Thursday, 25 October 2012

எண்ணெய் வளம் ஓரிடத்தில் எப்படி ஏற்படுகிறது ?

நான் படித்து தெரிந்த வரையில் அது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மண்ணிலோ கடலிலோ புதைந்து போன படிமங்கள் மூலம் உருவாகிறது... இந்த படிமங்கள் அந்த இடத்தில் முன்பு இருந்த நிலப்பரப்பை( தற்போது கடலுக்குகடியில் உள்ள நிலம்) சேர்ந்தவைகளாக இருக்கவேண்டும். அவை அங்கு வாழ்ந்த மனிதர்கள், மரங்கள்,விலங்குகள், மற்ற இயற்கை வளங்கள் ஆகியவற்றில் இருந்து கிடைக்கப் பெற்ற எண்ணெய் வளம் தானே..
////////////////////////// தஞ்சை தமிழானந்தன் அண்ணா எனக்கு முன்பிருந்து ஒரு சந்தேகம் இருந்ததுண்டு..இப்போது இந்த பதிவை பார்த்ததும் அது முழுமை பெற்றுவிட்டது..  எண்ணெய் வளம் ஓரிடத்தில் எப்படி ஏற்படுகிறது என்று..? நான் படித்து தெரிந்த வரையில் அது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மண்ணிலோ கடலிலோ புதைந்து போன படிமங்கள் மூலம் உருவாகிறது... இந்த படிமங்கள் அந்த இடத்தில் முன்பு இருந்த நிலப்பரப்பை( தற்போது கடலுக்குகடியில் உள்ள நிலம்) சேர்ந்தவைகளாக இருக்கவேண்டும். அவை அங்கு வாழ்ந்த மனிதர்கள், மரங்கள்,விலங்குகள், மற்ற இயற்கை வளங்கள் ஆகியவற்றில் இருந்து கிடைக்கப் பெற்ற எண்ணெய் வளம் தானே..  அப்படி இருக்கும் இந்த இடத்தில் முன்பு வாழ்ந்தது யார்..? தென்பாண்டி கடலில் ஈழத்துக்கு மிக அருகில் இருந்த பண்டைய கொற்கை துறைமுகமும், அதற்கு மேலே காவிரி பேசின் எனப்படும் காவிரி அணையோடு இருந்த பூம்புகார் நகரமும் அதன் துறைமுகமும் தானே..  பண்டைய தமிழகத்தின் நிலம் இன்று கடலுக்கு அடியில் புதைந்து கிடந்து எண்ணெய் வளமாய் உருவெடுத்துள்ளது.. ஆகையால் இது தமிழனின் வளமல்லவா...? இந்த வளமும் கொள்ளை போவதா..? ////////////////  தஞ்சை தமிழானந்தன் @@ விளக்கம் நீண்டுவிட்டதால் பதிவாகவே பகிர்கிறேன். பின்வருவனவற்றில் பலவும் பலருக்கும் தெரிந்திருக்கும். இருப்பினும் ஒரு முழுமையும் தொடர்ச்சியும் வேண்டி தொடக்கத்தில் இருந்து துவங்குகிறேன்.  பூமிக்கு ஆற்றல் கிடைப்பது சூரிய ஒளியில் இருந்துதான். Primary source of energy. ஒளி ஆற்றல்தான் பல்வேறு ஆற்றல்களாக உருமாறுகிறது. உலகில் உயிரனங்கள் தோன்றிய யுகத்தில் முதலில் தோன்றியது கடல் வாழ் தாவரங்களே. அவைகள் கடல் நீரில் கரைத்துவிடப்பட்ட நீர்ப் பாசிகள், மிதவியம் போன்ற நுண்ணுயிர்கள் (phyto planktons). By then, ocean water was a primeval soup. அவைதான் கடல் நீரில் சூரிய ஒளி கிடைக்கும் மேல் மட்டத்தில் மிதக்கின்றன. சூரிய ஒளியைப் பயன்படுத்தி ஒளிச்சேர்க்கை (photosynthesis) மூலமாக எளிய கூறுகளாகிய கார்பன், ஹைட்ரஜன்,நைட்ரஜன் முதையவற்றை இணைத்து சங்கிலித் தொடர் ஹைட்ரோகார்பனாக மாற்றுகின்றன. அந்த சேர்மம் தான் எரிபொருளின் மூலம்.   பெட்ரோலின் சேர்மம் C10H22 . இந்தக் கார்பனுக்கும் ஹைட்ரஜனுக்கும் இடையில் பிணைப்பு ஏற்பட உதவிய சூரிய ஆற்றல் தான் அந்த பிணைப்பில் தேக்கி வைக்கப் பட்டுள்ளது. எரிபொருள் எரியும் பொழுது அவைகளுக்கு இடையில் உள்ள பிணைப்பு உடைகிறது. அதிலிருந்து ஆற்றல் பிறக்கிறது. இந்தத் தாவரங்கள் இறந்ததும் கடலுக்கு அடியில் படிமமாக படிகின்றன. இவ்வாறு கோடிக்கணக்கான கணக்கான ஆண்டுகள் தொடர்கிறது. படிமம் மேல் படிவமாக ஹைட்ரோ கார்பன்கள் குவிகின்றன.   அதே சமயம், பெருநிலத் தட்டுக்கள் (continental plates) இடம் பெயர்கின்றன, ஒன்றோடொன்று மோதுகின்றன, அழுத்துகின்றன, பிரட்டிப் போடுகின்றன. இதனால் கடல் தரையில் இருந்த படிமங்கள் பாறை தட்டுகளுக்கு இடையில் சிக்குகிறது. அழுத்தங்களுக்கு ஆளாகிறது. அழுத்தம் காரணமாக திடமான ஹைட்ரோ கார்பன் தொகுதி உருவாகிறது. அவைதான் பெட்ரோலியமாகவும், அழுத்தத்தில் வெளியாகும் ஆவி எரிவாயுவாகவும் உருப்பெறுகிறது.   அத்தகைய தொகுதி, மேலேயும் கீழேயும் நுண்துளை அற்ற கல் பாறைகளால் (non porous rocks) சூழப் படும்பொழுது, அவை எங்கேயும் கசிந்து செல்ல இயலாது (called Hydrocarbon Traps). இத்தகைய தொகுதிகள் நிறைந்த அடிஆழ நிலப்பரப்பு எண்ணெய் வயல் எனப்படுகிறது. இவை சராசரியாக 3- 4 கிலோமீட்டர் ஆழத்தில் இருக்கும். அவற்றை கண்டுபிடித்து துளையிடும் பொழுது எண்ணெய் ஊற்றாக வெளிவரும். பெரும்பாலான எண்ணெய் வயல்கள் கடலிலோ அல்லது ஒரு காலத்தில் கடலால் சூழப்பட்டு பின் நிலத்தட்டுப் பெயர்வு ஏற்பட்ட இடத்திலேயே அமையப் பெரும்.   As per law of conservation of energy, energy can neither be created nor be destroyed. It can only be transferred from one form to another. ஒரு விறகை எரிக்கிறோம் என்றால் அது வாழ்த்த காலத்தில் சேமித்த சூரிய சக்தியை வெளியேற்றுகிறோம் என வைத்துக் கொள்ளலாம். அப்படியானால் பலகோடி ஆண்டுகள் சேமித்த ஆற்றல் எத்தன்மையுடன்  இருக்கும்? சுருக்கமாக சொல்வதெனில் பல கோடி ஆண்டுகளாக சிறுக சிறுக சேமித்துவைக்கப்பட்ட சூரிய ஆற்றல்தான் நாம் நினைத்தவுடன் எளிதில் எரித்துப் பயன்படுத்தும் எரிபொருள் !   அதேபோல்தான் நிலத்தில் உள்ள தாவரங்கள் புதைந்து அழுந்தி நிலக்கரியாக மாறுகின்றன. குறுகிய காலத்தில் இத்தகைய ஆற்றல் அனைத்தையும் வெளியேற்றுவதால் ´உலக வெப்பமயமாதல்´ நிகழ்கிறது.  எண்ணெய் வளம் தோன்றிய காலத்தை ஒப்பிடுகையில் மனித குல நாகரீகம் தோன்றி வளர்ந்த காலம் என்பது கண்ணிமைப் பொழுது கைநொடிப் பொழுது. ஆகவே ஒரு இனம் வாழ்த்து பயன்படுத்திய பகுதி எரிபொருள் உருவாக்கத் திற்குக் காரணம் என்பது பொருந்தாது. நவீன யுகத்தில் நிலவுடைமைச் சமூகம் தோன்றிய பின் உருவாகியதுதான் நாடு, தேசிய எல்லைகள் எல்லாம்.   ஆகவே தற்போது நமக்கு வகுக்கப்பட்ட , விதிக்கப்பட்ட தேசிய எல்லைகளுக்குள் உள்ள வளங்களையே உரிமை கோர முடியும். வரலாற்றின் அடிப்படையில் அல்லது பூர்வ குடிமக்கள் என்கிற அடிப்படையில் இன்றைய நமது எல்லைக்கு அப்பால் உள்ள கனிம வளங்களைக் கோர முடியாது. எண்ணெய் வளத்தை மையாமாக் கொண்டு எழுகிற சிக்கல்களில் இருந்து மீள்வதே பெரும்பாடு... சிந்தித்து செயல்பட்டால் அதை வேண்டுமானால் செய்யலாம்.  மேலும் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் ஏற்பட்ட தொழில்புரட்சிக்குப் பின் தான் எரிபொருள் தேவை அதிகமாகி விட்டது. உலக நாடுகள் ஒன்றோடொன்று போட்டி போட்டுக் கொண்டு முன்னேற முனைகின்றன. அதற்கு எரிபொருள் அத்தியாவசியம் ஆகிறது. அதனை மையமாகக் கொண்டே இன்றைய பூகோள அரசியல் அமைகிறது.   பல்லாயிரம் ஆண்டுகளாக தோன்றி வளர்ந்த கலாசார, நாகரீக பண்பாட்டுக் கூறுகள் அனைத்தும் இந்த பூகோள அரசியல் என்கிற இடியாப்பச் சிக்கலில் சிக்கித் தவிக்கின்றன. தமிழர்களாகிய நாமும் இதற்கு விதிவிலக்கல்ல!
பூமிக்கு ஆற்றல் கிடைப்பது சூரிய ஒளியில் இருந்துதான். Primary source of energy. ஒளி ஆற்றல்தான் பல்வேறு ஆற்றல்களாக உருமாறுகிறது. உலகில் உயிரனங்கள் தோன்றிய யுகத்தில் முதலில் தோன்றியது கடல் வாழ் தாவரங்களே. அவைகள் கடல் நீரில் கரைத்துவிடப்பட்ட நீர்ப் பாசிகள், மிதவியம் போன்ற நுண்ணுயிர்கள் (phyto planktons). By then, ocean water was a primeval soup. அவைதான் கடல் நீரில் சூரிய ஒளி கிடைக்கும் மேல் மட்டத்தில் மிதக்கின்றன. சூரிய ஒளியைப் பயன்படுத்தி ஒளிச்சேர்க்கை (photosynthesis) மூலமாக எளிய கூறுகளாகிய கார்பன், ஹைட்ரஜன்,நைட்ரஜன் முதையவற்றை இணைத்து சங்கிலித் தொடர் ஹைட்ரோகார்பனாக மாற்றுகின்றன. அந்த சேர்மம் தான் எரிபொருளின் மூலம். 
பெட்ரோலின் சேர்மம் C10H22 . இந்தக் கார்பனுக்கும் ஹைட்ரஜனுக்கும் இடையில் பிணைப்பு ஏற்பட உதவிய சூரிய ஆற்றல் தான் அந்த பிணைப்பில் தேக்கி வைக்கப் பட்டுள்ளது. எரிபொருள் எரியும் பொழுது அவைகளுக்கு இடையில் உள்ள பிணைப்பு உடைகிறது. அதிலிருந்து ஆற்றல் பிறக்கிறது. இந்தத் தாவரங்கள் இறந்ததும் கடலுக்கு அடியில் படிமமாக படிகின்றன. இவ்வாறு கோடிக்கணக்கான கணக்கான ஆண்டுகள் தொடர்கிறது. படிமம் மேல் படிவமாக ஹைட்ரோ கார்பன்கள் குவிகின்றன. 

