எந்த சிகிச்சைக்கு எவ்வளவு கட்டணம் என்று போர்டு வைக்குமாறு மருத்துவமனைகளுக்கு உத்தரவிட மத்திய அரசு முனைந்திருப்பதை நல்ல மனம் படைத்த ஒவ்வொருவரும் வரவேற்பார்கள். நூறு கோடி மக்களுக்கும் மருத்துவ வசதி அளிக்கும் பொறுப்பை அரசு மட்டும் நிறைவேற்ற முடியாது என்பதை புரிந்துகொள்ள முடியும். ஆனால், மருத்துவ சேவை அளிப்பதாக அறிவித்து களத்தில் இறங்கிய தனியார் துறையினர் முழுமையான வர்த்தக கேந்திரங்களாக மருத்துவமனைகளை மாற்றியதை அரசு கட்டுப்படுத்த தவறியது மிகப்பெரிய ஏமாற்றம். கல்வித் துறையில் கண்ட அதே நிகழ்வுகள் மருத்துவத் துறையிலும் அரங்கேறின. போட்ட முதலீடை எவ்வளவு சீக்கிரம் எடுக்க முடியும் என்ற அவசரத்திலும், கணிசமான லாபம் சம்பாதிக்கும் குறிக்கோளிலும் நியாயத்துக்கு புறம்பான நடவடிக்கைகள் இரு துறைகளிலும் வாடிக்கையாகி விட்டன. இதை கண்டும் காணாததுபோல அரசு தன் பங்குக்கு பொது மருத்துவமனைகளை மேம்படுத்தாமலும் புதிதாக நிர்மாணிக்காமலும் நிதி ஒதுக்கீட்டில் கஞ்சத்தனம் செய்கிறது. நாட்டின் மொத்த உற்பத்தியில் ஒன்றரை சதவீதம் மட்டுமே மருத்துவத்துக்கு செலவிடப்படுகிறது. பணக்கார நாடுகளில் அரசு 13 சதவீதம் செலவிடுகிறது. ஏழை நாடுகள்கூட 5.3 சதவீதம் செலவு செய்கின்றன. கல்வியும் மருத்துவமும் சமுதாயத்தின் இன்றியமையாத அடிப்படை தேவைகள். இந்தியாவை பொருத்தவரை இந்த இரண்டு வகையிலும் செலவுகள் மிக அதிகம். மருத்துவ சிகிச்சைக்கு ஆன செலவால் சொத்து சுகங்களை இழந்து வறுமைக்கோட்டுக்கு கீழே விழுந்து திண்டாடும் குடும்பங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஸ்பெஷலிஸ்டுகள் அதிகரித்ததற்கு ஈடாக பொது மருத்துவர்கள் எண்ணிக்கை குறைந்ததால் உடலில் என்ன நோய் என்பதை தெரிந்துகொள்வதற்கே பல டாக்டர்களை நாட வேண்டிய கட்டாயம். ஒவ்வொருவரும் எழுதிக் கொடுக்கும் பரிசோதனைகளை முடிப்பதற்குள் பாதிப் பணம் காலி. சிகிச்சைக்கும் மருந்துக்கும் கடன் வாங்கி சமாளிக்க எத்தனை பேரால் முடிகிறது? நெருக்கடியான இந்த சூழ்நிலையில் மருத்துவமனைகளின் தரத்துக்கு ஏற்ப சிகிச்சை கட்டணங்களை வெளிப்படையாக நிர்ணயிக்கவும் தேவையற்ற பரிசோதனைகளை தவிர்க்கவும் அரசு எடுக்கும் முயற்சி ஓரளவாவது மாற்றம் ஏற்பட உதவும்.
No comments:
Post a Comment