ஜெயித்துக் கொண்டே இருப்பவனுக்கு வெற்றி கசப்பதில்லை. ஆனால் முதல் வெற்றி போல முழுமையாக எப்போதும் இனிப்பதில்லை. போகப்போக பரவசம் குறைகிறது. இதைத்தான் சொல்ல வந்தார் ஜெய்ஸ்வால். சுவாரசியத்துக்காக அந்த கருத்தில் அவர் சேர்த்துக் கொண்ட விஷயம் சிக்கலை வரவழைத்திருக்கிறது. கவிஞர்கள் மாநாட்டில் அவர் பங்கேற்ற வேளையில் டி20 போட்டியில் பாகிஸ்தானை இந்தியா தோற்கடித்த செய்தி வந்திருக்கிறது. பகிர்ந்துகொள்ள விரும்பியவர், கிரிக்கெட்டில் வெற்றிகள் நமக்கு பழகிப்போனதால் முன்பு போல குதித்து கொண்டாட தோன்றவில்லை என்றார். கவிஞர்கள் மத்தியில் இருந்ததால் உவமை சொல்லாமல் தப்ப முடியவில்லை. நாளாக நாளாக மனைவியை போல வெற்றியும் களையிழந்து விடுகிறது என்று கூறிவிட்டார். நிலக்கரி அமைச்சராக இருப்பவர் தனக்கு கரி பூசிக் கொள்ளலாமா? மகளிர் அமைப்புகள் கொதிக்கின்றன. ஒரு பெண் வழக்கு போட்டுள்ளார். பெண்களை அவதூறாக பேசி இழிவு படுத்திவிட்டார் என்று. குற்றச்சாட்டு நிரூபணமானால் 2 ஆண்டுகள் கிரிக்கெட் பார்க்க முடியாது. மனைவியையும் முடியாது. தீவிர கிரிக்கெட் ரசிகரான ஜெய்ஸ்வாலுக்கு மணமாகி 45 ஆண்டுகள் ஆகின்றன. மனைவி என்ன சொல்கிறார் என்று தெரியவில்லை. பழகப்பழக பாலும் புளிக்கும் என்பது பழ மொழி. பழசானால் மனைவிக்கு மட்டும்தான் கவர்ச்சி குறையுமா, என்ன? கணவனுக்கும் அது பொருந்தும். காதலுக்கும் பொருந்தும். காலத்தின் எதிர்த்திசையில் பயணிப்பது விலைவாசி மட்டுமே.ஆனால் இதெல்லாம் சொல்லி நியாயப்படுத்த அமைச்சர் தயாரில்லை. விமான பயணிகளை விமர்சித்த சசி தரூர் மாஜியான கதை நினைவிருப்பதால் உஷாராக இருக்கிறார். 'அம்மாக்களையும் சகோதரிகளையும் என் பேச்சு புண்படுத்தி இருந்தால் இருகை கூப்பி வணங்கி மன்னிப்பு கேட்கிறேன்' என்று டெலிவிஷனில் தலை தாழ்த்தினார். சபைக்கு ஏற்றவாறு பேசுவது மேடை பேச்சாளர் இலக்கணம். எல்லா இடத்திலும் ஒரே மாதிரி பேச முடியாது. ரசிக்க மாட்டார்கள். கைதட்டல் கிடைக்காது. இப்படி மிரட்டல்கள் எழுந்தால் பொது நிகழ்ச்சியில் பொய் தவிர எதுவும் பேச முடியாத நிலை வந்துவிடும். (இனிதானா?) கவிதைக்கு பொய்யழகு என்றார் வைரமுத்து. கவிஞர்கள் சூழலில் அமைச்சரும் பொய் பேசியிருந்தால் சுழலில் சிக்கியிருக்க மாட்டார்.
No comments:
Post a Comment