Monday, 1 October 2012

மினி டாக்டர் ( பி.எஸ்சி கம்யூனிடி ஹெல்த்) பராக்


மூன்றரை ஆண்டு மருத்துவ படிப்புக்கு இந்திய மருத்துவ கழகம் அனுமதி வழங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறதா கவலை தருகிறதா என்று டாக்டர்களாலும் அதிகாரிகளாலும் சரியாக சொல்ல முடியவில்லை. எம்.பி.பி.எஸ் டாக்டர்கள் நகரங்களில் மட்டுமே வேலை செய்ய விரும்புகின்றனர். ஒரு வருடமாவது கிராமத்தில் பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனை பின்பற்றப்படுவதில்லை. நாட்டு மக்களில் 72 சதவீதம் பேர் கிராமங்களில் வசிக்கின்றனர். ஆனால் 26 சதவீத டாக்டர்கள்தான் அவர்களுக்கு கிடைக்கின்றனர். சம்பாதிக்கும் ஆசையும் நகரத்தின் வசதிகளும்தான் டாக்டர்களை கிராமங்களுக்கு போகவிடாமல் தடுக்கிறது என்று சொல்ல முடியாது. வசிக்கவும் தொழில் செய்யவும் சுகாதாரமான சூழல், குடிநீர், மின்சாரம், சாலை, பாதுகாப்பு போன்ற வசதிகளை உருவாக்கி கொடுத்தால் கிராமங்கள் கசக்காது. எனினும், மாற்று ஏற்பாடு செய்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் அரசு தள்ளப்பட்டுள்ளது புரிகிறது. கெடுபிடிகளை தளர்த்தி நிறைய மருத்துவ கல்லூரிகள் தொடங்க அனுமதிக்கலாம். அதை விடுத்து பி.எஸ்சி கம்யூனிடி ஹெல்த் என்ற புதிய படிப்பால் என்ன சாதிக்க முடியும் என தெரியவில்லை. மருத்துவ கல்லூரிகளில் சொல்லித் தருவார்களா, அறிவியல் கல்லூரிகளில் படிப்பதா, தனி கல்லூரிகள் நிறுவப்படுமா? பெயருக்கு முன்னால் டாக்டர் என்று போடலாமா? போடாவிட்டால்  நம்பிக்கையுடன் யாரும் சிகிச்சைக்கு வருவார்களா? இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்தவர்கள் பாணியில் ஜூனியர் டாக்டர் என்று சொல்லிக் கொள்ளலாமா? ஐந்தாண்டு படித்தவர்களே டெஸ்ட் எடுக்க அனுப்பி நோயை கண்டுபிடிக்கும் சூழலில் மூன்றரை ஆண்டு முடித்தவர்கள் நோயையும் காரணங்களையும் துல்லியமாக கண்டறிந்து மருந்து மாத்திரை சிபாரிசு செய்ய முடியுமா? நகரில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு நோயாளிகளை அனுப்பிவைக்கும் ஏஜன்டுகளாக இவர்கள் மாறிவிடாமல் தடுக்க வழி இருக்கிறதா? இவர்கள் நிரந்தரமாக கிராமங்களில்தான் தங்கி சேவை செய்வார்கள் என்பதை எவ்வாறு உறுதி செய்வது? ஏதேனும் துணை மருத்துவ படிப்பு முடித்து டாக்டர்களின் கீழ் நேரடி அனுபவம் பெற்றவர்களால் இந்த சேவையை வழங்க முடியாதா? இது போன்ற கேள்விகளுக்கு அரசும் மருத்துவ கழகமும் திருப்தியான பதில் அளித்தால்தான் புதிய திட்டத்தின் தகுதியை பொதுமக்களால் தீர்மானிக்க முடியும்.





நன்றி: Dinakaran 

No comments:

Post a Comment