அதே சமயம், பெருநிலத் தட்டுக்கள் (continental plates) இடம் பெயர்கின்றன, ஒன்றோடொன்று மோதுகின்றன, அழுத்துகின்றன, பிரட்டிப் போடுகின்றன. இதனால் கடல் தரையில் இருந்த படிமங்கள் பாறை தட்டுகளுக்கு இடையில் சிக்குகிறது. அழுத்தங்களுக்கு ஆளாகிறது. அழுத்தம் காரணமாக திடமான ஹைட்ரோ கார்பன் தொகுதி உருவாகிறது. அவைதான் பெட்ரோலியமாகவும், அழுத்தத்தில் வெளியாகும் ஆவி எரிவாயுவாகவும் உருப்பெறுகிறது. 

அத்தகைய தொகுதி, மேலேயும் கீழேயும் 
நுண்துளை அற்ற கல் பாறைகளால் (non porous rocks) சூழப் படும்பொழுது, அவை எங்கேயும் கசிந்து செல்ல இயலாது (called Hydrocarbon Traps). இத்தகைய தொகுதிகள் நிறைந்த அடிஆழ நிலப்பரப்பு எண்ணெய் வயல் எனப்படுகிறது. இவை சராசரியாக 3- 4 கிலோமீட்டர் ஆழத்தில் இருக்கும். அவற்றை கண்டுபிடித்து துளையிடும் பொழுது எண்ணெய் ஊற்றாக வெளிவரும். பெரும்பாலான எண்ணெய் வயல்கள் கடலிலோ அல்லது ஒரு காலத்தில் கடலால் சூழப்பட்டு பின் நிலத்தட்டுப் பெயர்வு ஏற்பட்ட இடத்திலேயே அமையப் பெரும். 

As per law of conservation of energy, energy can neither be created nor be destroyed. It can only be transferred from one form to another. ஒரு விறகை எரிக்கிறோம் என்றால் அது வாழ்த்த காலத்தில் சேமித்த சூரிய சக்தியை வெளியேற்றுகிறோம் என வைத்துக் கொள்ளலாம். அப்படியானால் பலகோடி ஆண்டுகள் சேமித்த ஆற்றல் எத்தன்மையுடன் இருக்கும்? சுருக்கமாக சொல்வதெனில் பல கோடி ஆண்டுகளாக சிறுக சிறுக சேமித்துவைக்கப்பட்ட சூரிய ஆற்றல்தான் நாம் நினைத்தவுடன் எளிதில் எரித்துப் பயன்படுத்தும் எரிபொருள் ! 

அதேபோல்தான் நிலத்தில் உள்ள தாவரங்கள் புதைந்து அழுந்தி நிலக்கரியாக மாறுகின்றன. குறுகிய காலத்தில் இத்தகைய ஆற்றல் அனைத்தையும் வெளியேற்றுவதால் ´உலக வெப்பமயமாதல்´ நிகழ்கிறது.
எண்ணெய் வளம் தோன்றிய காலத்தை ஒப்பிடுகையில் மனித குல நாகரீகம் தோன்றி வளர்ந்த காலம் என்பது கண்ணிமைப் பொழுது கைநொடிப் பொழுது. ஆகவே ஒரு இனம் வாழ்த்து பயன்படுத்திய பகுதி எரிபொருள் உருவாக்கத்திற்குக் காரணம் என்பது பொருந்தாது. நவீன யுகத்தில் நிலவுடைமைச் சமூகம் தோன்றிய பின் உருவாகியதுதான் நாடு, தேசிய எல்லைகள் எல்லாம். 

ஆகவே தற்போது நமக்கு வகுக்கப்பட்ட , விதிக்கப்பட்ட தேசிய எல்லைகளுக்குள் உள்ள வளங்களையே உரிமை கோர முடியும். வரலாற்றின் அடிப்படையில் அல்லது பூர்வ குடிமக்கள் என்கிற அடிப்படையில் இன்றைய நமது எல்லைக்கு அப்பால் உள்ள கனிம வளங்களைக் கோர முடியாது. எண்ணெய் வளத்தை மையாமாக் கொண்டு எழுகிற சிக்கல்களில் இருந்து மீள்வதே பெரும்பாடு... சிந்தித்து செயல்பட்டால் அதை வேண்டுமானால் செய்யலாம்.

மேலும் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் ஏற்பட்ட தொழில்புரட்சிக்குப் பின் தான் எரிபொருள் தேவை அதிகமாகி விட்டது. உலக நாடுகள் ஒன்றோடொன்று போட்டி போட்டுக் கொண்டு முன்னேற முனைகின்றன. அதற்கு எரிபொருள் அத்தியாவசியம் ஆகிறது. அதனை மையமாகக் கொண்டே இன்றைய பூகோள அரசியல் அமைகிறது.

பல்லாயிரம் ஆண்டுகளாக தோன்றி வளர்ந்த கலாசார, நாகரீக பண்பாட்டுக் கூறுகள் அனைத்தும் இந்த பூகோள அரசியல் என்கிற இடியாப்பச் சிக்கலில் சிக்கித் தவிக்கின்றன. தமிழர்களாகிய நாமும் இதற்கு விதிவிலக்கல்ல!

