில் என்ன இருக்கிறது, எப்படி வாழ்ந்தான் என்பதுதான் முக்கியம் என மனிதர்களுக்கு சொல்வது அமைப்புகளுக்கும் பொருந்தும். அந்த வகையில் நாடாளுமன்றம், அரசு, நீதிமன்றம் ஆகிய ஜனநாயக தூண்களின் செயல்பாடு எப்படி என்பதை கவனிக்க வேண்டும். அரசாங்கம் பற்றி சொல்ல வேண்டியதில்லை. ஒன்று சரியில்லை என்பதால் இன்னொன்று என்று மக்கள் சளைக்காமல் மாற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள். மாற்று குறைவாக இருக்கிற காரணத்தால் அவர்கள் எதிர்பார்க்கும் மாற்றம் கானல்நீராக ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத்தை செயல்பட விடாமல் முடக்கும் முயற்சியில் மாற்றுக் கட்சியாக தங்களை அடையாளம் காட்டிக் கொள்ள விரும்புபவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். மீதமுள்ள நீதிமன்றம் மட்டுமே எல்லா விதமான எதிர்ப்பு மழைக்கும் விமர்சன வெயிலுக்கும் ஈடுகொடுத்து கம்பீரமாக நின்றுகொண்டிருக்கிறது. அதிலும் நமது சென்னை உயர் நீதிமன்றம் இத்தனை ஆண்டுகளில் சேகரித்து வைத்துள்ள  தனிச் சிறப்புகள் ஏராளம். பொதுவாக தென்னக மக்கள் சட்டத்தை மதிப்பவர்கள். செக்கிங் இல்லாத ரயில் என்றாலும் டிக்கெட் வாங்காமல் ஏற மாட்டார்கள். நீதிக்கு தலை வணங்குபவர்கள். 'பெரியவர் சொல்லிவிட்டால் அப்பீலே கிடையாது' என்று கிராமங்களில்கூட ஒரு நியாயவானை நீதிபதிக்கு ஒப்பாக ஒருவரை உயரத்தில் வைத்திருப்பார்கள். இந்த பாரம்பரியம் இருப்பதால் ஏனைய உயர் நீதிமன்றங்களை போல இங்கே மேல்முறையீடுகள் அதிகமில்லை. தீர்ப்பு மீதான விமர்சனங்களும் குறைவு. சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள  முதலமைச்சர் நீதிமன்ற விழாவில் பங்கேற்பது நியாயமா என்ற கேள்வி பெரிதாக எதிரொலிக்காமல் போனதற்கு காரணம், நீதிபதிகள் மீது தமிழக மக்களும் வழக்கறிஞர்களும் கொண்டுள்ள அபார நம்பிக்கை. அடுத்த நூற்றாண்டுகளிலும் இந்த நம்பிக்கை நீடித்து நிலைக்க சம்பந்தப்பட்ட அனைவரும் பங்களிக்க வேண்டும்.




நன்றி: Dinakaran 

ஆயிரம் வார்த்தைகளை காட்டிலும் எனது மவுனம் மேலானது


வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் பிரதமரை விமர்சனம் செய்திருப்பது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. போஸ்ட் வெளியிட்ட கட்டுரை எந்த பரபரப்பையும் உருவாக்கவில்லை. அதற்கு மறுப்பு தெரிவிக்க பிரதமர் அலுவலகம் காட்டிய அவசரம் ஆச்சரியமாக கவனிக்கப்பட்டது. திறமையற்றவர், ஊழல் அரசுக்கு தலைமை தாங்குகிறார், முனைப்பு இல்லாதவர் என்று பிரதமரை வர்ணிக்கிறார் போஸ்டின் டெல்லி நிருபர் சைமன் டென்யர். டைம் வார இதழும் இதே மாதிரி விமர்சனத்தை முன்வைத்து மன்மோகன் படத்தை அட்டையில் பிரசுரித்தது. இரண்டு அமெரிக்க பத்திரிகைகளும் இந்திய பிரதமரை குறை சொல்லி எழுதியதால் சர்வதேச அளவில் ஒரு அதிர்வும் உண்டாகவில்லை. 'அய்யோ, மன்மோகன் அப்படிப்பட்டவரா' என்ற அதிர்ச்சியில் எந்த நாடும் இந்தியாவுடன் உறவையோ வர்த்தகத்தையோ துண்டிக்கவில்லை. நாடுகளின் நிதி நிலையை கண்காணித்து மதிப்பெண் வழங்கும் நிறுவனங்கள் இந்தியாவுக்கு மோசமான மார்க் கொடுத்ததற்கே வராத பாதிப்பு வெறும் பத்திரிகை செய்திகளால் ஏற்பட்டுவிடாது. முன்பு பிரதமரின் ஊடக ஆலோசகராக பணியாற்றிய சஞ்சய் பாரு, 'வரவர மன்மோகன் சிங் கேலிப் பொருளாகி விட்டார்' என்று கூறியதாகவும் 'மன்மோகனிடம் அறிவார்ந்த நேர்மை இல்லை' என்று வரலாறு எழுத்தாளர் ராமச்சந்திர குகா சொன்னதாகவும் சைமன் எழுதியுள்ளார். இவர்கள் இருவரும் சில காலம் முன்பு கேரவன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் சொன்ன கருத்தை சைமன் திருடியிருக்கிறார் என பிரதமர் அலுவலகம் தெரிவிக்கிறது. போஸ்ட் இதை மறுக்கவில்லை. அந்த கருத்து கேரவனில் வந்தது என்பதை சைமன் கட்டுரையில் குறிப்பிட்டிருக்க வேண்டும் என ஒப்புக் கொள்கிறது. இது தவறுதான், பெரிய குற்றம் அல்ல. ஆனால் இதே போன்ற தவறுக்காக டைம் இதழும், சிஎன்என் சேனலும் பரீத் ஜகாரியா என்ற பிரபலமான எடிட்டரை சஸ்பெண்ட் செய்தது சமீபத்திய நிகழ்வு. பொருள் திருட்டைவிட கருத்தும் எழுத்தும் திருடப்படுவது சகஜமாகிவிட்டது. எதிர்க்கட்சிகள் ஆக்ரோஷமாக சவால் விடுத்தபோது, 'ஆயிரம் வார்த்தைகளை காட்டிலும் எனது மவுனம் மேலானது' என்று அறிவித்த மன்மோகன் சிங் அமெரிக்க பத்திரிகைகளின் விமர்சனங்களை இவ்வளவு சீரியசாக எடுத்திருக்கவே கூடாது.




நன்றி: Dinakaran

Saturday, 8 September 2012

சிவகாசி பயங்கரம் - எமனுக்கு கொண்டாட்டம்


விமானங்கள் குண்டு மழை பொழியும் போர்க்களத்தில் மனித சடலங்கள் எப்படி உரு தெரியாமல் சிதறிக் கிடக்கும் என்பது தமிழக மக்களுக்கு தெரியாது. போர் முனைகளுக்கு வெகு தூரத்தில் அமைந்திருக்கிறது இந்த அமைதிப் பூங்கா. அதனால்தான் அண்டை நாட்டின் சண்டையில் பார்த்த காட்சிகளின் நேர்த்தியான பதிவுகளாலும் அத்தனை தாக்கத்தை இங்கே ஏற்படுத்த இயலவில்லை. சிவகாசி அருகே புதனன்று நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தின் படத்தொகுப்பு அந்த மெத்தனத்தில் இருந்து தமிழகத்தை உலுக்கி எழுப்பியிருக்கிறது. அணுகுண்டு வெடிக்கும்போது எழும் ராட்சத காளான் புகைக்கு நிகராக விண்ணை நோக்கி எழும் வெண்ணிற, மண்ணிற புகை மண்டலம் ஒன்றே போதும் அங்கு நடந்தேறிய சோகத்தின் உக்கிரத்தை பறைசாற்ற. பட்டாசும் தீக்குச்சியும் சிவகாசிக்கு புதிதல்ல. உரசாமலே பற்றிக் கொள்ளும் பயங்கரத்துக்கு உதாரணமாக அந்த சிற்றூர் பெரிய பெரிய விபத்துகளை சந்தித்து வருகிறது. இயற்கையால் அரைகுறையாக தகனம் செய்யப்பட்ட உயிருள்ள உடல்களை உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்து செல்ல வழியற்ற நிலையில் இன்றுவரை அந்த வட்டாரம் பின்தங்கிய பகுதியாகவே பாதுகாக்கப்படுவது அதிகார வர்க்கத்தின் பொறுப்புணர்வுக்கும் நிர்வாக திறனுக்கும் எடுத்துக்காட்டு. நாட்டின் பட்டாசு உற்பத்தியில் 90 சதவீதம் இங்கு உருவாகிறது. தீப்பெட்டி தொழிலிலும் அச்சுத் துறையிலும் ஆசிய அளவில் முத்திரை பதித்துள்ள ஊர். ஆனாலும் அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளில் ஏழை தொழிலாளர்கள் அநியாயமாக உயிரிழப்பதை தடுக்க அரசாங்கம் உருப்படியான நடவடிக்கை எடுக்கவில்லை.

குறைந்தபட்சமாக உள்ளூர் மருத்துவமனையில் தீக்காயங்களுக்கு தனி வார்டு ஏற்படுத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தனர். அதற்கு 5 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டது. ஆனால் தமிழக அரசு 60 லட்சம் ஒதுக்கியது. அதிலும் பணிகள் நடக்கவில்லை. பெரும் தொகை கேட்டு கட்சிக்காரர்கள் பேரம் பேசுவதால் ஒப்பந்ததாரர்கள் ஓட்டம் பிடிப்பதாக எதிர்க்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் குற்றம் சாட்டுகிறார். வறுமையை சமாளிக்க வேறு வழியின்றி ஆபத்தான தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களை காப்பாற்ற நேர்மையான ஓர் அதிகாரி வரும்வரையில் எமனுக்கு கொண்டாட்டம்தான்.




நன்றி: Dinakaran

பள்ளி வாகன விதிகள்


பள்ளி வாகனங்களுக்கு புதிய விதிகளை தமிழக அரசு வகுத்திருப்பது தாமதமாக இருந்தாலும் வரவேற்க வேண்டிய நடவடிக்கை. ஓட்டை பேருந்தில் பயணம் செய்த சிறுமியின்  மரணத்தை தொடர்ந்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி அரசு 11 விதிகளை வகுத்துள்ளது. டிரைவருக்கு ஐந்தாண்டு அனுபவம் தேவை, அதிவேகம் கவனக்குறைவுக்காக தண்டனை பெறாதவராக இருக்க வேண்டும்; ஓட்டுனர்  உடனிருக்க வேண்டும்; முழுமையாக பரிசோதித்த பிறகே உரிமத்தை புதுப்பிக்கவேண்டும் , போன்ற விதிகளை நீதிபதிகள் படித்து திருப்தி தெரிவித்துள்ளனர்.பெற்றோர் தரப்பில் 'இந்த விதிகள் போதுமானதல்ல' என்ற கருத்து தெரிவிக்கப்படுகிறது. முதல் காரணம், புதிய விதிகள் பேருந்துகளுக்கு மட்டுமானவை. வேன்கள், ஆட்டோக்கள் மூலமும் ஏராளமான குழந்தைகள் பயணிக்கின்றனர். அந்த வாகனங்களுக்கான அரசு குறிப்புகள் இல்லை. பேருந்து பள்ளியின் பெயரில் இருக்கவேண்டும் என்கிறது ஒரு விதி. மாணவ மாணவிகளை சுமப்பது தவிர இதர ப(ய)ணிகளுக்கு அவற்றை பயன்படுத்த தடை விதிக்கவில்லை. பல பள்ளிகள் சொந்த பேருந்து இயக்குவதைவிட ஒப்பந்த அடிப்படையில் வெளியாரை அனுமதிக்க விரும்புகின்றன. மகாராஷ்டிர அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளை எதிர்த்து 'பள்ளிப் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்' வழக்கு தொடர்ந்துள்ளது. அரசின் விதிகள் நடைமுறைக்கு ஒத்துவராது என்று அது மும்பை நீதிமன்றத்தில் வாதிடுகிறது. அநேக நாடுகளில் இந்த பிரச்னை இருக்கிறது. அமெரிக்காவில் ஒரு பள்ளி பேருந்து ஆள் ஏற்ற அல்லது இறக்க சாலையோரம் நிறுத்தப்பட்டால், அது கிளம்பும்வரை மற்ற வாகனங்கள் எல்லாம் பின்னால் காத்திருக்க வேண்டும். போலீஸ், ஆம்புலன்ஸ், தீயணைப்பு சைரன் வண்டி எதுவானாலும். எதிர் திசையில் இருந்து சாலையின் மறுபக்கமாக வரும் வாகனங்கள்கூட வேகத்தை 10 கி.மீ என  குறைக்க வேண்டும். ஒரே ஒரு குழந்தை உட்காராமல் நின்றாலும் வண்டியை டிரைவர் நிறுத்திவிட வேண்டும்.

அனுமதிக்கப்பட்டதற்கு மேல் ஒரு குழந்தை கூடுதலாக இருந்தாலும் பேருந்தை இயக்கக்கூடாது. எல்லாமே பெரும் தொகை அபராதமாக விதிக்கத்தக்க குற்றங்கள். பள்ளிப் பேருந்து மீது கல் வீசினால் ஒரு வருடம் ஜெயில். உயிருக்கு உரிய மதிப்பளிக்கும் அந்த நாடுகளை பார்க்கும்போது ஏக்கமாக இருக்கிறது.



