ஏழை, பணக்காரன் வித்தியாசமில்லாமல் எல்லோருக்கும் கிடைத்து வருவது நியாயமான நீதி மட்டும்தான். கொலைகாரன் யார் எனப் பார்ப்பதில்லை சட்டம். யாராக இருந்தாலும் தண்டனை ஒன்றுதான். நீதிபதிகள் விதிக்கும் அபராதத்தை பணக்காரர்கள் கட்டி விடுகிறார்கள். ஏழைகளால் முடிவதில்லை. இதனால் அவர்கள் கூடுதல் காலம் தண்டனை அனுபவிக்க வேண்டியுள்ளது. இதற்கு முடிவு கட்ட முன்வந்துள்ளது உச்ச நீதிமன்றம்.திருட்டு, வழிப்பறி, கொள்ளை போன்ற வழக்குகளில் சிறை தண்டனையோடு, கீழ் கோர்ட்டுகளில் அபராதமும் விதிக்கப்படுகிறது. இதை செலுத்த தவறினால், குற்றவாளிகள் கூடுதலாக சில காலம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும். பணம் கட்ட முடியாத ஏழைகள் கூடுதல் சிறைத் தண்டனையை ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால், ஏழை குற்றவாளிகளுக்கு அபராதம் விதிப்பதை தவிர்க்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சதாசிவம், ரஞ்சன் கோகாய் ஆகியோர் கூறியுள்ளனர்.ஒரு வழக்கில் குற்றவாளிக்கு போதுமான தண்டனையை அறிவித்த பிறகு, அபராதமும் விதிக்கக் கூடாது. குறிப்பாக, குற்றவாளிகள் ஏழைகளாக இருந்தால் தண்டனையோடு நிறுத்திக் கொள்ளலாம். குற்றத்தின் தன்மை, எந்த சூழலில் குற்றம் இழைக்கப்பட்டுள்ளது, குற்றவாளியின் பொருளாதார நிலை போன்றவற்றை கருத்தில் கொண்டுதான் அபராதம் விதிக்க வேண்டும். எல்லோருக்கும் அபராதம் விதிக்கப்படும் சூழ்நிலையில், பெரும்பாலான ஏழைகளால் அபராதம் செலுத்த முடிவதில்லை. அதனால் அவர்கள் கூடுதல் தண்டனை அனுபவிக்க தயாராகி விடுகிறார்கள். அபராதம் செலுத்த முடியாததால் கூடுதல் தண்டனை அனுபவிப்பதை ஏற்க முடியாது. அது அபராதம் செலுத்தாததற்கான அபராத தண்டனை போல் ஆகி விடுகிறது. குற்றத்துக்குத்தான் தண்டனை. அபராதம் செலுத்தாதற்கு அல்ல என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள சிறைகளில் எத்தனையோ லட்சம் கைதிகள் ஜாமீன் தொகை கூட கட்ட முடியாததால் வெளியே வர முடியாமல் இருக்கிறார்கள். இதனால் விசாரணைக் கைதிகளாக அவர்கள் சிறையில் கழிக்கும் காலம், வழக்கு முடிந்து பெறும் தண்டனைக் காலத்தை விட அதிகமாகி விடுகிறது. இப்படி தண்டனை அனுபவித்த குற்றவாளிகள் நிரபராதி என விடுதலையாகும்போது, அவர்கள் நிலைமை இன்னும் மோசமாகி விடுகிறது.
No comments:
Post a Comment