நன்றி: ஒரு முகபுத்தக பதிவு

Tuesday, 23 October 2012

தகவல் அறியும் உரிமை சட்டம் - கட்டுப்பாடு தேவையில்லை


தகவல் அறியும் உரிமை சட்டம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சாதனைகளில் முதன்மையானது. ஆர்டிஐ என சுருக்கமாக குறிப்பிடப்படும் அந்த சட்டம் இந்திய ஆட்சி அமைப்பையும் அரசியல் கட்டமைப்பையும் முற்றிலுமாக மாற்றியமைக்கும் ஆற்றலை கொண்டிருக்கிறது. அது முழு பலனளிக்க நீண்ட காலம் பிடிக்கும். புதிதாக வாங்கிய வாகனத்தை ஓட்டி பழகுவதை போல இந்தியர்கள் ஆர்டிஐ சட்டத்தை எட்ட நின்று தொட்டும் தடவியும் பார்க்கிறார்கள். இந்த கட்டத்தில் ஆர்வ மிகுதியால் துஷ்பிரயோகம் நடப்பது இயல்பு. எல்லா சட்டங்களும் ஆரம்பத்தில் தவறாகத்தான் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆகையால், இச்சட்டத்துக்கு எல்லைக்கோடுகள் நிர்ணயிக்க வேண்டும் என்று பிரதமர் தெரிவித்துள்ள கருத்து அவசரத்தில் உருவானதாக தோன்றுகிறது. தகவல் ஆணையர்கள் மாநாட்டில் பேசும்போது, தனி மனிதர்களின் அந்தரங்கம் என்ற அடிப்படை உரிமையில் தகவல் அறியும் உரிமை குறுக்கிடா மல் தடுப்பது அவசியம் என பிரதமர் கூறியுள்ளார். அந்தரங்கம் தொடர்பாக அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமைகளை பாதுகாக்க சட்டம் இயற்று வது குறித்து நீதிபதி ஏ.பி.ஷா தலைமையில் நிபுணர்கள் பரிசீலித்து வரும் தகவலையும் அதே மேடையில் மன்மோகன் வெளியிட்டுள்ளார். அது நிச்சயம் தேவை. ஆனால் அதை சாக்கிட்டு ஆர்டிஐக்கு கடிவாளம் போட முனைவது சரியல்ல. அற்பமான, தேவையில்லாத, பொது நலனுக்கு உதவாத தகவல்களை கேட்டு ஆர்டிஐ சட்டத்தின்கீழ் தினமும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. கடந்த 50 ஆண்டுகளில் நடந்தது என்னென்ன என்று பிரமாண்டமான தகவல் தேடலுக்கும் தொகுப்புக்கும் வழி வகுக்கும் வீணான மனுக்களும் தாக்கலாகின்றன. இதெல்லாம் அதிகாரிகளின் நேரத்தையும் உழைப்பையும் விரயமாக்கும் முயற்சிகள்தான். ஆரம்ப கவர்ச்சி மங்கியதும் இதெல்லாம் குறைந்துவிடும்.
மக்களுக்கு மட்டுமல்ல, அதிகாரிகளுக்கும் இன்னும் தெளிவு தேவை. உதாரணமாக, தொலைபேசியை ஒட்டுக் கேட்டதால் அந்தரங்கம் பாதிக்கப்பட்டதாக ஒரு தொழிலதிபர் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அமைச்சரவை சம்பந்தமான விஷயங்களை தனிநபர் அந்தரங்க விஷயமாக கருத முடியுமா என்பதற்கு சட்ட விளக்கம் தேவையாகிறது. எனவே, எப்படி பார்த்தாலும் ஆர்டிஐ சட்டத்தில் அரசு இப்போது கைவைப்பது முற்போக்கான நடவடிக்கையாக இருக்காது.



நன்றி: Dinakaran 

அமைதி பூங்கா ஐரோப்பா


அமைதிக்கான நோபல் விருது ஐரோப்பிய கூட்டமைப்புக்கு கிடைத்திருப்பது எதிர்பாராத திருப்பம். இந்த முடிவு உருவாக்கியுள்ள கலவையான உணர்ச்சிகள் எதிர்பாராதவை அல்ல. 'நார்வேக்காரர்களுக்கு அபாரமான நகைச்சுவை உணர்வு இருப்பதை இன்றுதான் தெரிந்துகொண்டேன்' என்று இங்கிலாந்து அரசியல் தலைவர் கிண்டலடிக்கிறார். நோபல் விருதுகள் குழுவின் அலுவலகம் நார்வே தலைநகரில் அமைந்துள்ளது. ரஷ்யாவின் எக்கோ மாஸ்க்வி ரேடியோவின் முதன்மை ஆசிரியர், 'நாங்கள் 115 பேர்; அவர்களோ 50 கோடி. இந்த தோல்வி எங்களுக்கு ஒரு கவுரவம்' என்கிறார். ரஷ்ய அரசுக்கு எதிரான விமர்சனங்களை துணிவுடன் வெளியிட்டு வரும் இந்த ரேடியோ நிறுவனத்துக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கும் என ஊகங்கள் வலம் வந்தன. நோபல் அமைதி விருது சர்ச்சையில் சிக்குவது புதுமையல்ல. அதிபராக பதவியேற்ற சில மாதங்களிலேயே ஒபாமாவுக்கு இந்த விருது கொடுக்கப்பட்டது கடும் விமர்சனத்துக்கு இலக்கானது. 1948ல் காந்தி சுடப்பட்ட ஆண்டில் அவர் பெயர் அமைதி நோபலுக்கு பரிந்துரைக்கப்பட்டபோது, 'இறந்தவர்களுக்கு விருது வழங்க விதிகளில் இடமில்லை' என மறுத்துவிட்டனர். ஆனால் 1961ல் விமான விபத்தில் பலியான முன்னாள் ஐ.நா பொதுச்செயலாளர் டாக் ஹம்மர்ஸ்கோல்டுக்கு இந்த விருதை வழங்க வசதியாக விதிகளை திருத்தினர். ஐரோப்பிய கூட்டமைப்பில் உள்ள 27 நாடுகளில் அநேகம் இன்று பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளன. வேலையின்மை, விலைவாசி பிரச்னைகளால் நாடுகளுக்கு இடையே உறவுகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதுதான் சரியான வழி என்ற கருத்து வலுவடைந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் ஐரோப்பா அமைதிப் பூங்காவாக விளங்க கூட்டமைப்புதான் காரணம் என்று கூறி அமைதி விருது வழங்குவது பொருத்தமில்லாத நடவடிக்கையாகவே தோன்றும். எனினும், எல்லா நாடுகளும் யுத்த பூமியாக காட்சியளித்த காலத்தில் இருந்து வெறுமனே வாய்ச்சண்டை போடும் அளவுக்கு வந்திருப்பதே பெரிய மாற்றம்தான். 'மக்கள் கஷ்டப்படுகிறார்கள். ஆனால் சாகவில்லைதானே' என்று ஒரு மாணவி சொன்ன கருத்து விமர்சனங்களுக்கு சரியான பதில். ஐரோப்பிய கூட்டமைப்பில் சேர மறுத்து நார்வே பிடிவாதமாக தனித்து நிற்பது இன்னொரு அழகான முரண்பாடு.





நன்றி: Dinakaran

Monday, 22 October 2012

மன அழுத்தம் அதிகம்


மன அழுத்தத்தால் ஆண்களைவிட பெண்கள்  அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் என்று உலக நல்வாழ்வு நிறுவனம் கூறியுள்ளதை எந்த அளவுக்கு ஏற்க முடியும் என்று தெரியவில்லை. குறைந்தபட்சம் 10 சதவீத மக்கள் கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக மனநல கழகம் முன்பே அறிக்கை அளித்துள்ளது. தீராத சோகம், எதிலுமே நாட்டம் இல்லாதிருப்பது, எந்த சுகத்தையும் அனுபவிக்க இயலாதிருப்பது, எப்போதும் குற்ற உணர்வு, தாழ்வு மனப்பான்மை,  தூக்கம் பசி இல்லாதது, எல்லாம் முடிந்தது என்ற விரக்தி ஆகியவை கடுமையான மன அழுத்தத்தின் அடையாளங்களாக சொல்லப்படுகிறது. இந்த அறிகுறிகள் குறுகிய காலத்தில் வந்து போனால் பெரிய பாதிப்பு கிடையாது. நீடித்தால் விளைவுகள் மோசமாக இருக்கும் என டாக்டர்கள் கூறுகின்றனர். அந்த மாதிரியான மனநிலையே பல நோய்கள் உண்டாக காரணமாகலாம். தற்கொலை எண்ணம் வரலாம். ஆண்டுக்கு 10 லட்சம் தற்கொலைகள் , தினமும் மூவாயிரம் , நடக்கின்றன. மேஜர் டிப்ரசிவ் எபிசோட் , எம்எஸ்இ , என இதை ஒரு நோயாக மேலைநாடுகளில் கருதுகின்றனர். அலோபதி மருத்துவத்தில் இந்த நோய்க்கு மருந்துகளும் சிகிச்சை முறைகளும் சொல்லப்படுகிறது. தலைவலி, ஜலதோஷத்துக்கு டாக்டரிடம் போவதை போல மேலைநாடுகளில் மனநல மருத்துவரை சந்திப்பது சகஜமான விஷயம். ஆனால் அவர்களுக்கு மாறான கலாசாரத்தில் ஊறிப்போன இந்தியா போன்ற நாடுகளில் நிலைமை வேறு. நமது கலாசாரத்தில் மன உளைச்சலை நோயாக குறிப்பிடுவது இல்லை. மகிழ்ச்சி, கோபம் மாதிரி அதுவும் ஓர் உணர்வு. சிலருக்கு சீக்கிரம் மாறலாம், சிலருக்கு வாரக்கணக்கில் நீடிக்கலாம். பிரியமானவர்களை இழப்பது, வேலை பறிபோவது போன்றவை பெரும் சோகத்தில் தள்ளினாலும் அதனால் யாரையும் மன அழுத்த நோயாளி என நாம் முத்திரை குத்துவதில்லை. ஏமாற்றம், நம்பிக்கை குறைவு ஆகியவற்றை மன அழுத்தமாக பார்ப்பதில்லை.