நன்றி: Dinakaran 

இன்னுமொரு கொலை

அரசு அளித்த சைக்கிளில் உற்சாகமாக பள்ளிக்கு சென்று கொண்டிருந்த பிளஸ் 2 மாணவி பெரியநாயகி மீது தண்ணீர் லாரி மோதி, கீழே விழுந்த அந்த 17 வயது பெண் மீது ஏறி உருக்குலைத்து உயிரை பறித்திருக்கிறது. இன்னொரு சைக்கிளில் உடன் சென்று கொண்டிருந்த அவளது தம்பி இந்த கொடுமையை பார்த்து பேச்சிழந்து மயங்கியிருக்கிறான். ஆவடியில் நேற்று நடந்த இந்த சம்பவம் இதே போன்ற இன்னொரு சம்பவம் நடக்கும்வரையில் பேசப்படும். அந்த அளவுக்கு தமிழகத்தில் விபத்துகளின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அதிலும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பரிதாபமான முறையில் விபத்தில் பலியாவது சமீபகாலமாக தொடர்ந்து நடக்கிறது. சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுவது செய்தியாக பரவினாலும் சம்பவங்கள் தொடர்வதை தடுக்க உதவவில்லை. யாருக்கும் பயமில்லை என்பதே காரணம். இதற்கு முன்பும் இந்த நாளிதழ் சுட்டிக் காட்டியதை போல வாகனங்களை பயன்படுத்தி நிகழ்த்தப்படும் கொலைகளுக்கு இந்த நாட்டில் சாதாரண தண்டனை அல்லது அபராதம் மட்டுமே விதிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் டிரைவர் குடிபோதையில் இருந்துள்ளார். சம்பவம் நடந்தது காலை ஏழரை மணி. அந்த நேரத்தில் போதை ஏற்றிக் கொள்பவன் எப்படிப்பட்ட ஆசாமியாக இருப்பான் என்பதை ஊகித்துக் கொள்ளலாம். சைக்கிள் செல்வதற்கு எல்லா நாடுகளிலும் சாலையில் தனி வழி அமைத்திருக்கிறார்கள். வேறு எந்த வாகனமும் அதில் குறுக்கிடக்கூடாது. உடல் நலத்துக்காகவும், புகையை குறைப்பதற்காகவும் அங்கெல்லாம் மாநகராட்சிகள் ஆங்காங்கே இலவச சைக்கிள் ஸ்டாண்டுகள் அமைத்துள்ளன. பிரதமர் சைக்கிளில் அலுவலகம் போகும் நாடுகள் ஐரோப்பாவில் இருக்கின்றன. நடைபாதை என்பதே ஆக்கிரமிப்பு செய்வதற்குத்தான்; நடப்பவர்களுக்காக அல்ல என்ற விதி அமலில் இருக்கும் நமது நாட்டில் அதையெல்லாம் எதிர்பார்ப்பது அதிகம். குறைந்தபட்சம் மக்களின் உயிருக்கு பாதுகாப்பு தர அரசு மனம் வைத்தால் புண்ணியம் கிடைக்கும். ஒவ்வொரு முறையும் உயர் நீதிமன்றம் தலையிட்டு குட்டு வைத்தால்தான் கண் விழிப்பது என்று அரசு எந்திரம் மரத்துப் போனால் ஒவ்வொரு துறையிலும் மெத்தனம் அரியணை போட்டு அமர்வதை யாராலும் தடுக்க முடியாது.




நன்றி: Dinakaran 

Monday, 3 September 2012

தமிழர்கள் இவ்வளவு பழமையானவர்களா?

ஆய்வுகள் வெளிப்படுத்தும் அரிய உண்மைகள் :

தமிழன் என்றாலே கீழானவன். தமிழ் மொழியோ மிகவும் கேவலமான கீழான மொழி என்று கூறப்பட்டு.  தமிழும் தமிழரும் இழிவுபடுத்தப்பட்டு வருவதை நாம் நடைமுறையில் பார்க்கின்றோம். இதனால்தான் தமிழக அரசால் அர்ச்சகர் பயிற்சி பெற்ற 200க்கும் மேற்பட்ட தமிழின அர்ச்சகர்கள்.   அரசு கொடுத்த அர்ச்சகர் சான்றிதழுடன் 'அம்போ' என்று வெளியில் நிற்கின்றனர். தமிழர்கள் கட்டிய தமிழர் சமயக் கோவில்களுக்குள் தமிழுக்கும் இடமில்லை. தமிழனுக்கும் இடமில்லை. இப்படிப்பட்ட கொடுமையான காலத்தில் வாழும் நமக்கு. தமிழினம் மிகவும் பழமையான இனம்.  உலக மொழிகளில் மிகவும் பழமையான மொழி தமிழ் மொழி. உலக மொழிகளை ஆராய்ந்தால் தமிழ்ச் சொற்களும். பெயர்களும் வெவ்வேறு வடிவங்களில் அவற்றில் இருக்கின்றன எனும் புதிய ஆராய்ச்சிக் கருத்துகள் உண்மையில் நம்மை வியக்க வைக்கின்றன.
புதிய இந்த ஆய்வுக் கருத்துகளை நாம் அறிந்து கொள்ளும் முன். நம் நாட்டிலேயே மிகவும் பழமை வாய்ந்த  சிந்துவெளிக்கும் பழந்தமிழருக்குமுள்ள நெருக்கமான உறவை அறிஞர்கள் எடுத்துக்காட்டியுள்ளனரே. இவற்றையாவது முதலில் தெரிந்து கொள்ள வேண்டாமா? அறிஞர்கள் கூறுவது என்ன என்பதைக் காண்போம்.

சிந்துவெளி நாகரிகம்:

சிந்துவெளி நாகரிகம் தமிழரின்/ திராவிடரின் நாகரிகம் என்பதை ஆய்வுகள் பல வெளிப்படுத்தி வருகின்றன.

நான்கு வேதங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒன்றுதான் சிந்துவெளி நாகரிகம் என்றும் அது ஆரியர்களுடையது என்றும் கருதுவோர் பலர் உள்ளனர். ஆனால். சிந்துவெளி நாகரிகம் பற்றிய சர். ஜான் மார்ஷல் செய்த ஆராய்ச்சிக் கருத்துகள் இதற்கு முரணாக உள்ளது.

சிந்துவெளி நாகரிகம் பற்றி அவர் கூறுவன:

1. ஆரியர் நகர  வாழ்க்கை குறித்து அறியாதவர்கள். இதற்கு மாறாக மொஹன்சதாரோ. ஹரப்பாவில் உள்ள மக்கள் நகர வாழ்க்கையில் இருந்தனர்.  நன்கு வசதி பெற்ற செங்கல் வீடுகள் கட்டினர். கிணறு, குளியலறை,  கழிவு நீர் வடிகால் உள்ள வீடுகளால் அவர்கள் நகரம் நிறைந்திருந்தது.

2. ரிக் வேதத்தில் இரும்பு பயன்பாட்டில் இருந்தமை அறியப்படுகிறது.  சிந்துவெளியில் வெள்ளி உபயோகத்தில் இருந்தது.  கற்களால் செய்யப்பட்ட பாத்திரங்கள் பயன்பாட்டில் இருந்தன.  ஆனால் இரும்பு பயன்பாட்டில் இல்லை.

3. வேதங்கள் மூலம் வில், அம்பு, கோடாரி, ஈட்டி போன்ற ஆயுதங்களும் தலைக் கவசங்களும்             பயன்பாட்டில் இருந்தமை அறியப்படுகிறது.  சிந்துசமவெளியில் ஆயுதங்கள் இருந்தன.  ஆனால் தற்காப்புக் கருவிகள் காணப்படவில்லை.
4. மீன் பற்றி வேதங்களில் அதிக அளவில் குறிப்பிடப்படவில்லை. சிந்து சமவெளியில் மீன் அதிக அளவில் உள்ளது.

5. வேதங்களில் குதிரைகள் பயன்பாட்டில் இருந்தமை சுட்டப்பட்டுள்ளது; சிந்துசமவெளியில் குதிரை பற்றிய ஆதாரம் கிடைக்கவில்லை.

6. வேதத்தில் பசுவிற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது; பசுவிற்கு, சிந்துசமவெளியில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை; எருது முக்கிய இடம் பெற்றது.

7. வேதத்தில் புலி பற்றி சொல்லப்படவில்லை; யானை பற்றி மிகச் சிறிதளவே சொல்லப்பட்டுள்ளது.  சிந்துவெளியில் இவை இரண்டும் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன.

8. சிந்துவெளி கடவுளர் கொம்புகளுடன் காட்டப்பட்டுள்ளனர்; ஆனால் வேதங்களில் அப்படி காணப்படவில்லை. (Sir John Marshall. Mohenjo-daro and the Indus Civilization.Vol.I. 1973. Pp.109-112. Mr. I. Mahadevan. Indian Express. August 1994.)
9. சிந்துவெளியில் சிவலிங்கங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை வேதங்களில்           இழிவாகச் சொல்லப்படுகின்றன.

10. சிந்துவெளியில் காணப்படும் களிமண் முத்திரையில் உள்ள வண்டிகளில் ஆரங்களுடன் கூடிய சக்கரங்கள் காணப்படவில்லை.  ஆனால் வேதங்களில் குறிப்பிடப்படும் இரதங்களின் சக்கரங்கள் ஆரங்களுடன் உள்ளன. (Mr. I. Mahadevan. 'Review - An Encyclopaedia of the Indus Script' by AscoParpola. Internation Journal of Dravidian linguistics. Vol.XXVI number 1. January 1997. P.110 )

11. சிந்துவெளியில் சுவத்திக (Swastik) அடையாளம்     அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றது. ஆனால் வேதங்களில் அதைப் பற்றிய குறிப்புகள் கூட காணப்படவில்லை.
12. சிந்துவெளியில் கடவுளைப் பெண்ணுருவில் கண்டு மிகவும் சிறப்பித்துள்ளனர்.  ஆனால் வேதங்களில் பெண்கள் மிகவும்     குறைவான இடத்தையே பெற்றுள்ளனர்.
'சிந்துவெளி நாகரிகத்தை ஆராய்ச்சி செய்த மார்ஷல். ஹீராஸ். கமில்சுவலபில் மற்றும் இரஷ்ஷிய. பின்லாந்து. அமெரிக்க அறிஞர்கள் பலர் இது 'திராவிட நாகரிகம்' எனக் கூறியுள்ளனர்.

கணிப்பொறி ஆய்வு (Computer analysis) சிந்துவெளி மொழி அமைப்பு திராவிட மொழி அமைப்பே என்பதை உறுதிபடுத்தியுள்ளது என்கிறார் ஐராவதம் மகாதேவன். (Indian Express - Madras - 5 August 1994).
சிந்துவெளி மொழி குறித்து ஆழ்ந்து ஆய்வு செய்த அறிஞர் அஸ்கோ பர்ப்போலா இது திராவிட மொழி என்று விளக்குவது குறிப்பிடற்குரியது.

அண்மைக் காலங்களில்.   டாக்டர் ஆர். மதிவாணன். திரு. பூரணச்சந்திர ஜீவா ஆகியோர் சிந்துவெளி எழுத்துகள் தமிழே என்ற தம் ஆய்வு முடிவைத் தெரிவித்துள்ளனர்.
சிந்துவெளி நாகரிகம் திராவிடரின் நாகரிகம் என்று கூறும் ஐராவதம் மகாதேவன், சிந்துவெளியின் காலம் 'ரேடியோ கார்பன் ஆய்வுப்படி' (Radio carbon dating) கி.மு. 7000க்கு முற்பட்டது எனக் கூறியுள்ளார். (ndian Express - Madras - 5 August 1994)
Fr. ஹீராஸ் 'Studies in Proto - Indo - Mediterranean Culture' எனும் புத்தகத்தில் சிந்துவெளி திராவிட நாகரிகத்திற்கும் சுமேரிய, எகிப்திய நாகரிகங்களுக்கும் இடையேயுள்ள தொடர்புகளை விளக்கிச் செல்கிறார். சிந்துவெளிக்கும் சங்க இலக்கியத் தமிழருக்கும் உள்ள உறவை அவர் எடுத்துக்காட்டியிருப்பது குறிப்பிடற்குரியது. (Rev. Fr. Heras. Studies in Proto Indo Mediterranean Culture. Vol-I. Indian Historical Research Institute. Bombay. 1953). 1953இல் வெளியிடப்பட்டுள்ள அவருடைய Studies in Proto Indo Mediterranean Culture' எனும் இந்த  நூலுக்குப் பின் சிந்துவெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள அறிஞர்கள் பலரும் சிந்துவெளிக்கும் பழந் தமிழருக்கும் உள்ள நெருக்கமான தொடர்புகளைப் பல கோணங்களிலும் எடுத்துக்காட்டி வருகின்றனர்.

தமிழர்கள் உலகில் எங்கு சென்றாலும் தம்முடைய தொன்மையான வாழ்விடமான பழந்தமிழக ஊர்ப் பெயர்களையும் தமிழ்ச் சொற்களையும் வழிபாட்டையும், ஆன்மீகக் கருத்துகளையும் எடுத்துச் சென்று கொண்டேதான் இருக்கின்றனர் என்பதை அவர்கள் பரவியுள்ள நாடுகளிலும் இடங்களிலும் உள்ள பெயர்களும் சொற்களும் வெளிப்படுத்துவதை. 'சொல்லாய்வுஃ. 'பெயராய்வுஃகள் வெளிப்படுத்துகின்றன.

