அமைதிக்கான நோபல் விருது ஐரோப்பிய கூட்டமைப்புக்கு கிடைத்திருப்பது எதிர்பாராத திருப்பம். இந்த முடிவு உருவாக்கியுள்ள கலவையான உணர்ச்சிகள் எதிர்பாராதவை அல்ல. 'நார்வேக்காரர்களுக்கு அபாரமான நகைச்சுவை உணர்வு இருப்பதை இன்றுதான் தெரிந்துகொண்டேன்' என்று இங்கிலாந்து அரசியல் தலைவர் கிண்டலடிக்கிறார். நோபல் விருதுகள் குழுவின் அலுவலகம் நார்வே தலைநகரில் அமைந்துள்ளது. ரஷ்யாவின் எக்கோ மாஸ்க்வி ரேடியோவின் முதன்மை ஆசிரியர், 'நாங்கள் 115 பேர்; அவர்களோ 50 கோடி. இந்த தோல்வி எங்களுக்கு ஒரு கவுரவம்' என்கிறார். ரஷ்ய அரசுக்கு எதிரான விமர்சனங்களை துணிவுடன் வெளியிட்டு வரும் இந்த ரேடியோ நிறுவனத்துக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கும் என ஊகங்கள் வலம் வந்தன. நோபல் அமைதி விருது சர்ச்சையில் சிக்குவது புதுமையல்ல. அதிபராக பதவியேற்ற சில மாதங்களிலேயே ஒபாமாவுக்கு இந்த விருது கொடுக்கப்பட்டது கடும் விமர்சனத்துக்கு இலக்கானது. 1948ல் காந்தி சுடப்பட்ட ஆண்டில் அவர் பெயர் அமைதி நோபலுக்கு பரிந்துரைக்கப்பட்டபோது, 'இறந்தவர்களுக்கு விருது வழங்க விதிகளில் இடமில்லை' என மறுத்துவிட்டனர். ஆனால் 1961ல் விமான விபத்தில் பலியான முன்னாள் ஐ.நா பொதுச்செயலாளர் டாக் ஹம்மர்ஸ்கோல்டுக்கு இந்த விருதை வழங்க வசதியாக விதிகளை திருத்தினர். ஐரோப்பிய கூட்டமைப்பில் உள்ள 27 நாடுகளில் அநேகம் இன்று பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளன. வேலையின்மை, விலைவாசி பிரச்னைகளால் நாடுகளுக்கு இடையே உறவுகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதுதான் சரியான வழி என்ற கருத்து வலுவடைந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் ஐரோப்பா அமைதிப் பூங்காவாக விளங்க கூட்டமைப்புதான் காரணம் என்று கூறி அமைதி விருது வழங்குவது பொருத்தமில்லாத நடவடிக்கையாகவே தோன்றும். எனினும், எல்லா நாடுகளும் யுத்த பூமியாக காட்சியளித்த காலத்தில் இருந்து வெறுமனே வாய்ச்சண்டை போடும் அளவுக்கு வந்திருப்பதே பெரிய மாற்றம்தான். 'மக்கள் கஷ்டப்படுகிறார்கள். ஆனால் சாகவில்லைதானே' என்று ஒரு மாணவி சொன்ன கருத்து விமர்சனங்களுக்கு சரியான பதில். ஐரோப்பிய கூட்டமைப்பில் சேர மறுத்து நார்வே பிடிவாதமாக தனித்து நிற்பது இன்னொரு அழகான முரண்பாடு.
நன்றி: Dinakaran
No comments:
Post a Comment