உடல் உஷ்ணம், ரத்த அழுத்தம் போல மன அழுத்தம் அளக்கக்கூடியதாக இல்லை. ஆகவே எது ஆரோக்கியமான அளவு, எது ஆபத்தானது என யாரும் வரையறை செய்யவில்லை. மாறுபட்ட கலாசாரங்களில் வாழும் மக்களுக்கும் பொருந்தும்படியான நிர்ணயங்கள் அளவுகோல்கள் உருவாக்கப்படும் வரையில் மன அழுத்த மருத்துவம் இங்கே கொடிகட்டி பறப்பது சாத்தியமில்லை.



நன்றி: Dinakaran 

சீனாவின் மின்னணு யுத்தம்


சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருள் விலை மலிவாக இருக்கும் என்பது எல்லாருக்கும் தெரியும். எக்கச்சக்கமாக உற்பத்தி செய்வதால் செலவு குறைவு; அதனால் மலிவாக கிடைக்கிறது என முதலில் நம்பினார்கள். தரம் குறைவு;  அசலை காப்பியடித்து தயாரிக்கப்பட்ட போலி; அதனால் விலை குறைவு என்று பின்னர் நம்ப தொடங்கினார்கள். பொம்மைகள் முதல் மருந்துகள் வரை சீன போலிகள் நமது துறைமுகங்களில் வந்து குவிந்தபோது அந்த நம்பிக்கை வலுப்பட்டது. இப்போது அடுத்த கட்டம். சீன தொழில்நுட்ப தயாரிப்புகள் மற்ற நாடுகளுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தலாம் என்று செய்தி வந்திருக்கிறது. வாவே டெக்னாலஜீஸ் என்றொரு கம்பெனி. உலகின் இரண்டாவது பெரிய டெலிகாம் நிறுவனம். 1987ல் ராணுவத்தில் இருந்து விலகிய ரென் என்ற இன்ஜினியர் சிறு முதலீட்டில் தொடங்கியது, 32 பில்லியன் டாலர் கம்பெனியாக வளர்ந்து நிற்கிறது. உலகெங்கும் பரவ பார்ட்னர்களை வளைத்துக் கொண்டிருக்கிறது. சீன அரசின் அரவணைப்பு இல்லாமல் இந்த வளர்ச்சி சாத்தியமில்லை. கடந்த 11 மாதங்களாக இந்த நிறுவனத்தை கண்காணித்து புலனாய்வு செய்த அமெரிக்க உளவு நிறுவனங்கள், வாவேயை வளர விடுவது நாட்டுக்கே ஆபத்து என அறிவித்துள்ளன. டெலிகாம் இன்றைய உலகில் அனைத்து செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்கும் துறையாகி விட்டது. கம்ப்யூட்டர் மயமான பாங்குகள், மின்சாரம், நீர், எண்ணெய் உற்பத்தி, வினியோகம், வர்த்தகம், அரசு நிர்வாகம், கப்பல், விமான போக்குவரத்து, செய்தி பரிமாற்றம் எல்லாமே டெலிபோன் மூலம் கையாளப்படுகிறது. சீன அரசு நினைத்தால் வாவே கட்டமைப்பின் வழியாக அனைத்து ரகசியங்களையும் சேகரித்து எந்த நாட்டின் இயக்கத்தையும் ஸ்தம்பிக்க வைக்கலாம். ஏற்கனவே பல நாடுகளின் ராணுவ கம்ப்யூட்டர்களை ஊடுருவி ரகசியங்களை திருடிய சம்பவங்களில் சீனாவின் தொடர்பு ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் வாவே நிறுவனத்தை இங்கு வளரவிட்டால் சைபர் வார் எனப்படும் மின்னணு யுத்தத்தில் தோற்று பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரும் என அமெரிக்க நாடாளுமன்ற நுண்ணறிவுக் குழு எச்சரித்துள்ளது. இந்திய டெலிகாம் கம்பெனிகளுடன் கூட்டாக களமிறங்க வாவே தயாராகும் வேளையில்  அரசு கவனத்தில் கொள்ள வேண்டிய எச்சரிக்கை இது.




நன்றி: Dinakaran 

தேவையான சிகிச்சை

எந்த சிகிச்சைக்கு எவ்வளவு  கட்டணம் என்று போர்டு வைக்குமாறு மருத்துவமனைகளுக்கு உத்தரவிட மத்திய அரசு முனைந்திருப்பதை நல்ல மனம் படைத்த ஒவ்வொருவரும் வரவேற்பார்கள். நூறு கோடி மக்களுக்கும் மருத்துவ வசதி அளிக்கும் பொறுப்பை அரசு மட்டும் நிறைவேற்ற முடியாது என்பதை புரிந்துகொள்ள முடியும். ஆனால், மருத்துவ சேவை அளிப்பதாக அறிவித்து களத்தில் இறங்கிய தனியார் துறையினர் முழுமையான வர்த்தக கேந்திரங்களாக மருத்துவமனைகளை மாற்றியதை அரசு கட்டுப்படுத்த தவறியது மிகப்பெரிய ஏமாற்றம். கல்வித் துறையில் கண்ட அதே நிகழ்வுகள் மருத்துவத் துறையிலும் அரங்கேறின. போட்ட முதலீடை எவ்வளவு சீக்கிரம் எடுக்க முடியும் என்ற அவசரத்திலும், கணிசமான லாபம் சம்பாதிக்கும் குறிக்கோளிலும் நியாயத்துக்கு புறம்பான நடவடிக்கைகள் இரு துறைகளிலும் வாடிக்கையாகி விட்டன. இதை கண்டும் காணாததுபோல அரசு தன் பங்குக்கு பொது மருத்துவமனைகளை மேம்படுத்தாமலும் புதிதாக நிர்மாணிக்காமலும் நிதி ஒதுக்கீட்டில் கஞ்சத்தனம் செய்கிறது. நாட்டின் மொத்த உற்பத்தியில் ஒன்றரை  சதவீதம் மட்டுமே மருத்துவத்துக்கு செலவிடப்படுகிறது. பணக்கார நாடுகளில் அரசு 13 சதவீதம் செலவிடுகிறது. ஏழை நாடுகள்கூட 5.3 சதவீதம் செலவு செய்கின்றன. கல்வியும் மருத்துவமும் சமுதாயத்தின் இன்றியமையாத அடிப்படை தேவைகள். இந்தியாவை பொருத்தவரை இந்த இரண்டு வகையிலும் செலவுகள் மிக அதிகம். மருத்துவ சிகிச்சைக்கு ஆன செலவால் சொத்து சுகங்களை இழந்து வறுமைக்கோட்டுக்கு கீழே விழுந்து திண்டாடும் குடும்பங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

ஸ்பெஷலிஸ்டுகள் அதிகரித்ததற்கு ஈடாக பொது மருத்துவர்கள் எண்ணிக்கை குறைந்ததால் உடலில் என்ன நோய் என்பதை தெரிந்துகொள்வதற்கே பல டாக்டர்களை நாட வேண்டிய கட்டாயம். ஒவ்வொருவரும் எழுதிக் கொடுக்கும் பரிசோதனைகளை முடிப்பதற்குள் பாதிப் பணம் காலி. சிகிச்சைக்கும் மருந்துக்கும் கடன் வாங்கி சமாளிக்க எத்தனை பேரால் முடிகிறது? நெருக்கடியான இந்த சூழ்நிலையில் மருத்துவமனைகளின் தரத்துக்கு ஏற்ப சிகிச்சை கட்டணங்களை வெளிப்படையாக நிர்ணயிக்கவும் தேவையற்ற பரிசோதனைகளை தவிர்க்கவும் அரசு எடுக்கும் முயற்சி ஓரளவாவது மாற்றம் ஏற்பட உதவும்.