சிந்துவெளி மக்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வந்துள்ளனர் எனும் கருத்து அறிஞர்கள் பலராலும் கூறப்பட்டு வருகின்றபோதிலும் பூம்புகார் குறித்த ஆய்வு தமிழர்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரவில்லை. தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் சென்றுள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுவதாய் அமைந்துள்ளது.

பூம்புகார் ஆய்வுகள் குறித்து 'குமரிக்கண்டம்' என்னும் தம் நூலில் வெளியிட்டுள்ள ஆசிரியர் ம.சோ. விக்டர் அவர்களின் எழுத்துகளும்  உலக நாடுகளில் காணப்படும்  தமிழ்ப் பெயர்களையும் தமிழ்ச் சொற்களையும்  எடுத்துக்காட்டும் ஆசிரியர் ஆர். பாலகிருஷ்ணனின் ஆய்வுகளும் தமிழின், தமிழரின் தொன்மையை அறிந்து கொள்ளப் பெருந் துணை புரிகின்றன. அவர்களுடைய ஆய்வுகளை முழுவதும் படிப்பதற்கு முன்னோட்டமாக அவர்கள் எழுதியவற்றிலிருந்து சில பகுதிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பாலகிருஷ்ணன் (முன்னாள் ஒரிசா மாவட்ட ஆட்சியர்)  அவர்கள் 'சிந்துசமவெளி நாகரிகமும் சங்கத் தமிழ் இலக்கியமும்ஃ எனும் தலைப்பில் அளித்த ஆய்வுக் கட்டுரையிலிருந்து சில பகுதிகள் வருமாறு:

1. சிந்துவெளி மற்றும் ஹரப்பாவில் "கொற்கை,   வஞ்சி, தொண்டி வளாகம்" புலப் பெயர்வுகளும் ஊர்ப் பெயர்களும்


'நாகரிகங்கள் தோன்றுவதற்கு முன்பே தோன்றிவிட்ட ஊர்ப் பெயர்கள், அந்நாகரிகங்கள் பல்வேறு காரணங்களால் நலிவடைந்து வீழ்ந்த பின்னும் பிழைத்திருக்கின்றன. காலப் போக்கில் மொழி மாற்றங்கள்,புலப் பெயர்வுகள், புதிய மக்களின் குடியேற்றங்கள் என்று எத்தனை நிகழ்வுகள் நிகழ்ந்தாலும் அவற்றையும் மீறி. தொன்மக் காலங்களின் உறைந்த தடயங்களாய் உயிர்த்திருக்கும் சாகாத் தன்மை ஊர்ப் பெயர்களுக்கு உண்டு. அந்த வகையில், ஊர்ப் பெயர்கள் பழங்காலப் புலப் பெயர்வுகளின் நம்பிக்கைக்குரிய தடயங்களாய் விளங்குகின்றன.
image
சிந்துவெளி நாகரிகம் குறித்த திராவிடக் கருதுகோளுக்கு வலுசேர்க்கும் முயற்சியில் ஊர்ப் பெயர்ச் சான்றுகளை அல்ச்சின்ஸ், ஸங்காலியா, பர்ப்போலா, ஐராவதம் மகாதேவன் மற்றும் எப்.சி. சவுத் வொர்த் போன்ற ஆய்வறிஞர்கள் பயன்படுத்தியுள்ளனர். ஹரப்பாவின் மொழியைக் கண்டறிய ஹரப்பா இடப் பெயர்கள் பெரிதும் உதவக்கூடும் என்று நம்புகிறார் பர்ப்போலா. சிந்துவெளி மக்கள் எழுதிவைத்துச் சென்றுள்ள தொடர்களின் தொடக்கச் சொற்களில் ஊர்ப் பெயர்கள் இடம் பெற்றிருக்கக்கூடும் என்று கருதுகிறார் ஐராவதம் மகாதேவன்.

புலம் பெயர்ந்து செல்லும் மக்கள் புதிய ஊர்களுக்குத் தங்களது பழைய ஊர்களின் பெயர்களை மீண்டும் பயன்படுத்துவது உலகின் பல பகுதிகளிலும் நிகழ்ந்திருக்கிற. நிகழ்கிற நடைமுறையாகும். இதற்குச் சமூக உளவியல் சார்ந்த அடிப்படைக் காரணம் உண்டு.
சிந்துவெளி மக்கள் திராவிடர்கள் என்பது உண்மையானால். அவர்களில் ஒரு பகுதியினர் புலம் பெயர்ந்து சென்றபோது விட்டுச்சென்ற பழைய பெயர்கள் சிந்துவெளிப் பகுதியிலேயே இன்னும் உறைந்திருக்க வேண்டும்.  அதைப் போலவே. புலம் பெயர்ந்து சென்றவர்கள் எடுத்துச் சென்றிருக்கக்கூடிய சிந்துவெளிப் பெயர்கள் அவர்களது புதிய தாயகங்களில் பயன்படுத்தப்பட்டு அவ்விடங்களில் இன்றும் வழக்கில் இருக்க வேண்டும்.

எனவே. சிந்துவெளி மக்களுக்கும் சங்கத் தமிழ் முன்னோடிகளுக்கும் தொன்மத் தொடர்புகள் இருந்திருக்கக் கூடும் என்ற வாதத்தை நிறுவ வேண்டும் என்றால். சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஊர்ப் பெயர்களுக்கும் வடமேற்குப் புலங்களில் தற்போது வழங்கும் ஊர்ப் பெயர்களுக்கும் தொடர்பிருக்கிறதா என்று ஆராயவேண்டிய அவசியம் இருக்கிறது.
சிந்துவெளியில் சங்கத் தமிழரின் துறைமுகங்கள், தலைநகரங்கள் மற்றும் ஊர்களின் பெயர்கள் பாகிஸ்தானிலுள்ள கொற்கை (

GorkaiGorkhai), வஞ்சி (Vanji), தொண்டி(Tondi), மத்ரை (Matrai), உறை (Urai), கூடல் கட் (Kudal Garhமற்றும் கோளி (Koli); ஆப்கானிஸ்தானிலுள்ள கொற்கை (KorkayGorkay). பூம்பகார் (Pumbakarஆகிய ஊர்ப் பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தலைநகரங்கள் மற்றும் துறைமுக நகரங்களின் பெயர்களான கொற்கை. வஞ்சி. தொண்டி. மதுரை. உறையூர். கூடல். கோழி. பூம்புகார் ஆகியவற்றை நினைவுபடுத்துகின்றன.
image
பழந்தமிழர்களின் முக்கியத் துறைமுகங்களான கொற்கை. தொண்டி மற்றும் பூம்புகாரையும், பழந்தமிழர்களின் முக்கியத் துறைமுகங்களான கொற்கை. தொண்டி மற்றும் பூம்புகாரையும், மதுரை, கூடல்,வஞ்சி போன்ற பெரு நகரங்களின் பெயர்களையும் நினைவுபடுத்தும் ஊர்ப் பெயர்கள் சிந்து, ஹரப்பா உள்ளிட்ட வடமேற்கு நிலப் பகுதிகளில் இன்றும் நிலைத்திருப்பதைப் புறக்கணிக்க முடியாது.  கொற்கை. வஞ்சி. தொண்டி போன்ற பெயர்கள் பழந்தமிழர் பண்பாட்டின் முகவரிகள். சங்க இலக்கியங்கள் கொண்டாடிப் போற்றும் இப்பெயர்கள் வேதங்கள் மற்றும் வடமொழி இலக்கியங்கள் மற்றும் வட மரபுகள் எதிலும் பதிவு செய்யப்பட வில்லை. வரலாற்றுக் காலத்தில் இப் பெயர்ப்பெயர்வு நிகழ்ந்திருந்தால் அது தமிழ் மற்றும் வட மொழி இலக்கியங்கள் மற்றும் வரலாற்று ஆவணங்களில் பதிவாகியிருக்கும்.

எனவே. சிந்து வெளிக் கொற்கை, தொண்டி, வஞ்சி வளாகத்தை, பழந்தமிழ்த் தொன்மங்களோடு தொடர்புபடுத்துவதைத் தவிர்க்க இயலாது. இது. சிந்துவெளி நாகரிகத்தின் பழந்தமிழ்த் தொடர்பிற்கு அரண் சேர்ப்பதோடு சங்க இலக்கியத்தின் சிந்துவெளித் தரவுத் தகுதிக்கு அடிக்கல்லும் நாட்டுகிறது. பாகிஸ்தானில் இன்றும் வழக்கிலுள்ள அம்பர் (

Ambar). தோட்டி(Toti). தோன்றி (Tonri). ஈழம் (Illam). கச்சி (Kachi). காக்கை (Kakai). கானம் (Kanam). களார் (Kalar). கொங் (Kong). நாலை (Nalai). நேரி (Neri). ஆகிய ஊர்ப் பெயர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படுள்ள ஊர்ப் பெயர்களான அம்பர். தோட்டி. ஈழம். கச்சி. காக்கை. கானம். கழாஅர். கொங்கு. நாலை. நேரி ஆகியவற்றை அப்படியே நினைவுக்குக் கொண்டு வருகின்றன.
நதிகள், மலைகளின் பெயர்கள்

நதிகளின் பெயர்கள் ஊர்ப் பெயர்களாகவும் வழங்குவது உலகமெங்கும் உள்ள நடைமுறை. ஆப்கனிஸ்தானிலுள்ள காவ்ரி (

Kawri). பொர்னை (Porni). மற்றும் பொருன்ஸ் (Poruns); பாகிஸ்தானிலுள்ள காவேரி வாலா (Kaweri Wala), பொர்னை (Phornai),  புரோனை (Puronai), காரியாரோ (Khariaroஆகிய பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள காவேரி, பொருநை, காரியாறு ஆகிய நதிப் பெயர்களை நினைவுறுத்துகின்றன.

கொற்கை என்பது பாகிஸ்தானில் ஊர்ப் பெயராக மட்டுமின்றி ஒரு நதியின் பெயராகவும் விளங்குகிறது. சங்க காலத்துச் சமகால நதிகளின் பெயர்களை மட்டுமின்றி. கடல் கோளில் காணாமல் போன தொன்ம நதியான ப

öறுளியாற்றின் பெயரையும் வட மேற்கு மற்றும் மேற்கு இந்திய ஊர்ப்பெயர்களில் மீட்டுருவாக்கம் செய்யமுடிகிறது.

பொஃரு (

Pohruஎன்பது பாகிஸ்தானில் பாயும் சட்லெஜ் நதியின் கிளை நதியாகும். வட இந்தியாவில் இமயமலைப் பகுதியிலுள்ள உத்திராஞ்சல் மாநிலம் கடுவால் மாவட்டத்தில் 'பக்ரோலி' (Bakroli). என்ற ஊர்ப்பெயர் வழங்குகிறது. இதையொட்டியுள்ள ருத்திரப்ப்ரயாகை மாவட்டத்தில் 'குமரி' என்ற ஊர்ப்பெயர் வழங்குகிறது.

தமிழரின் வரலாற்றுக்கு முற்பட்ட தொன்மங்களோடு தொடர்புடைய பஃறுளியாற்றின் பெயரையும் குமரிக் கோட்டின் பெயரையும் ஒரு சேர நினவுறுத்தும் இப்பெயர்கள் அளிக்கும் வியப்பு. உத்திரப்பிரதேசத்தில் பரெய்லி மாவட்டத்தில் உள்ள பஹ்ரொலி (

Bahroli); குஜராத்தில் நான்கு இடங்களில் வழங்கும் பக்ரொல் (Bakrolஎன்ற ஊர்ப் பெயர்களைக் கண்டு மேலும் அதிகமாகிறது.

இதைப் போலவே, ஆப்கனிஸ்தானிலுள்ள பொதினே (

Podineh), பரம்பு டராஹெ (Parambu Daraheமற்றும் ஆவி (Awi); பாகிஸ்தானிலுள்ள பொதியன் (Potiyan), பளனி (Palani), தோட்டி (Toti) ஆகிய பெயர்கள் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் பொதினி, பழனி மற்றும் தோட்டி என்ற மலைப் பெயர்களை நினைவுறுத்துகின்றன. மேலும், பல பழந்தமிழ் ஊர்ப் பெயர்களை நினைவுறுத்தும் ஊர்ப் பெயர்களை தன்னகத்தே கொண்ட ஈரானில் வழங்கும் பொதிகே (Potikehபழந்தமிழ் மரபில் மிக முக்கிய இடம் வகிக்கும் பொதிகை மலையை நினைவுறுத்துகிறது.

இவ்வாறு ஆசிரியர் பாலகிருஷ்ணன் தமிழ்ப் பெயர்களையும் சொற்களையும்  பல நாடுளிலும் களப்பணி மேற்கொண்டு ஆய்ந்து எடுத்துக்காட்டி வருவது ஆழ்ந்து நோக்கற்குரியது.
தமிழர்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரவில்லை. தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் சென்றுள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுவதாய் அமைந்துள்ள பூம்புகார் ஆய்வுகள் குறித்து 'குமரிக்கண்டம்' என்னும் தம் நூலில் வெளியிட்டுள்ள ஆசிரியர் ம.சோ.விக்டர் அவர்களின் நூலிலிருந்து சில பகுதிகள் வருமாறு:

2 - பூம்புகார்

அண்மையில் பூம்புகார் கடற்பகுதியில் அகழ்வாய்வு மேற்கொண்ட (2000) கிரஹாம் ஹான்காக் என்ற இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர். தனது முறையான ஆய்வுகளுக்குப் பிறகு அதிர்ச்சி தரும் செய்திகளை வெளியிட்டார்.
18-12-2002 நாளன்று தினமலர் நாளேடு வெளியிட்ட செய்தி.

