சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருள் விலை மலிவாக இருக்கும் என்பது எல்லாருக்கும் தெரியும். எக்கச்சக்கமாக உற்பத்தி செய்வதால் செலவு குறைவு; அதனால் மலிவாக கிடைக்கிறது என முதலில் நம்பினார்கள். தரம் குறைவு; அசலை காப்பியடித்து தயாரிக்கப்பட்ட போலி; அதனால் விலை குறைவு என்று பின்னர் நம்ப தொடங்கினார்கள். பொம்மைகள் முதல் மருந்துகள் வரை சீன போலிகள் நமது துறைமுகங்களில் வந்து குவிந்தபோது அந்த நம்பிக்கை வலுப்பட்டது. இப்போது அடுத்த கட்டம். சீன தொழில்நுட்ப தயாரிப்புகள் மற்ற நாடுகளுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தலாம் என்று செய்தி வந்திருக்கிறது. வாவே டெக்னாலஜீஸ் என்றொரு கம்பெனி. உலகின் இரண்டாவது பெரிய டெலிகாம் நிறுவனம். 1987ல் ராணுவத்தில் இருந்து விலகிய ரென் என்ற இன்ஜினியர் சிறு முதலீட்டில் தொடங்கியது, 32 பில்லியன் டாலர் கம்பெனியாக வளர்ந்து நிற்கிறது. உலகெங்கும் பரவ பார்ட்னர்களை வளைத்துக் கொண்டிருக்கிறது. சீன அரசின் அரவணைப்பு இல்லாமல் இந்த வளர்ச்சி சாத்தியமில்லை. கடந்த 11 மாதங்களாக இந்த நிறுவனத்தை கண்காணித்து புலனாய்வு செய்த அமெரிக்க உளவு நிறுவனங்கள், வாவேயை வளர விடுவது நாட்டுக்கே ஆபத்து என அறிவித்துள்ளன. டெலிகாம் இன்றைய உலகில் அனைத்து செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்கும் துறையாகி விட்டது. கம்ப்யூட்டர் மயமான பாங்குகள், மின்சாரம், நீர், எண்ணெய் உற்பத்தி, வினியோகம், வர்த்தகம், அரசு நிர்வாகம், கப்பல், விமான போக்குவரத்து, செய்தி பரிமாற்றம் எல்லாமே டெலிபோன் மூலம் கையாளப்படுகிறது. சீன அரசு நினைத்தால் வாவே கட்டமைப்பின் வழியாக அனைத்து ரகசியங்களையும் சேகரித்து எந்த நாட்டின் இயக்கத்தையும் ஸ்தம்பிக்க வைக்கலாம். ஏற்கனவே பல நாடுகளின் ராணுவ கம்ப்யூட்டர்களை ஊடுருவி ரகசியங்களை திருடிய சம்பவங்களில் சீனாவின் தொடர்பு ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் வாவே நிறுவனத்தை இங்கு வளரவிட்டால் சைபர் வார் எனப்படும் மின்னணு யுத்தத்தில் தோற்று பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரும் என அமெரிக்க நாடாளுமன்ற நுண்ணறிவுக் குழு எச்சரித்துள்ளது. இந்திய டெலிகாம் கம்பெனிகளுடன் கூட்டாக களமிறங்க வாவே தயாராகும் வேளையில் அரசு கவனத்தில் கொள்ள வேண்டிய எச்சரிக்கை இது.
No comments:
Post a Comment