நன்றி: Dinakaran 

வேண்டாம் அபராதம்

ஏழை, பணக்காரன் வித்தியாசமில்லாமல் எல்லோருக்கும் கிடைத்து வருவது நியாயமான நீதி மட்டும்தான். கொலைகாரன் யார் எனப் பார்ப்பதில்லை சட்டம். யாராக இருந்தாலும் தண்டனை ஒன்றுதான். நீதிபதிகள் விதிக்கும் அபராதத்தை பணக்காரர்கள் கட்டி விடுகிறார்கள். ஏழைகளால் முடிவதில்லை. இதனால் அவர்கள் கூடுதல் காலம் தண்டனை அனுபவிக்க வேண்டியுள்ளது. இதற்கு முடிவு கட்ட முன்வந்துள்ளது உச்ச நீதிமன்றம்.திருட்டு, வழிப்பறி, கொள்ளை போன்ற வழக்குகளில் சிறை தண்டனையோடு, கீழ் கோர்ட்டுகளில் அபராதமும் விதிக்கப்படுகிறது. இதை செலுத்த தவறினால், குற்றவாளிகள் கூடுதலாக சில காலம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும். பணம் கட்ட முடியாத ஏழைகள் கூடுதல் சிறைத் தண்டனையை ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால், ஏழை குற்றவாளிகளுக்கு அபராதம் விதிப்பதை தவிர்க்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சதாசிவம், ரஞ்சன் கோகாய் ஆகியோர் கூறியுள்ளனர்.ஒரு வழக்கில் குற்றவாளிக்கு போதுமான தண்டனையை அறிவித்த பிறகு, அபராதமும் விதிக்கக் கூடாது. குறிப்பாக, குற்றவாளிகள் ஏழைகளாக இருந்தால் தண்டனையோடு நிறுத்திக் கொள்ளலாம். குற்றத்தின் தன்மை, எந்த சூழலில் குற்றம் இழைக்கப்பட்டுள்ளது, குற்றவாளியின் பொருளாதார நிலை போன்றவற்றை கருத்தில் கொண்டுதான் அபராதம் விதிக்க வேண்டும். எல்லோருக்கும் அபராதம் விதிக்கப்படும் சூழ்நிலையில், பெரும்பாலான ஏழைகளால் அபராதம் செலுத்த முடிவதில்லை. அதனால் அவர்கள் கூடுதல் தண்டனை அனுபவிக்க தயாராகி விடுகிறார்கள். அபராதம் செலுத்த முடியாததால் கூடுதல் தண்டனை அனுபவிப்பதை ஏற்க முடியாது. அது அபராதம் செலுத்தாததற்கான அபராத தண்டனை போல் ஆகி விடுகிறது. குற்றத்துக்குத்தான் தண்டனை. அபராதம் செலுத்தாதற்கு அல்ல என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள சிறைகளில் எத்தனையோ லட்சம் கைதிகள் ஜாமீன் தொகை கூட கட்ட முடியாததால் வெளியே வர முடியாமல் இருக்கிறார்கள். இதனால் விசாரணைக் கைதிகளாக அவர்கள் சிறையில் கழிக்கும் காலம், வழக்கு முடிந்து பெறும் தண்டனைக் காலத்தை விட அதிகமாகி விடுகிறது. இப்படி தண்டனை அனுபவித்த குற்றவாளிகள் நிரபராதி என விடுதலையாகும்போது, அவர்கள் நிலைமை இன்னும் மோசமாகி விடுகிறது.



நன்றி: Dinakaran 

பாரபட்சத்துக்கு இடமில்லை


நியாயம் பேசுவதில் முதலிடம் நமக்குதான். யார் என்ன பேசலாம், எப்படி நடக்கலாம் என்று பாடம் எடுப்போம். எதெல்லாம் தப்பு என்று சுட்டிக் காட்டுவோம். ஆனால் பின்பற்ற மாட்டோம். உபதேசம் ஊருக்கு என்பது அப்படி வந்ததுதானே. விரல் ரேகை பதிவேடு பற்றி காந்தி பிறந்த நாளில் இந்த பகுதியில் வெளியான கருத்துக்கு கிடைத்த வரவேற்பும் எதிர்ப்பும் மேற்படி பழமொழியை நினைவுபடுத்துகிறது. மருத்துவமனைகளில் வருகையை பதிவு செய்ய பயோ மெட்ரிக் முறை அமல்படுத்துவதை நர்ஸ்கள் உட்பட அனைத்து பணியாளர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். டாக்டர்களுக்கு மட்டும் இரண்டு சந்தேகங்கள்: மற்ற துறைகளின் பணியாளர்களை விட்டு விட்டு எங்களை குறி வைப்பது ஏன்? நேரத்துக்கு வந்துவிட்டால் பணி நேரம் முடிந்ததும் ஆபரேஷனைக்கூட அப்படியே விட்டுவிட்டு போகமுடியுமா? முதல் கேள்விக்கு அரசிடம் பதில் இருக்கிறது. எல்லா துறைகளிலும் கையெழுத்திடும் வருகை பதிவேடுக்கு பதில் மின்னணு தொழில்நுட்பத்தில் கம்ப்யூட்டருடன் இணைந்த பயோ மெட்ரிக் அட்டெண்டன்ஸ் முறையை கொண்டுவர தமிழக அரசு முனைந்துள்ளது. மத்திய அரசின் பெரும்பாலான துறைகளிலும் பல மாநிலங்களிலும் முழுமையாக இந்த முறைக்கு மாறிவிட்டார்கள்.

 தமிழகத்தில் மருத்துவமனைகளுக்கு அடுத்ததாக பள்ளி, கல்லூரிகளில் நடைமுறைப்படுத்த இருக்கின்றனர். தாமத வருகை, மட்டம் போடுதல் ஆகியவற்றால் அதிகம் பாதிக்கப்படும் துறைகளை கணக்கெடுக்கும்போது மருத்துவம் முதலிலும் அதையடுத்து கல்வியும் வருகின்றன. கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் மறியல் என வகுப்புக்கு வெளியே திறமை காட்டும் போக்கு அதிகரித்து வருவதை அரசு உணர்ந்துள்ளதும் காரணம். டாக்டர்களின் இரண்டாவது கேள்வியில் நியாயம் இல்லை. ஒரு நாளைக்கு 6 மணி நேரம் வேலை என்ற வரையறை அவர்களின் ஒப்பற்ற சேவையை கட்டுப்படுத்த நிர்ணயித்தது அல்ல. அப்படியே நினைத்தாலும், கூடுதல் நேர பணியை அடுத்தடுத்த நாட்களில் அல்லது வார இறுதியில் ஈடுகட்ட வழியிருக்கிறது. தவறுகள் குறையவும் மனிதவள நிர்வாகம் சீராகவும் தொழில்நுட்பம் உதவுகிறது. அதை வரவேற்காமல் நேரத்தை சாக்கிட்டு அவரவர் கடமையை அரைகுறையாக நிறுத்தினால் உலகம் ஸ்தம்பித்துவிடும்.



நன்றி: Dinakaran 

தேர்தல் மணியோசை


இன்சூரன்ஸ், பென்ஷன் துறைகளில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்திருப்பதை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இரண்டாவது பாய்ச்சல் எனலாம். டீசல் விலை உயர்வு, சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு முதலாவது. அந்த நடவடிக்கைகளுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவையில்லை என்பதால் அரசுக்கு பெரிய ஆபத்து இல்லை. இப்போது அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் அவசியம். திருணாமுல் காங்கிரஸ் வெளியேறிய பிறகு காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு மன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மை  இல்லை. மம்தாவால் ஏற்பட்ட வெற்றிடத்தை  நிரப்ப முன்வந்த முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சியும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும்கூட இந்த அறிவிப்புகளை ஆதரிக்கும் என தோன்றவில்லை. அமெரிக்காவில் தொடங்கிய பொருளாதார சரிவின் ஆரம்பத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்டது அங்குள்ள இன்சூரன்ஸ், பென்ஷன், பாங்க் கம்பெனிகள்தான் என்பது மக்களுக்கு அதற்குள் மறந்திருக்காது. இந்த சூழ்நிலையில் இந்தியாவில் அதே பாணியிலான மாற்றங்களை பொருளாதார சீர்திருத்தம் என்ற முத்திரையுடன் அரசு அமல்படுத்துவதை அவர்களால் வரவேற்க முடியாது. டீசல் மானியத்தை விலக்கிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம், சில்லரை விற்பனையில் அன்னிய முதலீடுகளால் நேரக்கூடிய சாதகமான மாற்றங்கள் ஆகியவை குறித்தே இன்னமும் மக்களுக்கு விளக்கமாக எடுத்துச் சொல்லி அவர்களின் சந்தேகங்களை போக்க அரசு முன்வரவில்லை. இதனால் அரசின் நோக்கத்தை சந்தேகிக்காத நடுநிலையாளர்களும் தனிமைப்பட்டு நிற்கிறார்கள். பங்குச் சந்தையில் பட்டாசு வெடிப்பதால் மட்டும் நடப்பதெல்லாம் நல்லதுக்கே என்ற முடிவுக்கு நாட்டு மக்கள் வந்துவிட மாட்டார்கள். பொது நிலங்கள், நிறுவனங்கள், சொத்துகளை தனியாருக்கு அளிப்பது போதாதென்று கோடிக்கணக்கான மக்களுக்கு சேர வேண்டிய இன்சூரன்ஸ், பென்ஷன் நிதியும் கைமாற வழி வகுக்கப்படுகிறதோ என்ற பீதியை எதிர்க்கட்சிகளால் சுலபமாக உண்டாக்க முடியும். அதன் விளைவு இந்த ஆட்சி நீடிப்பதற்கு எந்த வகையிலும் உதவாது.சரியான விளக்கம் அளித்து மக்களின் நம்பிக்கையை பெறாமல் அடுத்தடுத்து வெளியிடப்படும் அறிவிப்புகள் அடுத்த ஆண்டே நாடாளுமன்ற தேர்தல் வருவதற்கான மணியோசையாக ஒலிக்கிறது.