"நாகை மாவட்டம் பூம்புகார் அருகே சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய ஒரு பிராமண்ட நகரம் தான் உலகில் முதன்முதலில் தோன்றிய நவீன நகர நாகரிகமாக இருக்கக்கூடும் என்று இங்கிலாந்தைச் சார்ந்த ஆழ்கடல் ஆராய்ச்சியாளர் கிரஹாம் ஹான் காக் என்பவர் கண்டறிந்துள்ளார்.

இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு, பூம்புகார் கடற்பகுதியில் மேற்கண்ட தீவிர ஆழ்கடல் ஆராய்ச்சியின் மூலம் இந்த உண்மையைக் கண்டறிந்துள்ளார். இந்த ஆராய்ச்சிக்குத் தற்போதைய வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தான "மெசபடோமியா' (தற்போதைய ஈராக்) பகுதியில் சுமேரியர்களால் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நகர நாகரிகம் தோற்றுவிக்கப்பட்டது என்பது தவறானது எனத் தெரிவிக்கிறது.

கிரஹாம் ஹான் காக் என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற ஆழ்கடல் ஆராய்ச்சியாளர். இவரது பல கண்டுபிடிப்புகள் வரலாற்று உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவை. இந்திய அரசின் கட்டுப்பாட்டில் கோவாவில் அமைந்துள்ள "தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம்' என்ற நிறுவனம். கடந்த 1990ஆம் ஆண்டு வாக்கில் வரலாற்றுப் புகழ் பெற்ற பூம்புகார் நகர கடற்பகுதியில் ஒரு ஆய்வினை மேற்கொண்டது.


image
இந்த ஆய்வுகள் 1993ஆம் ஆண்டுவரை தொடர்ந்து நடைபெற்றன. இந்த ஆய்வின் போது, பூம்புகார் கடற்பகுதியிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிற்குள் பல வட்ட வடிவமான கிணறுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்தக் கிணறுகள் பூம்புகார் முதல் தரங்கம்பாடி வரையிலான கடற்பகுதியில் பரவியிருப்பது கண்டறியப்பட்டது. இது தவிர சங்க காலத்தைச் சார்ந்தது எனக் கருதப்படும் சுட்ட செங்கற்களால் ஆன "ட" வடிவ கட்டடம் ஒன்றும் கண்டறியப்பட்டது.

இத்துடன் நீரில் சுமார் 25அடி ஆழத்தில் குதிரை குளம்பு வடிவில் 85அடி நீளமும், 2 மீட்டர் உயரமும் கொண்ட பல பொருட்கள் கண்டறியப்பட்டன. இவை அனைத்தும் பூம்புகார் கடற்பகுதியில் ஒரு பெரிய நகரம் மூழ்கியிருக்கக்கூடும் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்திருந்த போதிலும் தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம் தன்னுடைய ஆய்வினை நிதி பற்றாக்குறை காரணமாக பாதியில் நிறுத்திவிட்டது.

இந்நிலையில் கடந்த 2000ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த கிரஹாம் ஹான் காக். தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகத்தினரிடம் பூம்புகார் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தார். நிதிப் பற்றாக்குறை காரணமாக ஆராய்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது என்பதை அறிந்த அவர், இங்கிலாந்தைச் சார்ந்த "சானல் 4" என்ற பிரபல தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் அமெரிக்காவைச் சார்ந்த "லர்னிங் சானல்" என்ற தொலைக்காட்சி நிறுவனம் ஆகியவற்றின் நிதியுதவி மற்றும் இந்திய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகத்தின் ஒத்துழைப்புடன் 2001ஆம் ஆண்டு ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். இந்த ஆராய்ச்சிக்கு அதி நவீன "சைடு ஸ்கேன் சோனார்" என்ற கருவி பயன்படுத்தப்பட்டது. இந்தக் கருவி பூம்புகார் கடற் பகுதியில் குறுக்கும் நெடுக்குமாக நீண்ட அகலமான தெருக்களுடன், உறுதியான கற்களால் கட்டப்பட்ட கட்டடங்களின் இடிபாடுகளுடன் கூடிய ஒரு பிரம்மாண்ட நகரம் மூழ்கியிருப்பதைத் துல்லியமாகக் காட்டியது. பின்னர் அக்காட்சிகளை, கிரஹாம் ஹான் காக் நவீன காமிராக்கள் மூலம் படம் எடுத்தார்.

இந்த மூழ்கிய நகரம் குறித்த தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்த ஹான்காக் இந்த நகரம் கடலில் சுமார் 75 அடி ஆழத்தில் புதையுண்டிருப்பதைக் கண்டறிந்தார். இன்றைக்கு சுமார் 17 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு "ஐஸ் ஏஜ்" எனப்படும் பனிக்கட்டி காலத்தின் இறுதி பகுதியில் தட்பவெப்ப மாறுதல்கள் காரணமாக, பனிப்பாறைகள் உருகியதன் விளைவாக பல நகரங்கள் கடலுள் மூழ்கியதாக வரலாறு தெரிவிக்கின்றது.

இத்தகைய பனிக்கட்டி உருகும்நிலை, சுமார் 7 ஆயிரம் ஆண்டுகாலம் தொடர்ந்ததாக வரலாறு தெரிவிக்கின்றது. பூம்புகார் அருகில் இருந்த இந்நகரம், சுமார் 75 அடி ஆழம் புதையுண்டு கிடப்பதைப் பார்க்கும்போது, இந்த நகரம் சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கியிருக்கக் கூடும் என்று ஹான்காக் கருதினார். தனது ஆராய்ச்சியைப் பற்றி விபரங்களை அவர் இங்கிலாந்து நாட்டு மில்னே என்பவரிடம் தெரிவித்தார். அதன்மீது ஆராய்ச்சி மேற்கொண்ட கிலன்மில்னே, ஹான் காக்கின் கருத்து சரிதான் என உறுதிப்படுத்தினார்.



சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல்மட்டம் 75 அடி உயர்ந்திருக்கக் கூடும் என்றும். அதனை வைத்துப் பார்க்கும்போது இந்த நகரம் 11 ஆயிரத்து 500 ஆண்டுகால பழமை வாய்ந்தது என்ற முடிவினையும் அறிவித்தார்.

மேலும் பூம்புகார் நகர நாகரிகம் ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆகிய நாகரிகங்களை விட மிகவும் மேம்பட்ட ஒன்று என்றும் கிரஹாம் ஹாக் தெரிவிக்கின்றனர். பூம்புகாரில் இவர் மேற்கொண்ட ஆராய்ச்சியின் படங்கள், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில்.

"அண்டர்வேர்ல்ட்" என்ற தலைப்பில் தொலைக்காட்சித் தொடராக ஒளிபரப்பப்பட்டது. இந்தத் தொலைக்காட்சித் தொடர், உலக வரலாற்று ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் படங்களை பெங்களுரில் நடந்த கண்காட்சி ஒன்றில் கிரஹாம் ஹான்காக் வெளியிட்டார்.

மேலைநாட்டு வரலாற்று மற்றும் கடல் ஆராய்ச்சியாளர்களின் கவனம் பூம்புகாரின் பக்கம் திரும்பியுள்ள போது. இந்திய ஆராய்ச்சியாளர்கள் மட்டும் பூம்புகார் பற்றித் தெரிந்து கொள்ள எந்த விருப்பமும் கொள்ளவில்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மை. மூழ்கிப் போனது பூம்புகார் நகரம் மட்டுமல்ல. தற்போது இருக்கும் வரலாற்றுப் புகழ்பெற்ற பூம்புகார் நகரமும். அரசால் அலட்சியப்படுத்தப்பட்ட நிலையில்தான் உள்ளது. சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் புகழ்பெற்ற துறைமுக நகரமாக விளங்கிய பூம்புகார். பண்டைக் காலத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றாலும் போற்றப்பட்டுள்ளது.
சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள நிகழ்வுகள் நடைபெற்றதாகக் கருதப்படும் பூம்புகார் பற்றி கோயில் கல்வெட்டுகள் பலவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஹான்காக்கின் ஆராய்ச்சிகள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் இத்தகைய வசதிகள் பூம்புகாரில் அவசியம் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

பூம்புகார் அகழ்வாய்வு தரும் செய்திகள்1. கி.மு. 10000 ஆண்டுகளில் நகரிய நாகரிகத்தில் தமிழர் சிறந்திருந்தனர்.

2.  மிக உயர்ந்த மாட மாளிகைகளும் அகன்ற தெருக்களும்அறியப்படுவதால் திட்டமிட்டு நகரம் உருவாக்கப்பட்டிருந்தது.

3.  சுட்ட செங்கற்கள் கிடைத்துள்ளதால் செங்கல்லைச் சுடும் நடைமுறை இருந்துள்ளது.

4. கடல் நீர் 75 அடி உயர்ந்துள்ளதாக அறியப்படுகின்றது. (400 அடி என்றும் கூறப்படுகின்றது)

5.  குமரிக்கண்ட அழிவும் இச்செய்தியால் உறுதி செய்யப்படுகின்றது.

6.  கி.மு. 10000 ஆண்டுகளில் குமரிக்கண்டம் இறுதியாக அழிந்ததை இச் செய்தி உறுதி செய்கிறது.

7.  புதிய தமிழகமும் இலங்கையும் இக்கால அளவில் இருவேறு நாடுகளாகப் பிரிந்தன.

8. இந்தியப் பெருங்கடல். வங்க அரபிக் கடல்கள் தோற்றம் பெற்றன.

9. உலக வரைபடம் ஏறக்குறைய இன்றுள்ள அளவில் வடிவம் பெற்றது.

10. கி.மு. 17000 - 10000 ஆண்டுகளில் பனிப்பாறைகள் உருகியதால். கடல் நீர் உயர்ந்து. உலகின் பல நாடுகள் அழிந்துபோயின.

11. 7000 ஆண்டுகள் தொடர்ந்து பனிப்பாறை உருகல் நிகழ்வு, குமரிக் கண்டத்தை இக்கால அளவில் சிறிது சிறதாக அழித்தொழித்தது.


12. சிந்துவெளிக்கு முற்பட்டதும். உயர்ந்ததுமான நாகரிகம் குமரிக் கண்டத்தில் அறியப்பட்டது.

13. இயற்கையின் மாறுபாடுகளால். நில நீர்ப் பகுதிகளில் மாற்றங்கள் தோன்றிய செய்தி ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஆய்வுகளின் நம்பகத் தன்மை:
1.இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர், ஏற்கனவே உலகின் பல பகுதிகளை ஆய்வு செய்தவராவார்

2. இவர் கண்டறிந்த உண்மையை டர்ஹாம் பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ளது.

3. புவியியல் ஆய்வாளர் பேராசிரியர் கிளன் மில்னே, உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர் ஆவார்.

4. ஆழ்கடலைப் படம்பிடிக்கும் துல்லியமான படப்பிடிப்புக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.

5. இந்த அகழ்வாய்வின் சிறப்பையுணர்ந்த அமெரிக்க,  ஆங்கிலேயத் தொலைக்காட்சி நிறுவனங்கள் - இதற்கான பண உதவிகளைச் செய்தன.

6. படமெடுக்கப்பட்டவை அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் ஓளிபரப்பப்பட்டன.

7. இந்த அகழ்வாய்வை ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதுவரையில் மறுப்புகள் எவையும் தெரிவிக்கப்படவில்லை.


ஆய்வுகள் குறித்த ஐயப்பாடுகள்:
1. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை.

2. 1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது.

3. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில   தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்ற கரணியம் பொய்யாகச் சொல்லப்பட்டது. 1990களில், குசராத்தில் உள்ள துவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய 

அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை.

4. சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை.

5. இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன.

6.  தமிழகத்தில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படங்கள் தமிழகத்தில் வெளியிடப் படவில்லை. மாறாக, பெங்களுரில் ஒருநாள் மட்டும் கண்காட்சியில் காட்டப்பட்டது. இப்படங்களும், ஊடகங்களில் வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டன.

7. இந்தியத் தொலைக்காட்சிகளில், இந்த ஆய்வுப் படங்களைக் காட்ட அனுமதி வழங்கப்படவில்லை.


8. தங்களது ஆய்வு முடிவுகளை இந்தியாவில் வெளியிட இயலாமற் போனதால். இங்கிலாந்து      நாட்டு ஆய்வாளர்கள் நொந்து போனார்கள்.

9. பின்னர் அமெரிக்க ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் இவை ஒளிபரப்பப்பட்டன.

10. இந்தியக் கடல் அகழ்வாய்வு நிறுவனம், தமிழருக்கெதிரான நிலைபாட்டை மேற்கொண்டது.

11.இதுவரையிலும் கூட. பூம்புகார் அகழ்வாய்வுத் தொடர்பான செய்திகள் தமிழர்களுக்கு அறிவிக்கப்படவில்லை.

12. நூலாசிரியரால், பலமுறை எழுதப்பட்ட மடல்களுக்கு, கோவாவிலுள்ள இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் உரிய பதிலைத் தரவில்லை.

13. தமிழரின் வரலாற்றை இருட்டடிப்பு செய்வதற்கான வேலைகளில், சில ஆதிக்க சக்திகள் முன்னின்று செயல்படுவதைத் தடுத்து நிறுத்த எவரும் முன்வரவில்லை.

14. தமிழ் நாட்டரசு, உரிய நடவடிக்கைகளை இதுவரையிலும் மேற்கொள்ளவில்லை.

