Tuesday, 2 October 2012

நேரம் தவறாமை பாரமாக தெரியாது


இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவமனைகளில் ஒன்றான சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணியாளர்கள் வருகையை மின்னணு முறையில் பதிவு செய்வதற்கான கருவிகள் செயல்பட தொடங்கியுள்ளன. கணினி தொழில்நுட்பம் எல்லா துறைகளிலும் ஆதிக்கம் செலுத்திவரும் நிலையில் முக்கியமான பொது மருத்துவமனையில் இத்தனை காலமாக பயோமெட்ரிக் ஸ்கேனர்கள் புழக்கத்துக்கு வராமல் இருந்ததே ஆச்சரியம். தனியார் நிறுவனங்களில் இந்த முறை என்றோ அமலுக்கு வந்துவிட்டது. விரல் ரேகையுடன் பெயர், பிறந்த தேதி, துறை போன்ற விவரங்களை கணினியில் முன்பதிவு செய்துகொண்டால் அன்றாடம் உள்ளே நுழையும்போது வெளியே செல்லும்போது விரல் நீட்டினால் போதும் நேரத்தை பதிவு செய்துவிடும் ஸ்கேனர். ஆள் மாறாட்டம் செய்யவோ வேறுவகை முறைகேடு நடக்கவோ வாய்ப்புகள் இல்லை.பதிவு செய்துவிட்டு உடனே வெளியே சென்றுவிட்டால் எப்படி கண்டு பிடிக்க முடியும் என்று சிலர் கேட்கின்றனர். அதற்கும் சுலபமான தொழில்நுட்ப வழிமுறைகள் இருக்கின்றன. அடையாள அட்டையில் பொருத்தப்பட்டுள்ள சில்லு மூலம் சம்பந்தப்பட்ட பணியாளர் அந்த வளாகத்தில் இருக்கிறாரா இல்லையா என்பதை கணினியில் காணமுடியும். டாக்டர்களும் நர்ஸ்களும் ஏனைய பணியாளர்களும் உரிய நேரத்தில் பணிக்கு வருவதில்லை, பணி நேரம் முடியும்வரை அங்கு இருப்பதில்லை  என்பது நீண்டகாலமாக பொதுமக்களால் கூறப்படும் புகார். இதற்கு தீர்வு காணும்போது சுகாதார குறைவு, எலிகள், நாய்கள் நடமாட்டம் போன்ற இதர புகார்கள் தானாகவே மறைந்துவிடும். பயோமெட்ரிக் ஸ்கேனர்கள் செயல்படும் தனியார் மருத்துவமனைகள், பள்ளிகள், நிறுவனங்களில் பொதுவான ஒழுங்கீனங்கள் வெகுவாக குறைந்திருப்பதை பல ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. ஏனெனில் நேரம் தவறாமை என்பது பெரும்பாலான இந்தியர்களுக்கு அன்னியமான விஷயமாக இருந்தாலும், ஒழுங்குகளில் எல்லாம் முதன்மையானது அதுதான். பணம் செலுத்தி பயணம் செய்யும் ரயிலை பிடிக்க விழுந்தடித்து ஓடுவோம்; பணம் கொடுத்து வாழவைக்கும் நிறுவனத்துக்கு இஷ்டப்படி செல்வோம். குறிப்பிட்ட நேரம் உழைப்பதற்காக ஊதியம் பெறும்போது, தாமதிக்கும் நிமிடம் ஒவ்வொன்றும் தங்கம் திருடுவதற்கு சமம் என்ற உணர்வு இருந்தால் நேரம் தவறாமை பாரமாக தெரியாது.





நன்றி: Dinakaran 

No comments:

Post a Comment