நன்றி: Dinakaran 

மெய்யழகு பொய்யழகு


ஜெயித்துக் கொண்டே இருப்பவனுக்கு வெற்றி கசப்பதில்லை. ஆனால் முதல் வெற்றி போல முழுமையாக எப்போதும் இனிப்பதில்லை. போகப்போக பரவசம் குறைகிறது.  இதைத்தான் சொல்ல வந்தார்  ஜெய்ஸ்வால். சுவாரசியத்துக்காக அந்த கருத்தில் அவர் சேர்த்துக் கொண்ட விஷயம் சிக்கலை வரவழைத்திருக்கிறது. கவிஞர்கள் மாநாட்டில் அவர் பங்கேற்ற வேளையில் டி20 போட்டியில் பாகிஸ்தானை இந்தியா தோற்கடித்த செய்தி வந்திருக்கிறது. பகிர்ந்துகொள்ள விரும்பியவர், கிரிக்கெட்டில் வெற்றிகள் நமக்கு பழகிப்போனதால் முன்பு போல குதித்து கொண்டாட தோன்றவில்லை என்றார். கவிஞர்கள் மத்தியில் இருந்ததால் உவமை சொல்லாமல் தப்ப முடியவில்லை. நாளாக நாளாக மனைவியை போல வெற்றியும் களையிழந்து விடுகிறது என்று கூறிவிட்டார். நிலக்கரி அமைச்சராக இருப்பவர் தனக்கு கரி பூசிக் கொள்ளலாமா? மகளிர் அமைப்புகள் கொதிக்கின்றன. ஒரு பெண் வழக்கு போட்டுள்ளார். பெண்களை அவதூறாக பேசி இழிவு படுத்திவிட்டார் என்று. குற்றச்சாட்டு நிரூபணமானால் 2 ஆண்டுகள் கிரிக்கெட் பார்க்க முடியாது. மனைவியையும் முடியாது. தீவிர கிரிக்கெட் ரசிகரான ஜெய்ஸ்வாலுக்கு மணமாகி 45 ஆண்டுகள் ஆகின்றன. மனைவி என்ன சொல்கிறார் என்று தெரியவில்லை. பழகப்பழக பாலும் புளிக்கும் என்பது பழ மொழி. பழசானால் மனைவிக்கு மட்டும்தான் கவர்ச்சி குறையுமா, என்ன? கணவனுக்கும் அது பொருந்தும். காதலுக்கும் பொருந்தும். காலத்தின் எதிர்த்திசையில் பயணிப்பது விலைவாசி மட்டுமே.ஆனால் இதெல்லாம் சொல்லி நியாயப்படுத்த அமைச்சர் தயாரில்லை. விமான பயணிகளை விமர்சித்த சசி தரூர் மாஜியான கதை நினைவிருப்பதால்  உஷாராக இருக்கிறார். 'அம்மாக்களையும் சகோதரிகளையும் என் பேச்சு புண்படுத்தி இருந்தால் இருகை கூப்பி வணங்கி மன்னிப்பு கேட்கிறேன்' என்று டெலிவிஷனில் தலை தாழ்த்தினார். சபைக்கு ஏற்றவாறு பேசுவது மேடை பேச்சாளர் இலக்கணம். எல்லா இடத்திலும் ஒரே மாதிரி பேச முடியாது. ரசிக்க மாட்டார்கள். கைதட்டல் கிடைக்காது. இப்படி மிரட்டல்கள் எழுந்தால் பொது நிகழ்ச்சியில் பொய் தவிர எதுவும் பேச முடியாத நிலை வந்துவிடும். (இனிதானா?)  கவிதைக்கு பொய்யழகு என்றார் வைரமுத்து. கவிஞர்கள் சூழலில் அமைச்சரும் பொய் பேசியிருந்தால் சுழலில் சிக்கியிருக்க மாட்டார்.




நன்றி: Dinakaran

சர்வாதிகாரிகள் கடைசியில் இப்படித்தான் சாகிறார்கள்


தன்னை காப்பாற்றிக்கொள்ள அடுத்தவரை காட்டிக் கொடுப்பதும், அள்ளி அள்ளி கொடுத்திருந்தாலும் தனக்கு ஆபத்து என்றால் போட்டுத் தள்ளுவதும் உள்ளூர் அரசியலில் மட்டுமல்ல, உலக அரசியல்வரை சகஜமான விஷயம். லிபியாவின் அதிபராக, அசைக்க முடியாத தலைவராக இருந்த கடாபி, பாதாள சாக்கடையில் பதுங்கியிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். சுட்டுத்தள்ள உத்தரவிட்டது பிரான்ஸ் அதிபர் என்பதும் அவரை காட்டிக்கொடுத்தது சிரியா அதிபர் என்பதும் தெரிய வந்துள்ளது.உலகம் முழுவதும் இருக்கும் சர்வாதிகாரிகள், ரகசியமாக பல நாட்டுத் தலைவர்களுடன் தொடர்பு வைத்திருப்பார்கள். தேர்தல் நேரத்தில் கோடிக்கணக்கில் டாலர்களை கொட்டுவார்கள். கோடிகள் கொட்டும் பிசினஸ் டீலிங்கை செய்து கொடுப்பார்கள். இதெல்லாம் ஆபத்து வரும்போது ஆதரவு குரல் கொடுக்கவும் தேவைப்படும்போது அடைக்கலம் கொடுப்பதற்கும்தான். அப்படித்தான் லிபியா அதிபர் கடாபி, பல நாட்டுத் தலைவர்களுக்கும் பண உதவி செய்திருக்கிறார். 2007ல் பிரான்ஸ் அதிபர் தேர்தலில் சர்கோசி பிரசாரத்துக்கு பல கோடி டாலர்களை கடாபி வழங்கினார். இவருக்கு மட்டுமல்ல, இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர்க்கும் பல கோடி டாலர்கள் கிடைக்கும்படி வர்த்தக தொடர்புகளை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். எதெல்லாம் ஆபத்து காலத்தில் தனக்கு உதவியாக இருக்கும் என கடாபி நினைத்தாரோ அதுவே அவருக்கு எமனாகிவிட்டது. நேட்டோ படைகள், கடாபியை வேட்டையாடியபோது பிரான்சும் களம் இறங்கியது.

 கடுப்பாகிப்போன கடாபி, தேர்தலுக்கு சர்கோசிக்கு தான் கொடுத்த டாலர்களை நினைவூட்டி எச்சரித்தார். அப்போதே கடாபி உயிரோடு பிடிபட்டால் தனக்கு ஆபத்து என்பதை உணர்ந்த சர்கோசி, கடாபிக்கு எதிரான கிளர்ச்சியாளர் கூட்டத்தில் பிரான்ஸ் உளவாளியை சேர்த்தார். கடாபி யின் இருப்பிடத்தை அறிந்துகொள்ள சிரியா நாட்டு சர்வாதிகாரியான ஆசாத் உதவினார். கடாபியின் சேட்லைட் போன் நம்பரை கொடுத்தார். அதன்மூலம் கடாபியின் இருப்பிடம் தெரிந்து நேட்டோ விமானங்கள் தாக்குதல் நடத்தின. அதில் தப்பித்து பாதாள சாக்கடையில் பதுங்கியிருந்த கடாபியை பிரான்ஸ் உளவாளி கொன்றிருக்கிறார். சர்வாதிகாரிகள் கடைசியில் இப்படித்தான் சாகிறார்கள். மக்களை வஞ்சித்து ஏமாற்றும் அவர்களும் வஞ்சிக்கப்பட்டே இறக்கிறார்கள்.



நன்றி: Dinakaran

Tuesday, 2 October 2012

நேரம் தவறாமை பாரமாக தெரியாது


இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவமனைகளில் ஒன்றான சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணியாளர்கள் வருகையை மின்னணு முறையில் பதிவு செய்வதற்கான கருவிகள் செயல்பட தொடங்கியுள்ளன. கணினி தொழில்நுட்பம் எல்லா துறைகளிலும் ஆதிக்கம் செலுத்திவரும் நிலையில் முக்கியமான பொது மருத்துவமனையில் இத்தனை காலமாக பயோமெட்ரிக் ஸ்கேனர்கள் புழக்கத்துக்கு வராமல் இருந்ததே ஆச்சரியம். தனியார் நிறுவனங்களில் இந்த முறை என்றோ அமலுக்கு வந்துவிட்டது. விரல் ரேகையுடன் பெயர், பிறந்த தேதி, துறை போன்ற விவரங்களை கணினியில் முன்பதிவு செய்துகொண்டால் அன்றாடம் உள்ளே நுழையும்போது வெளியே செல்லும்போது விரல் நீட்டினால் போதும் நேரத்தை பதிவு செய்துவிடும் ஸ்கேனர். ஆள் மாறாட்டம் செய்யவோ வேறுவகை முறைகேடு நடக்கவோ வாய்ப்புகள் இல்லை.பதிவு செய்துவிட்டு உடனே வெளியே சென்றுவிட்டால் எப்படி கண்டு பிடிக்க முடியும் என்று சிலர் கேட்கின்றனர். அதற்கும் சுலபமான தொழில்நுட்ப வழிமுறைகள் இருக்கின்றன. அடையாள அட்டையில் பொருத்தப்பட்டுள்ள சில்லு மூலம் சம்பந்தப்பட்ட பணியாளர் அந்த வளாகத்தில் இருக்கிறாரா இல்லையா என்பதை கணினியில் காணமுடியும். டாக்டர்களும் நர்ஸ்களும் ஏனைய பணியாளர்களும் உரிய நேரத்தில் பணிக்கு வருவதில்லை, பணி நேரம் முடியும்வரை அங்கு இருப்பதில்லை  என்பது நீண்டகாலமாக பொதுமக்களால் கூறப்படும் புகார். இதற்கு தீர்வு காணும்போது சுகாதார குறைவு, எலிகள், நாய்கள் நடமாட்டம் போன்ற இதர புகார்கள் தானாகவே மறைந்துவிடும். பயோமெட்ரிக் ஸ்கேனர்கள் செயல்படும் தனியார் மருத்துவமனைகள், பள்ளிகள், நிறுவனங்களில் பொதுவான ஒழுங்கீனங்கள் வெகுவாக குறைந்திருப்பதை பல ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. ஏனெனில் நேரம் தவறாமை என்பது பெரும்பாலான இந்தியர்களுக்கு அன்னியமான விஷயமாக இருந்தாலும், ஒழுங்குகளில் எல்லாம் முதன்மையானது அதுதான். பணம் செலுத்தி பயணம் செய்யும் ரயிலை பிடிக்க விழுந்தடித்து ஓடுவோம்; பணம் கொடுத்து வாழவைக்கும் நிறுவனத்துக்கு இஷ்டப்படி செல்வோம். குறிப்பிட்ட நேரம் உழைப்பதற்காக ஊதியம் பெறும்போது, தாமதிக்கும் நிமிடம் ஒவ்வொன்றும் தங்கம் திருடுவதற்கு சமம் என்ற உணர்வு இருந்தால் நேரம் தவறாமை பாரமாக தெரியாது.