15. மேற்கொண்டு எந்த வெளிநாட்டு நிறுவனமும், இந்தக் கடல் பகுதிகளில் அகழ்வாய்வு மேற்கொள்ள அனுமதிக்கபடவில்லை.

16. திட்டமிட்டே தமிழரின் வரலாறு மறைக்கப்படுகின்றது என்பதற்கு. கடந்த கால நிகழ்வுகள் சான்றுகளாக உள்ளன.

17. பூம்புகாரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள். நம்பகத்தன்மையுடையவையல்ல என்ற ஒரு தலைப் பக்கமான செய்திகளையும் சிலர் திட்டமிட்டே பரப்பி வருகின்றனர். எவ்வாறு அவை நம்பகத்தன்மையற்றவைகளாவுள்ளன என்ற விளக்கத்தை எவரும் அளிக்க முன்வரவில்லை


18. இந்திய எண்ணெய் எரிவாயு நிறுவனத்தின் துரப்பணப் பணிகளின் போது, குசராத் கடல்             பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருளை, ஒரு தமிழ் பொறியாளர் முயற்சியால் டெல்லிக்கு எடுத்துச் சென்று ஆய்வுக்கூடத்தில் (சகானி ஆய்வுக்கூடம், டெல்லி) ஒப்படைத்தார்.  இம்முயற்சிக்கும் அந்த நிறுவனம் பல இடையூறுகள்செய்தது. இறுதியில், சகானி ஆய்வு நிறுவனம், அந்த பொருள், உடைந்து போன மரக்கலத்தின் ஒரு பகுதியே என்றும். அதன் அகவை கி.மு. 7500 என்றும் அறிவித்தது. இதன் பிறகே, இந்திய அரசு, சிந்துவெளி நாகரிகத்தின் காலம். கி.மு. 7500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என அறிவித்தது. (The New Indian Express, Chennai. 17.1.2002)

19. 

இந்த அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் முரளி மனோகர் ஜோஷியிடம், செய்தியாளர்கள், சிந்துவெளி நாகரிகம் ஆரிய நாகரிகமா, தமிழர் நாகரிகமா எனக் கேட்டதற்கு, அதற்கு அமைச்சர், அது இந்திய நாகரிகம் எனத் திரும்பத் திரும்ப அதே பதிலைக் கூறினார். ஆரிய நாகரிகம் எனக் கூறச் சான்றுகள் இல்லாததாலும், தமிழர் நாகரிகம் என்று கூற மனம் இல்லாததாலும், அது இந்திய நாகரிகமே என்று மழுப்பலாகச் சொன்னார். இந்த நிகழ்ச்சியும், செய்தித்தாளில் தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தது.

(ம.சோ. விக்டர். குமரிக்கண்டம். நல்லேர் பதிப்பகம். சென்னை-4. மு.ப. 2007. பக். 115-122)
இவ்வாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டு வரும் தமிழரின். தமிழ் மொழியின் சிறப்புகள் அண்மைக்கால ஆய்வுகளின்வழி வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

துவாரகைக்குக் கொடுக்கப்படும் சிறப்பு தமிழரின் தொன்மையை வெளிப்படுத்தும் பூம்புகாருக்கோ. சிந்துவெளிக்கோ உரிய அளவில் இந்திய அரசாங்கத்தால் கொடுக்கப்படாமல் இருட்டடிப்பு செய்யப்படுவது இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் நடந்த காலப் பெட்டகம் (

Time Capsule) என்ற ஒன்றை நாம் மறக்க முடியாது. ஆரியர்தாம் இந்தியாவின் மண்ணின் மைந்தர் என்பதைப் போல் தவறாக எழுதி தயாரிக்கப்பட்ட செப்புப் பட்டயங்கள் வைக்கப்பட்ட பெட்டகம், மொரார்ஜி தேசாய் எழுப்பிய கேள்வியால் தோண்டியெடுக்கப்பட்ட போது பொய் வரலாறு அம்பலமானது.

ஆரியர்கள் தமக்கு இல்லாத நாகரிகப் பழமையை பொய்யாக உருவாக்கப் பெரும்பாடுபட்டு வருகின்றனர்.

ஆனால், தமிழர்களின் பழமையான பண்பாட்டுச் சிறப்பை வெளிப்படுத்துகின்ற பூம்புகாரோ இந்திய அரசால் இன்று வரை உரிய கவனம் செலுத்தப்படாமல் இருப்பதோடு வெளிநாட்டார் இது குறித்து செய்த ஆய்வுகள் தமிழருக்கு மிகச் சிறப்பைக் கொடுக்கின்றது என்ற ஒரே காரணத்திற்காக இருட்டடிப்பு செய்து வருவது எவ்வளவு கொடிய நிலை.

மறைந்து கிடக்கும் தமிழின், தமிழரின் மாண்புகளை, தொன்மைச் சிறப்புகளை உலகிற்கு எடுத்துக்காட்ட ஆய்வாளர்கள் பலர் எழும்ப வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

(கட்டுரை: 'தமிழர் சமயம்' - மார்ச் 2011 இதழில் வெளிவந்தது)

நன்றி : கீற்று 

”நாளி” காடு சிந்திய ரத்தம்

வ்வொரு மலைப் பயணத்திலும் உயிர் தொட்டுத் தாலாட்டும் குளிரை அனுபவித்தபடி உயரச் செல்லச் செல்ல… நீளமான விறகுக்கட்டினைத் தலைச் சுமையுடன் கடந்துசெல்லும் பழங்குடியினப் பெண்கள் கண்களில் படத்தான் செய்கிறார்கள். அவர்கள், காட்டில் காய்ந்த விறகுகளைப் பொறுக்கிப் பிழைக்கிறார்கள். காடு அவர்களுக்கு இலவசமாக விறகு தருகிறது என்ற மனோபாவத்தோடு கடந்துபோகிறோம் நாம். ஆனால், இன்று அந்த சுள்ளிகளுக்காக அவர்கள் கொடுக்கும் விலை மிக மிக அதிகம்.
 

காடு… அவர்களின் தாய்மடி. பூமி…கருவறை. ஆனால், இன்று அவர்களே அங்கு அகதிகளாக மௌனம் சுமந்து இருக்கிறார்கள் என்பதை எத்தனை சுகவாசிகள் உணர்கிறோம்?

தமிழகத்தின் வடமேற்கு எல்லையில் கேரளா, கர்நாடகத்தோடு இணைந்து பிணைந்துகிடக்கும் நீலமலை எப்படி சிதைக்கப்பட்டது என்ற வரலாற்று ஆவணம்தான் 'நாளி' ஆவணப்படம். இரா.முருகவேள், 'ஒடியன்' லட்சுமணன் இணைந்து எழுதி, இயக்கி இருக்கிறார்கள்.

காடுகளில் வாழும் அத்தனை விதமான உயிரினங்களில், தானும் ஒரு உயிரினமாக வாழ்ந்துவருகிறார்கள் பழங்குடியினர். சமவெளிகளில் வாழும் நாகரிகம் (!) அடைந்ததாக நம்பும் அறிவுஜீவிகள் அவர்களை எப்படிச் சீரழித்தார்கள் என்பதை ஆவணப்படுத்துகிறது 'நாளி'. சமவெளியில் இருந்தவன் சந்தன மரத்தில் வீடுகளை இழைக்க, ஆதிவாசி, மூங்கில்களாலே தன் குடியிருப்பை அமைத்துக்கொண்டான். சமவெளியில் இருப்பவன் பொழுதுபோக்குக்காக வேட்டையாட… ஆதிவாசி தன் உணவின் அவசியம்  தவிர, வேறு எதன் பொருட்டும் விலங்குகளைத் தொடவே இல்லை. 1830-களில் ஆங்கிலேயன் அழித்த சோலைக் காடுகளால், ஓடைகளில் நீர்வளம் பாதிக்கப்பட்டதாக அப்போதைய கோவை ஆட்சியர் சல்லிலன் ஆவணப்படுத்தியதை நினைக்கும்போது, அதன் பின் அழிந்த சோலைக் காடுகளும் சிதைந்த ஓடைகளும் மனதில் ரத்தம்  வடியவைக்கின்றன.

பணத்துக்காக நடப்பட்ட தேக்கு மரங்கள் தன் அருகே எதையும் வளரவிடாமல், மண்ணை மணலாக மாற்றி வனங்களை அழிக்கிறது. சீனாவில் இருந்துவந்த தேயிலை தென் இந்தியா, அஸ்ஸாமில் இருந்த அடர் வனங்களை அழித்தது மட்டும்  அல்லாமல் அங்கு இருந்த பழங்குடியின மக்களையும் கொத்தடிமை ஆக்கியது. காட்டில் இருந்த மனிதர்கள் சமவெளி மனிதர்களால் இப்படி சிதைக்கப்பட்ட கசப் பான வரலாற்றைத்தான் விவரிக்கிறது 'நாளி'.

வரி செலுத்தாத விவசாயிகள் மலைப் பாதைகளை அமைக்க அடிமைப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்பதும் தேக்குக் காடுகளை அமைக்க ஒவ்வோர் இடமாக அழிக்கப்பட்டு அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்பட்ட பழங்குடிகள் ஒருகட்டத்தில் தங்கள் பூர்வீக வசிப்பிடங்களையே தொலைத்ததும் திடுக்கிட வைக்கிறது.

தங்கவேட்டை என்ற பெயரில் தோண்டி அழிக்கப்பட்டு சிதைக்கப்பட்டக் காடுகள், நீர் வளத்துக்கு எனத் தேக்கப்பட்ட அணைகளால் மூழ்கி அழிந்த காடுகள், நீர் மின் திட்டங்களுக்கு எனச் சுரங்கங்களில் புதைந்துபோன காடுகள் என ஒவ்வொரு காலகட்டத்திலும் காடு சிந்திய ரத்தம் அடர்த்தியான கவிச்சிவாடை அடிப் பதாகத் தோன்றுகிறது.

குடியிருப்பு, சொகுசு விடுதிகளைச் சுற்றிப் போடப்படும் கம்பி வேலிகளில் காலம் கால மாகப் பயணப்பட்ட தடங்களைத் தொலைத்த யானைகள் பாதை மாறி, வேலிகள் அமைத்து பழக்கப்படாத பழங்குடியினரின் பகுதிகளுக்குள் புகுந்து, அவர்களின் விளை நிலத்தைத் துண்டாடும் அவலம் நிகழ்ந்துகொண்டு இருக்கிறது.

நாட்டில் 30 சதவிகிதம் காடுகள் இருக்க வேண்டும் என்னும் அரசியல்தனத்தில் இந்தச் சமூகத்துக்கு எவ்விதப் பயனும் இல்லை என்பதைக்  கொதிப்பாகப் பதிவு செய்கிறது 'நாளி'.  

பூர்வகுடிகளை விரட்டிவிட்டுத் தேக்கு மர வீடு, காபி, தேநீர், சுற்றுலா, சொகுசுஅரசியல் எனச் சிலர் இப்போது வாழ்ந்துகொண்டு இருப் பது எல்லாம் ஒரு வாழ்க்கையா?

இந்தக் கருத்துகளை மிகுந்த மெனக்கெடலுடன் ஆவணப்படமாக்கி இருக்கும் கோவன் வெளியீட் டகத்துக்குப் பாராட்டுக்கள்!



நன்றி: ஆனந்தவிகடன் கட்டுரை

மருந்துக் கம்பெனியின் நேர்மை ?


செய்த தவறுக்கு பொதுவாக யாரும் பொறுப்பேற்பதில்லை. பழியை அடுத்தவர் பக்கம் தள்ளி விடுபவர்கள்தான் அதிகம். உலகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊனமான குழந்தைகள் பிறக்க காரணமாக இருந்த ஒரு மருந்து கம்பெனி, ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்குப் பிறகு மன்னிப்பு கேட்டுள்ளது. ஜெர்மனியை சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனம் குருநேந்தல். கடந்த 1960ம் ஆண்டு தலிடோமைடு என்ற மாத்திரையை அறிமுகம் செய்தது. கர்ப்பிணிப் பெண்களின் வாந்தி, மயக்கத்தை தடுத்து நிறுத்தும் மருந்து இது. உலகம் முழுவதும் 50 நாடுகளில் விற்பனை செய்யப்பட்டது. இந்த மாத்திரையை சாப்பிட்ட பெண்களுக்கு கை, கால்கள் ஊனத்துடன் குழந்தைகள் பிறந்தன. இப்படி 10 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள். இந்த பிரச்னையால், அடுத்த ஆண்டே இந்த மருந்து தயாரிப்பை ந¤றுவனம் கைவிட்டது. எதனால் இப்படி ஏற்பட்டது, மாத்திரையில் என்ன பிரச்னை என எந்த தகவலையும் நிறுவனம் வெளியிடவில்லை. நிறுவனத்துக்கு எதிராக எத்தனையோ போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடந்தபோதும்  வாயே திறக்கவில்லை. இந்த நிலையில்தான் 50 ஆண்டுகளுக்கு பிறகு மன்னிப்பு கேட்டிருக்கிறார் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி. நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ள மேற்கு ஜெர்மனியின் ஸ்டோல்பெர்க் நகரில் தலிடோமைடு பாதித்தவர்களின் நினைவாக நடந்த கூட்டத்தில் மன்னிப்பு கேட்டிருக்கிறார். எங்கள் தயாரிப்பான தலிடோமைடு மாத்திரை சாப்பிட்டதால் பாதிக்கப்பட்ட தாய்மார்களும் ஊனமாக பிறந்த குழந்தைகளும் எங்களை மன்னிக்க வேண்டும் என உருக்கமாக கேட்டிருக்கிறார். கடைசி வரைக்கும் இதற்கும் தங்களுக்கும் சம்பந்தமே இல்லை என வாதாடாமல் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகாவது நிறுவனம் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டது நல்ல விஷயம்தான். என்றாலும் இது தங்கள் அவமானப்படுத்துவதாக உள்ளது என கொந்தளிக்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள்.

