Monday, 22 October 2012

தேர்தல் மணியோசை


இன்சூரன்ஸ், பென்ஷன் துறைகளில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்திருப்பதை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இரண்டாவது பாய்ச்சல் எனலாம். டீசல் விலை உயர்வு, சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு முதலாவது. அந்த நடவடிக்கைகளுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவையில்லை என்பதால் அரசுக்கு பெரிய ஆபத்து இல்லை. இப்போது அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் அவசியம். திருணாமுல் காங்கிரஸ் வெளியேறிய பிறகு காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு மன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மை  இல்லை. மம்தாவால் ஏற்பட்ட வெற்றிடத்தை  நிரப்ப முன்வந்த முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சியும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும்கூட இந்த அறிவிப்புகளை ஆதரிக்கும் என தோன்றவில்லை. அமெரிக்காவில் தொடங்கிய பொருளாதார சரிவின் ஆரம்பத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்டது அங்குள்ள இன்சூரன்ஸ், பென்ஷன், பாங்க் கம்பெனிகள்தான் என்பது மக்களுக்கு அதற்குள் மறந்திருக்காது. இந்த சூழ்நிலையில் இந்தியாவில் அதே பாணியிலான மாற்றங்களை பொருளாதார சீர்திருத்தம் என்ற முத்திரையுடன் அரசு அமல்படுத்துவதை அவர்களால் வரவேற்க முடியாது. டீசல் மானியத்தை விலக்கிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம், சில்லரை விற்பனையில் அன்னிய முதலீடுகளால் நேரக்கூடிய சாதகமான மாற்றங்கள் ஆகியவை குறித்தே இன்னமும் மக்களுக்கு விளக்கமாக எடுத்துச் சொல்லி அவர்களின் சந்தேகங்களை போக்க அரசு முன்வரவில்லை. இதனால் அரசின் நோக்கத்தை சந்தேகிக்காத நடுநிலையாளர்களும் தனிமைப்பட்டு நிற்கிறார்கள். பங்குச் சந்தையில் பட்டாசு வெடிப்பதால் மட்டும் நடப்பதெல்லாம் நல்லதுக்கே என்ற முடிவுக்கு நாட்டு மக்கள் வந்துவிட மாட்டார்கள். பொது நிலங்கள், நிறுவனங்கள், சொத்துகளை தனியாருக்கு அளிப்பது போதாதென்று கோடிக்கணக்கான மக்களுக்கு சேர வேண்டிய இன்சூரன்ஸ், பென்ஷன் நிதியும் கைமாற வழி வகுக்கப்படுகிறதோ என்ற பீதியை எதிர்க்கட்சிகளால் சுலபமாக உண்டாக்க முடியும். அதன் விளைவு இந்த ஆட்சி நீடிப்பதற்கு எந்த வகையிலும் உதவாது.சரியான விளக்கம் அளித்து மக்களின் நம்பிக்கையை பெறாமல் அடுத்தடுத்து வெளியிடப்படும் அறிவிப்புகள் அடுத்த ஆண்டே நாடாளுமன்ற தேர்தல் வருவதற்கான மணியோசையாக ஒலிக்கிறது.




நன்றி: Dinakaran 

No comments:

Post a Comment