Monday, 1 October 2012

கசப்பு மருந்து யாருக்கு? - முக்கியமான மருந்துகளின் விலைகளுக்கு உச்சவரம்பு


முக்கியமான மருந்துகளின் விலைகளுக்கு உச்சவரம்பு நிர்ணயிக்க அரசு எடுத்துள்ள முடிவை மருந்து கம்பெனிகள் உற்சாகமாக வரவேற்பதை பார்த்தால் குழப்பமாக இருக்கிறது. மக்கள் பாராட்ட வேண்டிய நடவடிக்கையாக இருந்தால் மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு அது கசப்பாகவே இருக்க முடியும். அதிகபட்சம் இத்தனை ரூபாய்க்கு மேல் விற்கக்கூடாது என்பதுதான் விலை உச்சவரம்பு. அது சட்டமாகும்போது கம்பெனிகள் இஷ்டத்துக்கு விலை நிர்ணயிக்க முடியாது. கொள்ளை லாபம் பார்க்க முடியாது. அவசிய மருந்துகள் என்ற பெயரில் அரசு ஒரு பட்டியல் வைத்துள்ளது. அதில் 348 மருந்துகள் இருக்கின்றன. ஆரம்ப சுகாதார நிலையம் முதல்  தனியார் மருத்துவமனைகள் வரை நமது நோயாளிகள் அதிகமாக வாங்கி பயன்படுத்தும் மருந்துகள். இவற்றை மருந்து விலை கட்டுப்பாடு உத்தரவின்கீழ் அரசு கொண்டுவருகிறது. ஆனால் விலையை நிர்ணயிக்கும் முறை மாறியிருக்கிறது. குறிப்பிட்ட ஒரு நோய்க்கான மருந்து பல பெயர்களில் கிடைக்கும். ஒவ்வொன்றின் விலையும் வேறுபடும். அத்தனை விலைகளையும் கூட்டி அதன் சராசரியை உச்சபட்ச விலையாக அரசு நிர்ணயம் செய்ய இருக்கிறது. உற்பத்தி செலவு எவ்வளவு ஆகிறது என்பதை கணக்கிட்டு அதற்கு மேல் நியாயமான அளவு லாபம் வைத்து விலை நிர்ணயம் செய்யாமல் விற்பனை அளவை அடிப்படையாக வைத்தது கேள்விக்குரிய முடிவு. உண்மையில் கொள்ளை லாபத்தை தடுக்கும் வழி அது ஒன்றுதான். 1996ல் இருந்து பத்தாண்டுகளில் மருந்து விலைகள் 40 சதவீதம் உயர்ந்துள்ளன. அரசு கட்டுப்பாட்டில் வராத மருந்துகளின் விலை 137 சதவீதம் அதிகரித்துள்ளது. இப்படி எகிறுவதை தடுக்காமல் வேறு வகையில் விலை நிர்ணயம் செய்வதால் இப்போது மலிவாக கிடைக்கும் மருந்துகளின் விலையும் உயர வாய்ப்பிருக்கிறது. தவிர, மருந்தின் மூலப்பொருட்களை மாற்றியமைத்து விலை வரம்புக்குள் வராமல் பன்னாட்டு கம்பெனிகள் தப்பவும் இடமிருக்கிறது. டாக்டர் எழுதிக் கொடுத்த மருந்துக்கு பதில் வேறொன்று தரலாமா என கடைக்காரர் கேட்டால் பெரும்பாலானவர்கள் மறுப்பதுதான் வாடிக்கை. அந்த அளவுக்கு விற்பனையாளர் சந்தையாக விளங்கும் மருந்து தொழிலில் விலைக் கட்டுப்பாடு கொண்டுவருமுன் அரசு வெளிப்படையான விவாதம் நடத்துவதே முறையானது.





நன்றி: Dinakaran

No comments:

Post a Comment