புதிதாக மருந்து, மாத்திரை அறிமுகம் செய்வதற்கு முன்பு, முதலில் எலிகளுக்கும் பின்னர் ஏழை நாடுகளில் உள்ள நோயாளிகளுக்கும்  கொடுத்து சோதனை செய்வார்கள் (ஆம். அவர்கள் எலிகளை விட சற்றே மேம்ப்பட்டவர்கள்). எதிர்பார்த்த ரிசல்ட் கிடைத்த பிறகே, விற்பனைக்கு வரும். ஆனால் அதன்பிறகும் பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது. அப்படி வரும்போது அதற்கு தார்மீக பொறுப்பேற்க வேண்டும். அதுதான் நேர்மை. 

இன்னும் ஐம்பது ஆண்டுகள் கழித்து எத்தனை கம்பெனிகள் தங்கள் நேர்மையை உலகுக்குப் பறை சாற்றுவர்களோ? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 



நன்றி: Dinakaran

சகாரா திரட்டிய நிதி


அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசைகாட்டி கிராம மக்களிடம் வசூல் செய்த பணத்தையெல்லாம் வட்டியுடன் திருப்பிக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் இந்தியாவின் மிகப்பெரிய குழும நிறுவனமான சகாராவின் இரு கம்பெனிகளுக்கு ஏற்பட்டுள்ளது. சகாரா ரியல் எஸ்டேட், சகாரா ஹவுசிங் இன்வெஸ்ட்மென்ட் ஆகிய இரண்டும் திருப்பி கொடுக்க வேண்டிய தொகை இருபத்து நாலாயிரம் கோடி + 15 சதவீத வட்டி. பல காரணங்களால் இது ஒரு அசாதாரணமான வழக்கு. சகாரா அதிபர் சுப்ரதோ ராயின் செல்வாக்கு அபரிமிதமானது. முப்பது ஆண்டுகளுக்கு முன் ஒரு ஸ்கூட்டரில் உ.பி கிராமங்களில் சுற்றி வெறும் இரண்டாயிரம் ரூபாய் வசூலித்து சேமிப்பு தொழிலை தொடங்கியவர் இன்று அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மாபெரும்  ஓட்டல்களை வாங்கிப் போடும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார். இந்திய கிரிக்கெட், ஆக்கி அணிகளை ஸ்பான்சர் செய்கிறார். மீடியா முதல் மின்சாரம் வரை  பல துறைகளில் கால் பதித்துள்ளார். அவர் வீட்டு கல்யாணத்துக்கு பிரதமர் வருவது சாதாரண நிகழ்வு. இவ்வளவு பிரபலமான  குழுமத்தின் வரவு செலவு கணக்குகள் ரகசியமானவை. நாங்கள் தனிப்பட்ட முறையில் திரட்டும் பணத்தை பங்குச்சந்தை கண்காணிப்பு அமைப்பான செபி ஆராய தேவையில்லை என்பதுதான் நீதிமன்றத்திலும் சகாரா முன்வைத்த வாதம். 50 பேருக்கு மேல் பணம் முதலீடு செய்தால் அந்த நிறுவனம் செபியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு ஆக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அடித்துச் சொல்லிவிட்டது. சகாரா திரட்டிய நிதி பெரும்பாலும் வங்கிகள் இல்லாத கிராமங்களில் வசிக்கும் மக்களுடையது. அப்படி பணம் கொடுத்தவர்கள் யார், எந்த முகவரியில் வசிக்கிறார்கள், எவ்வளவு முதலீடு செய்தார்கள்  என்ற எந்த விவரத்தையும் செபியிடம் சகாரா தாக்கல் செய்யவில்லை. பெட்டிக்கடையில் சிகரட் விற்பவர்கூட இதைவிட சிறப்பாக கணக்கு  வைத்திருப்பார் என்று குறிப்பிட்டுள்ளார் நீதிபதி. இதற்குமுன்  சகாராவின் இன்னொரு கம்பெனி  ஃபைனான்சியல் கார்ப்பரேஷன்    இதே பாணியில் மக்களிடம் 73,000 கோடி திரட்டி இருந்தது. விதிகளை பின்பற்றாமல் வசூலித்த இருபதாயிரம் கோடியை ஏழு ஆண்டுக்குள் மக்களுக்கு திருப்பி கொடுக்குமாறு ரிசர்வ் பாங்க் கூறியது. (நான்கு ஆண்டுகளுக்குள் கொடுத்து விட்டதாக சகாரா சொல்கிறது). அந்த சிக்கலுக்கு பிறகும் சகாராவின் வேறு இரண்டு கம்பெனிகள் அதே வழியில் பணம் திரட்டியது உச்ச நீதிமன்றத்தின் கோபத்தை தூண்டியது. ஒரு நிறுவனம் பொதுமக்களிடம் நிதி திரட்டினால், அதை திருப்பிக் கொடுக்கும் சக்தி அந்த நிறுவனத்துக்கு இருக்கிறதா என்பதை கண்காணிப்பது செபியின்  வேலை. ஆனால் செபி, ரிசர்வ் பாங்க் வழிமுறைகளை பின்பற்றாமல் சகாரா தொடர்ந்து ஐம்பதாயிரம் கோடி, முப்பதாயிரம் கோடி என நிதி திரட்டியது கண்காணிப்பு அமைப்புகளின் சந்தேகத்துக்கு வலு சேர்த்தது. அரசியல்வாதிகள் மற்றும் பல துறைகளை சேர்ந்த பெரும் புள்ளிகளின் கருப்புப் பணம் சகாரா மூலமாக வெள்ளையாக்கப்படுகிறது என்ற பேச்சும் பரவலாக எழுந்தது. (சகாரா நேற்று பல பத்திரிகைகளில் வெளியிட்ட முழுப்பக்க விளம்பரத்தில் இதுபற்றி குறிப்பிடப்பட்டுள்ளது). இந்திய தலைமை நீதிபதி கபாடியாவும் வழக்கு விசாரணையின்போது பல கேள்விகளை எழுப்பியிருந்தார். இதற்கிடையில் இந்தியா டுடே இதழுக்கு பேட்டி அளித்த சுப்ரதோ ராய் 2010 ஜூன் 30 நிலவரப்படி சகாராவுக்கு ஒரு லட்சம் கோடிக்கு மேல் சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். எனினும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்ற இன்னும் மூன்று மாதங்களுக்குள்  முப்பதாயிரம் கோடியை அது பட்டுவாடா செய்ய முடியுமா என்பது கேள்விக்குறி. சகாரா அளிக்க இருக்கும் பட்டியலில் பெயர், முகவரி, முதலீடு செய்த தொகை ஆகியவற்றில் ஏதாவது ஒரு தகவல் சரியில்லை என்றால் அந்த முதலீட்டாளர் பெயரில் சகாராவிடம் உள்ள பணம் அரசின் கஜானாவுக்கு போய்விடும் என்று உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

வர்த்தக உலகம் மிகவும் உன்னிப்பாக கவனித்து வந்த இந்த வழக்கில் செபி சார்பில் அரசின் சீனியர் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகாதது ஆச்சரியம். சகாரா பிரபல சட்ட மேதைகளான சோலி சொரப்ஜி, ஃபாலி எஸ்.நாரிமன் உள்ளிட்ட படையை முன்னிறுத்தியது. மூத்த சென்னை வழக்கறிஞர் அரவிந்த் தத்தார் செபியின் சார்பில் ஆஜராகி மேற்படி மேதைகள் சகாராவின் நலன் காக்க முன்வைத்த புதுப்புது சட்ட விளக்கங்களை ஒவ்வொன்றாக தகர்த்தார். அதன் முடிவில் அருமையான தீர்ப்பு எழுதப்பட்டிருக்கிறது. சிறு முதலீட்டாளர்களுக்கு இதன் மூலம் நல்ல பாதுகாப்பு கிடைக்கும்.  இந்திய நிதி, சட்டம் மற்றும் நீதித்துறைகளின் வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது.




நன்றி: Dinakaran 

Sunday, 2 September 2012

விளையாட்டுக் கல்வி


உன்முக்த் சந்த் சுலபத்தில் நினைவில் பதியாத பெயர். பாதகமில்லை. டெண்டுல்கர் என்பதும் முதலில் கஷ்டமாக இருந்ததுதான். இளைஞர் கிரிக்கெட் உலக கோப்பையை வென்று வந்த வீரன் உன்முக்த் அந்த சாதனைக்காக மட்டும் பேசப்படவில்லை. அடிக்கடி போட்டி, பயிற்சி என்று போனதால் வகுப்புக்கு ஒழுங்காக வரவில்லை. போதுமான அட்டெண்டன்ஸ் இல்லாததால் கல்லூரி தேர்வை எழுத அனுமதிக்கவில்லை. ஃபெயிலாக்கி விட்டது பல்கலைக்கழகம்.  சர்வதேச அரங்கில் போராடி ஜெயித்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்த இளைஞனுக்கு  அவமானமா என சீறுகிறது ஒரு கூட்டம். டீம் இந்தியா கேப்டன் டோனி உள்ளிட்ட பெருங்கூட்டம் அது. இன்னொரு பக்கம் விளையாட்டு என்றாலே (அதுவும் கிரிக்கெட் என்றால் நூறு சதவீதம்) அலர்ஜி என ஒதுங்கி நிற்கும் கூட்டம். 'கல்லூரியில் படிப்புதான் முக்கியம். விளையாட்டெல்லாம் அப்புறம். ஒழுங்காக வகுப்புக்கு வராதவனுக்கு எப்படி ஹால் டிக்கெட் கொடுப்பது? கல்லூரி நிர்வாகம் செய்தது கரெக்ட்' என்கின்றனர் இவர்கள். 'அப்படியானால் ஸ்போர்ட்ஸ் கோட்டா எதற்கு?' என்று உன்முக்த் ஆதரவாளர்கள் கேட்கின்றனர். அந்த பிரிவில் அட்மிஷன் பெற்றவர்கள் விளையாட அல்லது பயிற்சிக்கு செல்லும்போது அட்டெண்டன்ஸ் கொடுப்பது வழக்கம்தான்.  கீர்த்தி ஆசாத் அதை சுட்டிக் காட்டுகிறார். 'நான் ஆடாத ஆட்டம் இல்லை, போகாத பயிற்சி இல்லை, எனக்கு இந்த பிரச்னையே ஏற்பட்டது இல்லை' என்று உன்முக்த் படிக்கும் ஸ்டீபன்ஸ் காலேஜ் பிரின்சிபலை கேட்டுள்ளார் கீர்த்தி.  கல்வி, விளையாட்டு துறைகளின் அமைச்சர்கள், டெல்லி முதலமைச்சர் எல்லாம் பேசிய பிறகு துணைவேந்தர் இறங்கிவந்து, உன்முக்த் இரண்டாம் ஆண்டுக்கு போகலாம் என பச்சைக்கொடி காட்டியுள்ளார். எதிர்ப்பாளர்கள் கூறுவதுபோல் உன்முக்த் சராசரி மாணவன் அல்ல. சராசரிகள் அந்த கல்லூரியில் சேர முடியாது. தவிர, ஆசிரியர்களின் மகனான உன்முக்த் உலக கோப்பைக்காக ஆஸ்திரேலியா சென்றபோதும் புத்தகங்களை எடுத்துச் சென்று தினமும் படித்திருக்கிறார். விளையாட்டும் சிறந்த வாழ்க்கைக்கு வழிகாட்டும் பயனுள்ள பாடத்திட்டம் என்ற உண்மையை கல்வி நிர்வாகிகள் உணரும்போது உன்முக்த் போன்ற மாணவர்களுக்கு வீணான சோதனைகள் ஏற்படாது.