நன்றி: Dinakaran 

Monday, 1 October 2012

முதியோருக்கு கொடுமை


உலகம் முழுவதுமே முதியோர் படும் அவஸ்தை சொல்லி மாளாது. வருவாய் இழந்து, உடல் தளர்ந்து, நோய்வாய்பட்ட சூழ்நிலையில், அவர்களின் மனம் புண்படும்படி கொடுமைகள் நடப்பது அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. சர்வதேச சராசரி 4 முதல் 6 சதவீதம். இந்தியாவில் 32 சதவீதம். இந்தியாவில் 22 நகரங்களில் 5,500 முதியோரிடம் ஹெல்பேஜ் இந்தியா என்ற அமைப்பு சமீபத்தில் நடத்திய ஆய்வில் பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வந்துள்ளன. முதியோருக்கு எதிரான கொடுமை அதிகம் நடப்பது மத்திய பிரதேசத்தில்தான். 77 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தானில் மிகவும் குறைவு. 1.67 சதவீதம்தான். தமிழகத்தில் 28 சதவீத முதியோர் பலவித இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். பிள்ளைகள் என்னதான் கொடுமை செய்தாலும் 80 சதவீதம் பெற்றோர் அதை வெளியில் யாரிடமும் சொல்வதில்லையாம். ஏறக்குறைய 50 சதவீதம் பேர் ஐந்து ஆண்டுகளுக்கும் அதிகமாக கொடுமைகளை அனுபவித்து வருவது மற்றொரு அதிர்ச்சி தகவல்.பொதுவாக, குடும்பத்தில் வயதான பெற்றோர் அனுபவிக்கும் கொடுமைக்கு மருமகள்தான் காரணமாக இருப்பார்கள் எனக் கூறுவார்கள். ஆனால், தற்போது நடத்தப்பட்ட ஆய்வில் மகன்கள் முதலிடத்தில் இருக்கிறார்களாம். பெற்றோரை திட்டுவது, சாப்பாடு போடாமல் தவிக்க விடுவது, முதியோர் இல்லத்தில் சேர்ப்பது போன்ற கொடுமைகளை செய்வதில் 56 சதவீதம் பேர், மகன்கள் தான். மருமகளுக்கு இரண்டாவது இடம். 23 சதவீதம். கடைசி காலத்தில் நம்மை நன்றாக வைத்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில் சேர்த்து வைத்த பணம் அனைத்தையும் செலவழித்து, படிக்க வைத்து, ஆளாக்கியதற்கு இப்படித்தான் பிள்ளைகள் நன்றிக் கடன் செய்கிறார்கள்.அரசு வேலை பார்த்து ஓய்வு பெற்ற பின் பென்ஷன் வாங்குபவர்களும் சுதாரிப்பாக சொத்து சேர்த்த முதியோரும் மட்டுமே ஓரளவுக்கு கவுரவமாக வாழ்கிறார்கள். பென்ஷன் இல்லாத பெரும்பாலோர் ஒரு கவளம் சாப்பாட்டுக்கும் ஒரு வாய் காபிக்கும் வெளியில் சொல்ல முடியாத கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள். முதியோருக்கு ஆதரவாக சட்ட திட்டங்கள் இருந்தாலும் யாரும் புகார் செய்ய முன்வருவதில்லை என்பதால், கொடுமைகள் வெளியில் தெரியாமலே போய் விடுகிறது.





நன்றி: Dinakaran

கசப்பு மருந்து யாருக்கு? - முக்கியமான மருந்துகளின் விலைகளுக்கு உச்சவரம்பு


முக்கியமான மருந்துகளின் விலைகளுக்கு உச்சவரம்பு நிர்ணயிக்க அரசு எடுத்துள்ள முடிவை மருந்து கம்பெனிகள் உற்சாகமாக வரவேற்பதை பார்த்தால் குழப்பமாக இருக்கிறது. மக்கள் பாராட்ட வேண்டிய நடவடிக்கையாக இருந்தால் மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு அது கசப்பாகவே இருக்க முடியும். அதிகபட்சம் இத்தனை ரூபாய்க்கு மேல் விற்கக்கூடாது என்பதுதான் விலை உச்சவரம்பு. அது சட்டமாகும்போது கம்பெனிகள் இஷ்டத்துக்கு விலை நிர்ணயிக்க முடியாது. கொள்ளை லாபம் பார்க்க முடியாது. அவசிய மருந்துகள் என்ற பெயரில் அரசு ஒரு பட்டியல் வைத்துள்ளது. அதில் 348 மருந்துகள் இருக்கின்றன. ஆரம்ப சுகாதார நிலையம் முதல்  தனியார் மருத்துவமனைகள் வரை நமது நோயாளிகள் அதிகமாக வாங்கி பயன்படுத்தும் மருந்துகள். இவற்றை மருந்து விலை கட்டுப்பாடு உத்தரவின்கீழ் அரசு கொண்டுவருகிறது. ஆனால் விலையை நிர்ணயிக்கும் முறை மாறியிருக்கிறது. குறிப்பிட்ட ஒரு நோய்க்கான மருந்து பல பெயர்களில் கிடைக்கும். ஒவ்வொன்றின் விலையும் வேறுபடும். அத்தனை விலைகளையும் கூட்டி அதன் சராசரியை உச்சபட்ச விலையாக அரசு நிர்ணயம் செய்ய இருக்கிறது. உற்பத்தி செலவு எவ்வளவு ஆகிறது என்பதை கணக்கிட்டு அதற்கு மேல் நியாயமான அளவு லாபம் வைத்து விலை நிர்ணயம் செய்யாமல் விற்பனை அளவை அடிப்படையாக வைத்தது கேள்விக்குரிய முடிவு. உண்மையில் கொள்ளை லாபத்தை தடுக்கும் வழி அது ஒன்றுதான். 1996ல் இருந்து பத்தாண்டுகளில் மருந்து விலைகள் 40 சதவீதம் உயர்ந்துள்ளன. அரசு கட்டுப்பாட்டில் வராத மருந்துகளின் விலை 137 சதவீதம் அதிகரித்துள்ளது. இப்படி எகிறுவதை தடுக்காமல் வேறு வகையில் விலை நிர்ணயம் செய்வதால் இப்போது மலிவாக கிடைக்கும் மருந்துகளின் விலையும் உயர வாய்ப்பிருக்கிறது. தவிர, மருந்தின் மூலப்பொருட்களை மாற்றியமைத்து விலை வரம்புக்குள் வராமல் பன்னாட்டு கம்பெனிகள் தப்பவும் இடமிருக்கிறது. டாக்டர் எழுதிக் கொடுத்த மருந்துக்கு பதில் வேறொன்று தரலாமா என கடைக்காரர் கேட்டால் பெரும்பாலானவர்கள் மறுப்பதுதான் வாடிக்கை. அந்த அளவுக்கு விற்பனையாளர் சந்தையாக விளங்கும் மருந்து தொழிலில் விலைக் கட்டுப்பாடு கொண்டுவருமுன் அரசு வெளிப்படையான விவாதம் நடத்துவதே முறையானது.





நன்றி: Dinakaran

. மின்சார சிக்கனம் என்பது ஏழைகளும் நடுத்தர மக்களும் மட்டுமே பின்பற்ற வேண்டிய கொள்கையா?


