Tuesday, 23 October 2012

தகவல் அறியும் உரிமை சட்டம் - கட்டுப்பாடு தேவையில்லை


தகவல் அறியும் உரிமை சட்டம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சாதனைகளில் முதன்மையானது. ஆர்டிஐ என சுருக்கமாக குறிப்பிடப்படும் அந்த சட்டம் இந்திய ஆட்சி அமைப்பையும் அரசியல் கட்டமைப்பையும் முற்றிலுமாக மாற்றியமைக்கும் ஆற்றலை கொண்டிருக்கிறது. அது முழு பலனளிக்க நீண்ட காலம் பிடிக்கும். புதிதாக வாங்கிய வாகனத்தை ஓட்டி பழகுவதை போல இந்தியர்கள் ஆர்டிஐ சட்டத்தை எட்ட நின்று தொட்டும் தடவியும் பார்க்கிறார்கள். இந்த கட்டத்தில் ஆர்வ மிகுதியால் துஷ்பிரயோகம் நடப்பது இயல்பு. எல்லா சட்டங்களும் ஆரம்பத்தில் தவறாகத்தான் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆகையால், இச்சட்டத்துக்கு எல்லைக்கோடுகள் நிர்ணயிக்க வேண்டும் என்று பிரதமர் தெரிவித்துள்ள கருத்து அவசரத்தில் உருவானதாக தோன்றுகிறது. தகவல் ஆணையர்கள் மாநாட்டில் பேசும்போது, தனி மனிதர்களின் அந்தரங்கம் என்ற அடிப்படை உரிமையில் தகவல் அறியும் உரிமை குறுக்கிடா மல் தடுப்பது அவசியம் என பிரதமர் கூறியுள்ளார். அந்தரங்கம் தொடர்பாக அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமைகளை பாதுகாக்க சட்டம் இயற்று வது குறித்து நீதிபதி ஏ.பி.ஷா தலைமையில் நிபுணர்கள் பரிசீலித்து வரும் தகவலையும் அதே மேடையில் மன்மோகன் வெளியிட்டுள்ளார். அது நிச்சயம் தேவை. ஆனால் அதை சாக்கிட்டு ஆர்டிஐக்கு கடிவாளம் போட முனைவது சரியல்ல. அற்பமான, தேவையில்லாத, பொது நலனுக்கு உதவாத தகவல்களை கேட்டு ஆர்டிஐ சட்டத்தின்கீழ் தினமும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. கடந்த 50 ஆண்டுகளில் நடந்தது என்னென்ன என்று பிரமாண்டமான தகவல் தேடலுக்கும் தொகுப்புக்கும் வழி வகுக்கும் வீணான மனுக்களும் தாக்கலாகின்றன. இதெல்லாம் அதிகாரிகளின் நேரத்தையும் உழைப்பையும் விரயமாக்கும் முயற்சிகள்தான். ஆரம்ப கவர்ச்சி மங்கியதும் இதெல்லாம் குறைந்துவிடும்.
மக்களுக்கு மட்டுமல்ல, அதிகாரிகளுக்கும் இன்னும் தெளிவு தேவை. உதாரணமாக, தொலைபேசியை ஒட்டுக் கேட்டதால் அந்தரங்கம் பாதிக்கப்பட்டதாக ஒரு தொழிலதிபர் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அமைச்சரவை சம்பந்தமான விஷயங்களை தனிநபர் அந்தரங்க விஷயமாக கருத முடியுமா என்பதற்கு சட்ட விளக்கம் தேவையாகிறது. எனவே, எப்படி பார்த்தாலும் ஆர்டிஐ சட்டத்தில் அரசு இப்போது கைவைப்பது முற்போக்கான நடவடிக்கையாக இருக்காது.



நன்றி: Dinakaran 

No comments:

Post a Comment