உலகம் முழுவதுமே முதியோர் படும் அவஸ்தை சொல்லி மாளாது. வருவாய் இழந்து, உடல் தளர்ந்து, நோய்வாய்பட்ட சூழ்நிலையில், அவர்களின் மனம் புண்படும்படி கொடுமைகள் நடப்பது அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. சர்வதேச சராசரி 4 முதல் 6 சதவீதம். இந்தியாவில் 32 சதவீதம். இந்தியாவில் 22 நகரங்களில் 5,500 முதியோரிடம் ஹெல்பேஜ் இந்தியா என்ற அமைப்பு சமீபத்தில் நடத்திய ஆய்வில் பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வந்துள்ளன. முதியோருக்கு எதிரான கொடுமை அதிகம் நடப்பது மத்திய பிரதேசத்தில்தான். 77 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தானில் மிகவும் குறைவு. 1.67 சதவீதம்தான். தமிழகத்தில் 28 சதவீத முதியோர் பலவித இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். பிள்ளைகள் என்னதான் கொடுமை செய்தாலும் 80 சதவீதம் பெற்றோர் அதை வெளியில் யாரிடமும் சொல்வதில்லையாம். ஏறக்குறைய 50 சதவீதம் பேர் ஐந்து ஆண்டுகளுக்கும் அதிகமாக கொடுமைகளை அனுபவித்து வருவது மற்றொரு அதிர்ச்சி தகவல்.பொதுவாக, குடும்பத்தில் வயதான பெற்றோர் அனுபவிக்கும் கொடுமைக்கு மருமகள்தான் காரணமாக இருப்பார்கள் எனக் கூறுவார்கள். ஆனால், தற்போது நடத்தப்பட்ட ஆய்வில் மகன்கள் முதலிடத்தில் இருக்கிறார்களாம். பெற்றோரை திட்டுவது, சாப்பாடு போடாமல் தவிக்க விடுவது, முதியோர் இல்லத்தில் சேர்ப்பது போன்ற கொடுமைகளை செய்வதில் 56 சதவீதம் பேர், மகன்கள் தான். மருமகளுக்கு இரண்டாவது இடம். 23 சதவீதம். கடைசி காலத்தில் நம்மை நன்றாக வைத்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில் சேர்த்து வைத்த பணம் அனைத்தையும் செலவழித்து, படிக்க வைத்து, ஆளாக்கியதற்கு இப்படித்தான் பிள்ளைகள் நன்றிக் கடன் செய்கிறார்கள்.அரசு வேலை பார்த்து ஓய்வு பெற்ற பின் பென்ஷன் வாங்குபவர்களும் சுதாரிப்பாக சொத்து சேர்த்த முதியோரும் மட்டுமே ஓரளவுக்கு கவுரவமாக வாழ்கிறார்கள். பென்ஷன் இல்லாத பெரும்பாலோர் ஒரு கவளம் சாப்பாட்டுக்கும் ஒரு வாய் காபிக்கும் வெளியில் சொல்ல முடியாத கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள். முதியோருக்கு ஆதரவாக சட்ட திட்டங்கள் இருந்தாலும் யாரும் புகார் செய்ய முன்வருவதில்லை என்பதால், கொடுமைகள் வெளியில் தெரியாமலே போய் விடுகிறது.
நன்றி: Dinakaran
No comments:
Post a Comment