நன்றி: Dinakaran 

‘அவைக்கு வாருங்கள், விவாதிப்போம்’


முலாயம் சிங் யாதவ் இன்று களம் இறங்குகிறார். பிரதமர் பதவி மீது கண் வைத்துள்ள அரை டஜன் பிராந்திய கட்சி தலைவர்களில் முதன்மையானவர் முலாயம். அவருடைய சமாஜ்வாடி கட்சி உத்தர பிரதேசத்தில் ஆட்சி செய்கிறது. முதலமைச்சர் பொறுப்பை மகனிடம் கொடுத்துவிட்டு கனவை நனவாக்கும் திட்டத்துடன் டெல்லி அரசியலில் மூழ்கியிருக்கிறார். நாடாளுமன்றம் முடக்கப்படுவதை கண்டித்து இன்று தர்ணா நடத்துகிறார். மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், தெலுங்குதேசம் கட்சிகளின் தலைவர்களும் முலாயமுடன் கைகோர்த்துள்ளனர். பிரதமர் நாற்காலியை எட்டுவதற்கு மூன்றாவது அணி உதவும் என்ற நம்பிக்கையில் அதற்காக பெரிதும் பாடுபட்டவர்தான் அவர். ஆனால் மூன்றாவது அணி என்ற பிரயோகமே மக்களிடம் கேலிப் புன்னகையை வரவழைக்கும் நிலை உருவான பின்னர் அதையெல்லாம் நிறுத்திக் கொண்டார். எனவே இன்று நடக்க இருப்பது பாரதிய ஜனதா கட்சியால் முடக்கி வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை மீண்டும் செயல்பட வைப்பதற்காகவே என்று நம்பலாம். பா.ஜனதாவின் கூட்டாளிகளான பிஜு ஜனதா தளம், அகாலி தளம் போன்ற மேலும் பல கட்சிகளும் நாட்டின் மிக உயர்ந்த ஜனநாயக பீடத்தை உயிர்ப்பிக்க ஒன்று சேரக்கூடும். 'அவைக்கு வாருங்கள், விவாதிப்போம்' என அனைத்து தலைவர்களும் அழைப்பு விடுத்தும் பா.ஜ முரண்டு பிடிப்பது  ஏற்கனவே இருந்த சந்தேகத்துக்கு உரமிடுகிறது. அந்த கட்சி ஆளும் மாநிலங்களின் பங்களிப்பும் இருப்பதால் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக விவாதிக்க அது தயங்குகிறது என்று காங்கிரஸ் பலமுறை கூறியுள்ளது. இரண்டு கட்சிகளும் சேர்ந்து நாடகம் நடத்துகின்றன என்று இடதுசாரி கட்சிகள் இப்போது குற்றம் சாட்டுகின்றன. முன்பு காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருந்த நேரத்தில் நாடாளுமன்றத்தை செயல்படாமல் முடக்கிய நிகழ்வுகளை மக்கள் மறக்கவில்லை. ஆனால் காங்கிரசின் தவறு பா.ஜனதாவின் தவறை நியாயப்படுத்த முடியாது. அவையில் மக்களின் பிரச்னைகளை விவாதித்து தீர்வு காண விரும்பும் பெரும்பான்மையான எம்.பி.க்களை 114 பேரை கொண்டிருக்கும் கட்சி பிணைக் கைதிகளாக்க முனைவது ஜனநாயகத்துக்கு விடுக்கப்படும் மிரட்டல். விவாதித்து ஒன்றும் ஆகப்போவதில்லை என்றால் வீணாக அந்த அவையில் உறுப்பினராக இருப்பானேன்?




நன்றி: Dinakaran 

இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் நிர்வாண விளையாட்டு


இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் நிர்வாண விளையாட்டு அவரது பட்டத்துக்கும் காதலுக்கும் உலைவைக்கும் போலிருக்கிறது. ராணுவ ஹெலிகாப்டர் பைலட்டாக பணிபுரியும் ஹாரி விடுமுறையை கொண்டாட நண்பர்களுடன் அமெரிக்கா போனார். உலகின் சூதாட்ட தலைநகரம் என்று வர்ணிக்கப்படும் லாஸ் வேகஸ் நகரின் பிரமாண்டமான ஓட்டலில் தங்கியவர்  அங்குள்ள மதுக்கூடத்தில் சந்தித்த அழகான சில பெண்களை தன் அறைக்கு அழைத்துச் சென்று பில்லியர்ட்ஸ் விளையாடியிருக்கிறார். ஆட்டத்தில் தவறு செய்யும் ஒவ்வொரு முறையும் உடுத்தியிருக்கும் ஆடைகளில் ஒன்றை களைய வேண்டும் என்பது விதி.இப்படியெல்லாம் நடக்குமா என்று ஆச்சரியம் வேண்டாம். லாஸ் வேகஸ் நகரில் எதுவும் நடக்கும். ஏனைய நகரங்களில் சட்ட விரோதமானது என பிரகடனம் செய்யப்பட்டுள்ள பெரும்பாலான செயல்களுக்கு அங்கே அனுமதி உண்டு. இளவரசருடன் இருந்த பெண்களில் ஒருத்தி சூடான காட்சிகளை செல்போன் கேமராவில் பதிவு செய்திருக்கிறாள். நிர்வாண பெண்ணொருத்தி ஹாரியின் பின்னால் ஒட்டிக் கொண்டு நிற்கிறாள். ஹாரி தனது ராஜமுத்திரையை (குறும்புக்கார லண்டன் நாளேடுகள் சூட்டிய பெயர்) கைகளால் போர்த்திக் கொண்டிருக்கிறார். மங்கலான இந்த படத்தை எடுத்தவள் அதை பத்தாயிரம் பவுண்டுக்கு ஒரு இணையதளத்துக்கு விற்றுவிட்டாள். அடுத்த நிமிடம் உலகம் முழுக்க ஹாரியை பிறந்தமேனியாக பார்த்து அதிர்ந்தது. இது ஹாரியின் அந்தரங்கத்தில் குறுக்கிடுவதாகும்; ஊடக சட்டங்களுக்கு முரணானது எனக்கூறி பத்திரிகைகள் அதை வெளியிடக்கூடாது என அரச குடும்ப வழக்கறிஞர்கள் எச்சரித்தனர்.

மிகப்பெரிய நாளிதழான சன் அந்த தடையை கிண்டலடிக்கும் வகையில் தனது ஊழியர்கள் இருவரை அதே மாதிரி போஸ் கொடுக்க வைத்து முதல் பக்கத்தில் பிரசுரித்தது. அந்த வாலிபரின் பெயரும் ஹாரி. தலைப்பு போட கஷ்டமே இல்லை. அடுத்த நாள் அசல் அம்மண ஹாரியை முதல் பக்கம் பிரசுரித்து 'ஊடக சுதந்திரம்' ஒடுக்க முடியாதது என  அறிவித்துள்ளது. இது வெறும் செய்தியாக தெரியவில்லை. டெலிபோன் ஒட்டுக்கேட்பு புகாரால் நியூஸ் ஆப் தி வேர்ல்ட் பத்திரிகையை  மூட நேர்ந்து வழக்குகளை எதிர்கொண்டுள்ள ஊடக பேரரசன் ருபர்ட் முர்டோக் பிரிட்டிஷ் அரசுக்கு விடுத்துள்ள குறுந்தகவலாக தோன்றுகிறது.



நன்றி: Dinakaran

ஆசிரியர் தேர்வு: தகுதி வேண்டாமா?

கல்வி மட்டும்தான் சாதாரண ஆட்களையும் உயரத்துக்கு அழைத்து செல்லும். கிராமத்தில் படிப்பறிவு இல்லாத குடும்பத்தில் பிறந்தவர்களும் ஏழைகளும் முன்னேற ஒரே வழி படிப்புதான். அந்த படிப்பை சொல்லிக் கொடுக்க வேண்டிய ஆசிரியர்கள் முழுத் தகுதியுடன் இருந்தால்தான் அது சாத்தியமாகும். சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய 6 லட்சத்து 76 ஆயிரம் பேரில் வெறும் 2448 பேர் மட்டுமே பாசாகியிருக்கிறார்கள். தேர்வு எழுதியவர்களில் பெரும்பாலோர் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களாக இருக்கிறார்கள்.பி.எட் முடித்தவுடன் வேலைக்கு சேர்ந்தால் படித்ததை மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கலாம். ஆனால் அப்படி வேலை கிடைப்பதில்லை. வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்து காத்திருந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு படித்ததெல்லாம் மறந்த பிறகு வேலை கிடைக்கும். சொல்லிக் கொடுக்க வேண்டியவர்களே படிக்க வேண்டிய நிலைமை. இதனால் ஆசிரியர்களின் தகுதியை அதிகரிக்கும் வகையில் தேர்வு நடத்தப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்ற இந்த தேர்வில் பாஸ் ஆக வேண்டும். அதற்குத்தான் 6 லட்சத்து 76 ஆயிரம் பேர் போட்டியிட்டனர். 60 சதவீத மார்க் எடுத்தால் பாஸ். ஆனால் அதை எடுக்க முடியாமல் 6 லட்சத்து 73 ஆயிரம் பேர் பெயிலாகி இருக்கிறார்கள். மாணவர்களுக்கு இருப்பதுபோல் 35 மார்க் எடுத்தாலே பாஸ் என அறிவிக்க வேண்டும் என தேர்வு எழுதியவர்கள் கோரியிருக்கிறார்கள். நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். இப்போது மீண்டும் ஒரு முறை தேர்வு எழுத வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.  

ஆசிரியர் தனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்து விட முடியாது. அப்படியே சொல்லிக் கொடுத்தாலும் அத்தனையும் மாணவனுக்கு புரிந்து விடாது. புரிந்த அத்தனையும் தேர்வில் எழுத முடியாது. இப்படி கற்பது குறைந்து கொண்டே வந்தால் எப்படி புத்திசாலி மாணவனை உருவாக்க முடியும். ஆசிரியர் அறிவாளியாக இருந்தால்தான், அதிக தகுதியுடன் இருந்தால்தான் சிறந்த மாணவனை உருவாக்க முடியும். ஒரு குடும்பத்தில் ஒருவர் நன்கு படித்து நல்ல வேலைக்கு வந்துவிட்டால் குடும்பம் முன்னேறி விடும். அதே போல் ஒரு நாட்டில் கல்வி சிறந்து விளங்கினால் அந்த நாடே முன்னேறி விடும்.



நன்றி:Dinakaran

ஓர் இந்தியர்கூட 'ரத்னம்' இல்லையா?

ச்சின் ரமேஷ் டெண்டுல்கர் X மங்களம் பள்ளி பாலமுரளிகிருஷ்ணா.

 டெல்லியில் பாரத ரத்னா விருதுப் பந்தயத்தின் இறுதி ஆட்டத்தில் இப்போது இந்த இரு பெயர்கள்தான் அடிபடுகின்றன.

பாலமுரளிகிருஷ்ணா சங்கீத வாழ்க்கையைத் தொடங்கியது தன்னுடைய ஆறாவது வயதில். காந்தக் குரல் என்பார்களே... அந்தச் சொல்லாடல் அப்படியே பொருந்தும். கேட்டவர்களை அப்படியே வாரிச் சுருட்டி அணைத்துக்கொள்ளும் குரல். தியாகராஜ சிஷ்யப் பரம்பரையில் வந்த பாரப்பள்ளி ராமகிருஷ்ணா பந்துலுவின் சிஷ்யர் பாலமுரளிகிருஷ்ணா. விஜயவாடா தியாகராஜர் ஆராதனையில் உட்கார்ந்து பாடியபோது அவருக்கு எட்டு வயது. 15 வயதுக்குள் 72 மேளகர்த்தா ராகங்களும் அவருக்கு அத்துப்படி. ஒரு பாடலை மொழி புரிந்து பாடுவதற்கும் புரிந்துகொள்ளாமல் பாடுவதற்கும் வித்தியாசம் உண்டு. பாடலின் கண்ணைத் திறப்பது மொழிதான். அதை உணர்ந்தவர் பாலமுரளிகிருஷ்ணா. தாய்மொழி தெலுங்கு தவிர, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி, சம்ஸ்கிருதம், பஞ்சாபி, வங்கம் என்று பல மொழிகளைக் கற்றவர். பன்முக மேதை. தேர்ந்த வாக்கேயக்காரர். ஏராளமான பாடல்களை இயற்றி, இசை கோத்து இருக்கிறார். வர்ணங்கள், கீர்த்தனைகள், ஜாவளிகள், தில்லானாக்கள் என்று 400-க்கும் மேற்பட்ட உருப்படிகளை தமிழ், தெலுங்கு, சம்ஸ்கிருத மொழிகளில் உருவாக்கி இருக்கிறார். வயலின், மிருதங்கம், வயோலா, கஞ்சிரா என்று பல வாத்தியக் கருவிகளை வாசிக்கத் தெரியும். கர்னாடக சங்கீதத்தை சினிமாவில் வெற்றிகரமாகப் பயன்படுத்தியவர்களில் பாலமுரளிகிருஷ்ணா முக்கியமானவர். திரைப்படத் துறையிலும் சாதித்தவர். 1987-ல் 'மாதவாச்சார்யா' படத்துக்காகச் சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருதைப் பெற்றார். தமிழில் 'திருவிளையாடல்' படத்துக்காக அவர் பாடிய 'ஒரு நாள் போதுமா...' பாடலை மறக்க முடியுமா என்ன?

உன்னதமான கர்னாடக சங்கீ தத்தை வெகுஜன மக்கள் ரசனைக்கு எடுத்துச் சென்றதிலும், வெளிநாட்டவர் மத்தியில் இந்திய இசை யைக் கொண்டுசென்றதிலும் பால முரளிகிருஷ்ணாவின் பங்களிப்பு மகத்தானது. கர்னாடக சங்கீதத்தில் யாருமே கையாளாத பல ராகங்களை அநாயாசமாக அவர் கையாள்வார். செவ்விசையில் நாட்டுப்புறப் பாடல்களைக் கலந்து கொடுப்பதில் வித்தகர். பீம்ஷென் ஜோஷி, ஹரிபிரசாத் சௌராஷியா, கிஷோரி அமோம்கர் போன்றவர்களுடன் இணைந்து அவர் நடத்திய ஜுகல்பந்திகள் ஒரு புதிய இசை அலைக்கு வித்திட்டன. ''உங்களுக்கு இணையாக என்னால் பாட முடியாது'' என்று பாலமுரளிகிருஷ்ணாவின் மேதைமைக்கு மகுடம் சூட்டினார் பீம்ஷென் ஜோஷி!

