வட கொரியா வெற்றிகரமாக ராக்கெட் ஏவி சோதனை செய்திருப்பது, அந்த நாட்டை நேர்வழிக்கு கொண்டுவர எடுக்கப்படும் சர்வதேச முயற்சிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள பெரும் சவால். சாதாரணமாக ஒரு நாடு இப்படியான சோதனையை வெற்றிகரமாக செய்வது கவலைக்குரிய விஷயம் அல்ல. வட கொரியா சாதாரண நாடல்ல. ரவுடி தேசம். மக்களுக்கு உரிமைகள் கிடையாது. அரசு அடக்குமுறை. பஞ்சம், பசி, பட்டினியால் நூற்றுக்கணக்கில் மக்கள் மடிகிறார்கள். வரிகளை போட்டு மக்களை பிழிந்து, பணத்தையெல்லாம் ஆயுத உற்பத்திக்கு செலவிடுகிறது அரசாங்கம். ஐ.நா சபையின் எந்த தீர்மானத்தையும் எச்சரிக்கையையும் அது மதிப்பதில்லை. அதனால் சர்வதேச பொருளாதார தடை விதிக்கப்பட்டது. அண்டை நாடான சீனா ஆதரவில் வடகொரியாவின் பிழைப்பு நடக்கிறது. இந்த பின்னணியில்தான் ராக்கெட் விட்டிருக்கிறது. ஏற்கனவே அதனிடம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், அணுகுண்டுகள் இருக்கின்றன. அடிக்கடி மிரட்டுவதால் பக்கத்து நாடுகள் பயப்படுகின்றன. குட்டியை விட்டு ஆழம் பார்க்கும் குரங்கு போல சீனா பின்னாலிருந்து ஆட்டுவிக்கிறதோ என்ற சந்தேகமும் இவற்றுக்கு உண்டு. இதன் விளைவு விரைவில் நடக்க இருக்கும் தென் கொரிய மற்றும் ஜப்பானிய தேர்தலில் எதிரொலிக்கும். அமைதி, நட்புறவு, பொருளாதார முன்னேற்றம் என்று பேசி வந்த அந்த நாடுகளில் பாதுகாப்பு, ஆயுத பலம், ராணுவ தயார் நிலை போன்ற வார்த்தைகள் பிரசாரத்தில் முதல் முறையாக இடம் பிடித்துள்ளன.
ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் ஆட்சி செய்த சர்வாதிகாரி கிம் சுங் இறந்து, அவர் இடத்துக்கு வந்த மகன் கிம் ஜோங் சர்வதேச எதிர்ப்பை மீறி ராக்கெட் சோதனை நடத்தியதை அவரது பிரஜைகள் கொண்டாடுகின்றனர். சட்ட திட்டங்களுக்குள் அடங்காத ரவுடி தேசம் என்று பெயர் பெற்ற இரானும் பாகிஸ்தானும் கொரியாவுக்கு உதவியுள்ளன. ஐ.நா தீர்மானம், பொருளாதார தடை, அரசு முறையான உறவு துண்டிப்பு, தனிமைப்படுத்துதல் போன்ற வழிகளில் எந்த நாட்டையும் மாற்றுப்பாதைக்கு திருப்ப முடியாது என்பதற்கு இது எடுத்துக்காட்டு. தவறு செய்யும் மனிதனாக இருந்தாலும் சரி, நாடாக இருந்தாலும் சரி ஒதுக்கி வைக்காமல் உறவு கொண்டு பழகித்தான் நல்ல வழிக்கு கொண்டுவர முடியும்.
