மின்சார பற்றாக்குறையால் தமிழ்நாடு கற்காலம் நோக்கி பின்னிறங்குகிறது. தேவையைவிட நாலாயிரம் மெகாவாட் மின்சாரம் குறைவாக கிடைப்பதாக அரசு தெரிவிக்கிறது. அதாவது 12,000 மெகாவாட்டுக்கு மேல் தேவை. கிடைப்பது எட்டாயிரம் மெகாவாட். அதிலும் காற்றாலைகள் மூலம் வரும் என கணக்கிட்டது 2900 மெகாவாட். கிடைப்பது 100 முதல் 500 வரையாம். இதனால் மாவட்டங்களில் 12 முதல் 16 மணி நேரம் வரையில் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. விவசாயம், சிறு தொழில், ஆலை உற்பத்தி, வணிகம் அனைத்தும் முடங்கிவிட்டன. மாணவர்கள் படிக்க வெளிச்சம் இல்லை. குழந்தைகள், முதியவர்கள் கொசு கடிக்காமல் தூங்க வழியில்லை. பெண்கள் சமைக்க, துவைக்க, தண்ணீர் பிடிக்க முடியவில்லை. வாழ்க்கை இந்தளவு மோசமாகும் என்று யார் எதிர்பார்த்திருக்க முடியும்? பிழைக்க வழியில்லாமல் கோவை, திருப்பூர், ஈரோடில் இருந்து சாரை சாரையாக தொழிலாளர்கள் வெளியேறுகின்றனர். உற்பத்தி முடங்கி வட்டி கட்ட திணறும் தொழிலதிபர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்க குஜராத் போன்ற மாநிலங்கள் காத்திருக்கின்றன. சென்னையில் வசிப்பவர்கள் மனது வைத்து ஏர்கண்டிஷனர், அயன் பாக்ஸ், வாட்டர் ஹீட்டர், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்களை இரண்டு மாதமாவது பயன்படுத்தாமல் இருந்தால், இங்கு மிச்சமாகும் மின்சாரத்தை மாவட்ட மக்களுக்கு கொடுக்க முடியும் என்று உயர் அதிகாரி ஒருவர் உருக்கமான வேண்டுகோள் விடுத்திருக்கிறாராம். தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாக கதவை தட்டி ஃபேன், மிக்சி, கிரைண்டர் இலவசமாக கொடுத்த அரசிடம் இருந்து இவ்வளவு சீக்கிரமாக இப்படியொரு அறிவுரையை மக்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். சரியாக கிடைக்காத மின்சாரத்துக்கு கட்டணத்தை மூன்று மடங்காக உயர்த்தியதில் இருந்தே பொதுமக்கள் ஸ்விட்ச் போடுமுன் மூன்று முறை யோசிக்கிறார்கள் என்பது அதிகாரிக்கு தெரியவில்லை. வண்ண விளக்குகளை பயன்படுத்தக்கூடாது என்ற அரசின் எச்சரிக்கைக்கு மாறாக, ஆடம்பர பொருள் விற்கும் கடைகள் இரவை பகலாக்கும் விளக்குகளால் ஜொலிப்பதும் அதிகாரிகளுக்கு மட்டும் தெரியவில்லை. மின்சார சிக்கனம் என்பது ஏழைகளும் நடுத்தர மக்களும் மட்டுமே பின்பற்ற வேண்டிய கொள்கை என அதிகாரிகள் நினைக்கிறார்கள் போலும்.
நன்றி: Dinakaran
No comments:
Post a Comment