இப்போது பாலமுரளிகிருஷ்ணாவுக்கு 82 வயது. 25 ஆயிரம் கச்சேரிகளைத் தாண்டி அவருடைய கலைப் பயணம் தொடர்கிறது. கலையால் - இசையால் வேறுபாடுகளின் எல்லைகளைக் கடக்கச் செய்ய முடியும்; தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்க முடியும் என்பது உண்மையானால், பாலமுரளிகிருஷ்ணாவுக்கு எப்போதோ பாரத ரத்னா விருது அளிக்கப்பட்டு இருக்க வேண்டும். வடக்கத்திய அரசியல் ஆதிக் கம் மிக்க பாரத ரத்னா விருதுப் பட்டியலில் பண்டிட் ரவிஷங்கர், லதா மங்கேஷ்கர், பிஸ்மில்லா கான், பீம்ஷென் ஜோஷி என்று இது வரை இசை சார்ந்து இடம் பெற்றிருக்கும்  கலைஞர்களில் ஒரே விதிவிலக்கு எம்.எஸ்.சுப்பு லட்சுமி. இப்படிப்பட்ட சூழலில்தான் பாலமுரளிகிருஷ்ணாவுக்கு பாரத ரத்னா அளிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கைக்கு கோதாவில் சச்சினைக் களம் இறக்கி இருக்கிறது வடக்கத்திய அரசியல்.

சச்சினை மனதில்வைத்துதான் பாரத ரத்னா விருதுக்கான தகுதி வரையறையை விளையாட்டுத் துறைச் சாதனைகளையும் உள்ளடக்கியதாக அரசு மாற்றி அமைத்தது. பாரத ரத்னா விருதுக்கு எல்லா வகையிலும் சச்சின் தகுதியானவர். அதேசமயம், அவருக்கு முன் கௌரவிக்கப்பட வேண்டியவர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். அவருடைய துறையையே எடுத்துக்கொண்டால், சரியான உதாரணம் தயான் சந்த். ஹாக்கி ஆட்டத்தின் முடிசூடா சக்ரவர்த்தி. 1928, 1932, 1936 என்று மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணிக்குத் தங்கம் வென்று தந்தவர். 1936 பெர்லின் ஒலிம்பிக் போட்டிகளில் தயான் சந்த் ஆட்டத்தைப் பார்த்த ஹிட்லர், அவருக்குக் குடியுரிமை தருவதோடு பிரிட்டிஷ் ராணுவத்தில் அவர் வகித்த மேஜர் பதவிக்கு மேலான கர்னல் பதவியை ஜெர்மனி ராணுவத்தில் தருவதாகச் சொல்லிக் கூப்பிட்டார். தயான் சந்த் மறுத்துவிட்டார். ஹாலந்தில் அவருடைய ஹாக்கி மட்டையில் பந்தை ஈர்க்கும் வஸ்து ஏதும் பதிக்கப்பட்டு இருக்கிறதா என்று உடைத்துப் பார்த்தார்கள். ஆஸ்திரியாவில் அவருக்குச் சிலையே வைத்தார்கள்... நான்கு கைகள், நான்கு ஹாக்கி மட்டைகளோடு. இன்றைய தலைமுறைக்கு தயான் சந்த் யார் என்று தெரியாது. மறந்துவிட்டோம்!

நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா அறிவிப்புகள் பல முறை கேலிக்கு உள்ளாகி இருக்கின்றன. 1988-ல் எம்.ஜி.ஆர். இடம்பெற்று இரு ஆண்டுகள் கழித்துதான் பாரத ரத்னா விருதுப் பட்டியலில் அம்பேத்கர் இடம்பெற்றார். 1991-ல் ராஜீவ் காந்திக்கு பாரத ரத்னா அறிவித்தபோதுதான், அந்தப் பட்டியலில் வல்லபாய் படேலும் மொரார்ஜி தேசாயும் இடம்பெற்றனர். நாட்டின் கல்வித் தந்தையான அபுல்கலாம் ஆசாத்துக்கு அவர் இறந்து 34 ஆண்டுகள் கழித்து 1992-லும் ஜெயபிரகாஷ் நாராயணுக்கு 1999-லும் விருதை அறிவித்தார்கள். ஆனால், இவ்வளவு போட்டி நிலவும் ஒரு விருதுக்கான தேர்வு ஆண்டுதோறும் நடக்காதது ஏன் என்று தெரியவில்லை. 120 கோடி பேர் வாழும் ஒரு நாட்டில், ஆண்டுக்கு ஒருவரைக்கூடவா நாம் கௌரவிக்க முடியாது? காலம் கழித்து அளிக்கப்படும் அங்கீகாரம் அர்த்தமற்றது மட்டும் அல்ல; அவமதிப்பும்கூட!



நன்றி:ஆனந்த விகடன்

Saturday, 1 September 2012

ரத்தம் குடிக்கும் புத்தம்!

ரத்தம் குடிக்கும் புத்தம்!
பதைபதைக்கும் முஸ்லிம் படுகொலைகள்...

புத்தத்தை பூசிக்கும் தேசங்கள் ரத்தங்களையும் குடிக்கின்றன என்றால் அக்குருதியின்   பிரதிபலிப்பு சிங்களத்தையும் பர்மியத்தையும் நோக்கியதாக தான் இருக்கும்.சிங்களம்  இனத்தின் பேரால் மனிதனை புதைக்கிறது என்றால், பர்மியமோ மதத்தின் பேரால்  மனிதத்தை உடைத்து படுகொலைகளை புரிகிறது.

இலங்கையில் தமிழர்கள் வந்தேறிகளால் கொல்லப்படுகின்றனர்,பர்மாவில் வாழ வந்த  முஸ்லிம்கள் பர்மிய ராணுவம்-புத்த பிக்குகளால் கொல்லப்படுகின்றனர்.இரு நாட்டிலும்  பௌத்த வெறி ஓங்கி உள்ளது. அது தன் தாக்கும் விதத்தை மட்டும் இனம்-மதம் என  பிரித்துக்கொண்டுள்ளது.

கடவுள் இல்லை என்ற புத்தனை கடவுளாக்கி, அதை ஓர் மதமாக்கி, அதன் பெயரில்  ஏன் தான் இவ்வளவு படுகொலைகளோ ?

உலகின் கறுப்புச் சரித்திரத்தில் கடந்தகாலத்திலும், நிகழ்காலத்திலும்,  மதக்கோட்பாட்டால் நிகழ்ந்துகொண்டிருக்கும் மிகப்பெரிய படுகொலைகளின் பூர்வீகம் தான்  பர்மா.

பர்மா ராணுவ ஜனநாயகவாதிகளால் ஆளப்படும் நாடு...தேசியமயமாக்கப்பட்ட நதிகள்.  அதனால் இயற்கையில் வறுமை என்பதே இல்லை.தொழில்நுட்பத்தில் பின்தங்கிய  தேசம்.இந்தியாவை போலவே பல மொழி பேசும் இனத்தவர் உள்ள நாடு.ஆனால்  அம்மக்களுக்கென சுயாட்சி இல்லை; பர்மியர்களுக்கு கீழ் நிலையில் இருக்கும் கூட்டாட்சி  நிலை தான்.

சூகியே குரல் எழுப்புவதில்லை 

இவர்களின் கோட்பாடும்,வேற்றுமைக்குள் ஒற்றுமை தான்.ஆனாலும் சர்வதேச அளவில்  பின்னோக்கியுள்ள நாடுதான் அன்றைய பர்மாவும், இன்றைய மியான்மரும். பர்மா  என்றால் நமக்கு தெரிவதெல்லாம் 'ஆங் சாங் சூகி'மட்டுமே.அந்த சூகியே மாற்று  மத-இனத்தவர்களின் படுகொலைகளுக்கு பெரிதாக குரல் எழுப்புவதில்லை என்கிறபோதே  சூகியின் ஜனநாயக தத்துவம் பொய்பிக்கிறது.

சூகி பர்மிய இனத்துக்கு நல்ல தலைவர்; ஆனால் பர்மியத்தின் அனைத்து இனத்தவருக்கும்  நல்ல தலைவரல்ல...அப்படியிருந்தும் சூகியை நம்புகிறார்கள் வதைபடும் அம்மக்கள்.

பர்மாவின் இப்படுகொலைகளில் அதிகபடியாக சிக்குவதெல்லாம் முஸ்லிம் மதத்தவர்கள்  தான்.இன்றைய காலக்கட்டத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக முஸ்லிம்  மதத்தவர்களுக்கு எதிரான படுகொலைகளே பர்மாவில்  விடாமல் நிகழ்ந்து   கொண்டேயுள்ளன.

முகமறியா  எந்தயொரு தேசத்திலோ குண்டு வெடித்தால் கூட, அது முஸ்லிம்தான்  வைத்திருப்பான் என்பதே சர்வதேச கணக்கீடுகள்.அக்கணக்கீடை இவ்வுலகம் நிர்ணயித்துக்  கொண்டதால், எந்தயொரு முஸ்லிம் கொல்லப்பட்டாலும் சர்வதேச சமூகம்  அலட்டிக்கொள்வதில்லை.

பர்மிய சுதந்திரத்துக்கு முன்பே, இரண்டாம் உலகப்போரின் ஜப்பானிய  ஆக்கிரமிப்பின்போது பர்மிய-ஜப்பானிய ராணுவத்தால் 28 மார்ச்  1942 ம் ஆண்டு சுமார்  5,000 முஸ்லிம் மக்கள்  கொல்லப்பட்டனர்.

அன்றிலிருந்து தொடங்கிய வெறி இதுவரை 20,000 முஸ்லிம்களை கொன்றுள்ளது;  4,000 குடும்பங்களை அழித்தும், எரித்துமுள்ளது;300 மசூதிகளை மூடியுள்ளது;பல  லட்சம் மக்களை பர்மாவை விட்டு துரத்தியடித்துள்ளது.

பர்மிய முஸ்லிம்கள் 'ரோஹிங்க்யாஸ்' என்றழைக்கப்படுகின்றனர்.ஐ.நா.வின்  கணக்கெடுப்புபடி இவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சம்.இவர்கள் அதிகபடியாக  பங்களாதேஷ்-பர்மா எல்லையோரங்களில் வாழ்கின்றனர்.பல நூறாண்டுகளாக வாழும்  இந்த பர்மிய முஸ்லிம்களுக்கு பர்மாவில் குடியுரிமை கிடையாது.தங்கள் விருப்பத்திற்கு  திருமணம் செய்ய அனுமதியில்லை,கல்வியும் இவர்களுக்கு மறுக்கப்படுகின்றது.

கொலைகார புத்த பிக்குகள்

இவர்களது குழந்தைகள் கொத்தடிமைகளை போல் சிறு ஊதியத்துக்கு குழந்தை  தொழிலாளிகளாக்கப்படுகின்றனர்.பர்மாவில் பல்லாண்டுகளுக்கு குடியேறிய இவர்கள்  இன்னமும் அகதியாக தான் வாழ்கின்றனர்.சுற்றுலா சொர்க்கமாகவுள்ள இந்நாடு,  முஸ்லிம் சுற்றுலாவாசிகளை அனுமதிக்க மறுக்கிறது;மீறினால் அது கொலை  சுற்றுலாவாகத்தான் முடியும்.

இக்கொலைகளை நிகழ்த்துவது எல்லாம் பர்மிய ராணுவமும், புத்த பிக்குகளுமே. இவர்கள்  கூற்றுபடி பர்மா புத்த மதத்தவர்களுக்கானது,புத்தத்தை தழுவாதவர்கள் தீயவர்கள்  ...கடவுள் இல்லை என்றால் அவர்கள் புத்த மதத்துக்கு எதிரானவர்கள்.இங்கு புத்த  மதத்துக்கு  அடுத்தப்படியாக மக்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பது இந்து  மதத்தவர்கள்.ஆனால் இந்து கோவில்களிலும் கூட ஒரு புத்த சிலை இருக்குமாம்.  அப்படியிருந்தால் தாக்க வரும் பர்மிய ராணுவமோ-புத்த பிக்குகளோ 'நம் மதத்தின்  மீது  பற்றோடு இருக்கிறார்கள்' என திரும்பி சென்றுவிடுவார்களாம்.

ஆனால் பர்மிய முஸ்லிம்களோ ஓர் பாவ பிறவிகளாக, அப்பாவிகளாக  வதைப்படுகின்றனர்.இது போன்ற ஒடுக்குமுறைகளை எதிர்த்து சில முஸ்லிம் போராளி  குழுக்களும் உள்ளன.இவர்களை பார்த்த இடத்தில் கொல்லலாம் என்று அறிவிப்பும்  உள்ளது.ஒடுக்குமுறைக்கு எதிராக போராடும் எவரையும் ராணுவ ஜனநாயகம்  அனுமதிப்பதில்லை.

பர்மாவில் 20 லட்சத்திற்கும் மேலாக உள்ள தமிழர்களுக்கும் சுயமான சுதந்திர  வாழ்வில்லை-அவர்களும் புத்தத்துக்கு மாறிய பர்மியர்களாகவே வேடமிட்டு  வாழ்கின்றனர்.

புத்தனை போதிக்கும் தேசங்கள்  மனிதத்தை புதைத்து ரத்த வெறியோடு  திரிகின்றன.இவர்களுக்கு புத்தரின் வாக்கு ஏற்றதாக இருக்கும் "ஆசையால் வெற்றி  பெற்றவன் அந்தப் போதையால் தவறுகள் செய்து அழிவைத் தேடுவான்.ஆனால்  தன்னடக்கம் உள்ள மனிதன் அறிவுடன் சிந்தித்து எப்போதுமே இன்பமாக  வாழ்ந்திடுவான்"!

சில புத்த தேசங்கள் சிந்திக்காமல் ஆசை போதையில் உள்ளன;இவர்கள் ஒரு நாள்  அவர்களாகவே அழிவை தேடுவார்கள்..புத்தரின் வாக்கு போலவே !

                                                                                                                                           நன்றி:மகா.தமிழ்ப் பிரபாகரன்

Vikatan