Monday, 22 October 2012

மன அழுத்தம் அதிகம்


மன அழுத்தத்தால் ஆண்களைவிட பெண்கள்  அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் என்று உலக நல்வாழ்வு நிறுவனம் கூறியுள்ளதை எந்த அளவுக்கு ஏற்க முடியும் என்று தெரியவில்லை. குறைந்தபட்சம் 10 சதவீத மக்கள் கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக மனநல கழகம் முன்பே அறிக்கை அளித்துள்ளது. தீராத சோகம், எதிலுமே நாட்டம் இல்லாதிருப்பது, எந்த சுகத்தையும் அனுபவிக்க இயலாதிருப்பது, எப்போதும் குற்ற உணர்வு, தாழ்வு மனப்பான்மை,  தூக்கம் பசி இல்லாதது, எல்லாம் முடிந்தது என்ற விரக்தி ஆகியவை கடுமையான மன அழுத்தத்தின் அடையாளங்களாக சொல்லப்படுகிறது. இந்த அறிகுறிகள் குறுகிய காலத்தில் வந்து போனால் பெரிய பாதிப்பு கிடையாது. நீடித்தால் விளைவுகள் மோசமாக இருக்கும் என டாக்டர்கள் கூறுகின்றனர். அந்த மாதிரியான மனநிலையே பல நோய்கள் உண்டாக காரணமாகலாம். தற்கொலை எண்ணம் வரலாம். ஆண்டுக்கு 10 லட்சம் தற்கொலைகள் , தினமும் மூவாயிரம் , நடக்கின்றன. மேஜர் டிப்ரசிவ் எபிசோட் , எம்எஸ்இ , என இதை ஒரு நோயாக மேலைநாடுகளில் கருதுகின்றனர். அலோபதி மருத்துவத்தில் இந்த நோய்க்கு மருந்துகளும் சிகிச்சை முறைகளும் சொல்லப்படுகிறது. தலைவலி, ஜலதோஷத்துக்கு டாக்டரிடம் போவதை போல மேலைநாடுகளில் மனநல மருத்துவரை சந்திப்பது சகஜமான விஷயம். ஆனால் அவர்களுக்கு மாறான கலாசாரத்தில் ஊறிப்போன இந்தியா போன்ற நாடுகளில் நிலைமை வேறு. நமது கலாசாரத்தில் மன உளைச்சலை நோயாக குறிப்பிடுவது இல்லை. மகிழ்ச்சி, கோபம் மாதிரி அதுவும் ஓர் உணர்வு. சிலருக்கு சீக்கிரம் மாறலாம், சிலருக்கு வாரக்கணக்கில் நீடிக்கலாம். பிரியமானவர்களை இழப்பது, வேலை பறிபோவது போன்றவை பெரும் சோகத்தில் தள்ளினாலும் அதனால் யாரையும் மன அழுத்த நோயாளி என நாம் முத்திரை குத்துவதில்லை. ஏமாற்றம், நம்பிக்கை குறைவு ஆகியவற்றை மன அழுத்தமாக பார்ப்பதில்லை.

உடல் உஷ்ணம், ரத்த அழுத்தம் போல மன அழுத்தம் அளக்கக்கூடியதாக இல்லை. ஆகவே எது ஆரோக்கியமான அளவு, எது ஆபத்தானது என யாரும் வரையறை செய்யவில்லை. மாறுபட்ட கலாசாரங்களில் வாழும் மக்களுக்கும் பொருந்தும்படியான நிர்ணயங்கள் அளவுகோல்கள் உருவாக்கப்படும் வரையில் மன அழுத்த மருத்துவம் இங்கே கொடிகட்டி பறப்பது சாத்தியமில்லை.



நன்றி: Dinakaran 

No comments:

Post a Comment