மின்சார பற்றாக்குறையால் தமிழ்நாடு கற்காலம் நோக்கி பின்னிறங்குகிறது. தேவையைவிட நாலாயிரம் மெகாவாட் மின்சாரம் குறைவாக கிடைப்பதாக அரசு தெரிவிக்கிறது. அதாவது 12,000 மெகாவாட்டுக்கு மேல் தேவை. கிடைப்பது எட்டாயிரம் மெகாவாட். அதிலும் காற்றாலைகள் மூலம் வரும் என கணக்கிட்டது 2900 மெகாவாட். கிடைப்பது 100 முதல் 500 வரையாம். இதனால் மாவட்டங்களில் 12 முதல் 16 மணி நேரம் வரையில் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. விவசாயம், சிறு தொழில், ஆலை உற்பத்தி, வணிகம் அனைத்தும் முடங்கிவிட்டன. மாணவர்கள் படிக்க வெளிச்சம் இல்லை. குழந்தைகள், முதியவர்கள் கொசு கடிக்காமல் தூங்க வழியில்லை. பெண்கள் சமைக்க, துவைக்க, தண்ணீர் பிடிக்க முடியவில்லை. வாழ்க்கை இந்தளவு மோசமாகும் என்று யார் எதிர்பார்த்திருக்க முடியும்?  பிழைக்க வழியில்லாமல் கோவை, திருப்பூர், ஈரோடில் இருந்து சாரை சாரையாக தொழிலாளர்கள் வெளியேறுகின்றனர். உற்பத்தி முடங்கி வட்டி கட்ட திணறும் தொழிலதிபர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்க குஜராத் போன்ற மாநிலங்கள் காத்திருக்கின்றன. சென்னையில் வசிப்பவர்கள் மனது வைத்து ஏர்கண்டிஷனர், அயன் பாக்ஸ், வாட்டர் ஹீட்டர், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்களை இரண்டு மாதமாவது பயன்படுத்தாமல் இருந்தால், இங்கு மிச்சமாகும் மின்சாரத்தை மாவட்ட மக்களுக்கு கொடுக்க முடியும் என்று உயர் அதிகாரி ஒருவர் உருக்கமான வேண்டுகோள் விடுத்திருக்கிறாராம். தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாக கதவை தட்டி ஃபேன், மிக்சி, கிரைண்டர் இலவசமாக கொடுத்த அரசிடம் இருந்து இவ்வளவு சீக்கிரமாக இப்படியொரு அறிவுரையை மக்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். சரியாக கிடைக்காத மின்சாரத்துக்கு கட்டணத்தை மூன்று மடங்காக உயர்த்தியதில் இருந்தே பொதுமக்கள் ஸ்விட்ச் போடுமுன் மூன்று முறை யோசிக்கிறார்கள் என்பது அதிகாரிக்கு தெரியவில்லை. வண்ண விளக்குகளை பயன்படுத்தக்கூடாது என்ற அரசின் எச்சரிக்கைக்கு மாறாக, ஆடம்பர பொருள் விற்கும் கடைகள் இரவை பகலாக்கும் விளக்குகளால் ஜொலிப்பதும் அதிகாரிகளுக்கு மட்டும் தெரியவில்லை. மின்சார சிக்கனம் என்பது ஏழைகளும் நடுத்தர மக்களும் மட்டுமே பின்பற்ற வேண்டிய கொள்கை என அதிகாரிகள் நினைக்கிறார்கள் போலும்.





நன்றி: Dinakaran 

மினி டாக்டர் ( பி.எஸ்சி கம்யூனிடி ஹெல்த்) பராக்


மூன்றரை ஆண்டு மருத்துவ படிப்புக்கு இந்திய மருத்துவ கழகம் அனுமதி வழங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறதா கவலை தருகிறதா என்று டாக்டர்களாலும் அதிகாரிகளாலும் சரியாக சொல்ல முடியவில்லை. எம்.பி.பி.எஸ் டாக்டர்கள் நகரங்களில் மட்டுமே வேலை செய்ய விரும்புகின்றனர். ஒரு வருடமாவது கிராமத்தில் பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனை பின்பற்றப்படுவதில்லை. நாட்டு மக்களில் 72 சதவீதம் பேர் கிராமங்களில் வசிக்கின்றனர். ஆனால் 26 சதவீத டாக்டர்கள்தான் அவர்களுக்கு கிடைக்கின்றனர். சம்பாதிக்கும் ஆசையும் நகரத்தின் வசதிகளும்தான் டாக்டர்களை கிராமங்களுக்கு போகவிடாமல் தடுக்கிறது என்று சொல்ல முடியாது. வசிக்கவும் தொழில் செய்யவும் சுகாதாரமான சூழல், குடிநீர், மின்சாரம், சாலை, பாதுகாப்பு போன்ற வசதிகளை உருவாக்கி கொடுத்தால் கிராமங்கள் கசக்காது. எனினும், மாற்று ஏற்பாடு செய்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் அரசு தள்ளப்பட்டுள்ளது புரிகிறது. கெடுபிடிகளை தளர்த்தி நிறைய மருத்துவ கல்லூரிகள் தொடங்க அனுமதிக்கலாம். அதை விடுத்து பி.எஸ்சி கம்யூனிடி ஹெல்த் என்ற புதிய படிப்பால் என்ன சாதிக்க முடியும் என தெரியவில்லை. மருத்துவ கல்லூரிகளில் சொல்லித் தருவார்களா, அறிவியல் கல்லூரிகளில் படிப்பதா, தனி கல்லூரிகள் நிறுவப்படுமா? பெயருக்கு முன்னால் டாக்டர் என்று போடலாமா? போடாவிட்டால்  நம்பிக்கையுடன் யாரும் சிகிச்சைக்கு வருவார்களா? இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்தவர்கள் பாணியில் ஜூனியர் டாக்டர் என்று சொல்லிக் கொள்ளலாமா? ஐந்தாண்டு படித்தவர்களே டெஸ்ட் எடுக்க அனுப்பி நோயை கண்டுபிடிக்கும் சூழலில் மூன்றரை ஆண்டு முடித்தவர்கள் நோயையும் காரணங்களையும் துல்லியமாக கண்டறிந்து மருந்து மாத்திரை சிபாரிசு செய்ய முடியுமா? நகரில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு நோயாளிகளை அனுப்பிவைக்கும் ஏஜன்டுகளாக இவர்கள் மாறிவிடாமல் தடுக்க வழி இருக்கிறதா? இவர்கள் நிரந்தரமாக கிராமங்களில்தான் தங்கி சேவை செய்வார்கள் என்பதை எவ்வாறு உறுதி செய்வது? ஏதேனும் துணை மருத்துவ படிப்பு முடித்து டாக்டர்களின் கீழ் நேரடி அனுபவம் பெற்றவர்களால் இந்த சேவையை வழங்க முடியாதா? இது போன்ற கேள்விகளுக்கு அரசும் மருத்துவ கழகமும் திருப்தியான பதில் அளித்தால்தான் புதிய திட்டத்தின் தகுதியை பொதுமக்களால் தீர்மானிக்க முடியும்.





நன்றி: Dinakaran 

யார் குற்றவாளி?


ஆங்கிலப் படத்தின் கதை போல் தான் இருக்கிறது, இஸ்ரோவின் மூத்த விஞ்ஞானியாக இருந்து உளவாளியாக முத்திரை குத்தப்பட்ட நம்பி நாராயணனின் கதை. பாதுகாப்பு ரகசியம் பல கோடிக்கு விற்பனை என குற்றம் சாட்டப்பட்டு, சிபிஐ விசாரணைக்குப் பிறகு அத்தனையும் பொய் என தெரிய வந்தது. ஆனால் அனுபவித்த வேதனை, 50 நாள் சிறைவாசம், பட்ட அவமானம் அத்தனைக்கும் யார் பதில் சொல்வது?அது 1994ம் ஆண்டு, நவம்பர் 30ம் தேதி. இஸ்ரோ விஞ்ஞானிகள் நாராயணன், சசிக்குமார் என 6 பேரை கைது செய்கிறது போலீஸ். பாதுகாப்பு ரகசியங்களை மாலத்தீவு பெண்கள் மூலம் வெளிநாட்டுக்கு விற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. 50 நாள் சிறைவாசம். வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு, 1998ல் உச்ச நீதிமன்றம் அத்தனை பேரும் நிரபராதிகள் என தீர்ப்பு அளித்தது. அதுவரை அத்தனை பேரும் பட்ட அவமானம் கொஞ்ச நஞ்சமல்ல. பொய் வழக்கில் சிக்க வைத்ததற்கு இழப்பீடு கேட்டு நம்பி நாராயணண், தேசிய மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். அவருக்கு 10 லட்சம் கொடுக்கும்படி உத்தரவிட்டது. கடந்த வாரம் கேரள உயர் நீதிமன்றம் இதை உறுதி செய்துள்ளது. ஆனாலும் தன்னை சிக்கவைத்தவர்களை விடப் போவதில்லை எனக் கூறியிருக்கிறார் நம்பி. இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியை, குறிப்பாக கிரையோஜெனிக் இன்ஜின் உருவாக்கும் திட்டத்தை முடக்கும் நோக்கில் வெளிநாட்டு சதிகாரர்கள் மூலம் தான் சிக்கவைக்கப்பட்டதாக நம்புகிறார் அவர். கிரையோஜெனிக் தொழில்நுட்பத்துக்காக ரஷ்யாவுடன் 1992ல் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அமெரிக்கா எதிர்ப்பு காரணமாக ரஷ்யா பின் வாங்கியபோது, இந்தியாவே சொந்தமாக கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தை உருவாக்க முயன்றது. அந்த பிரிவின் தலைவராக இருந்தவர்தான் நம்பி நாராயணன். அப்போதுதான் உளவு குற்றச்சாட்டு வெடித்து, எல்லாமே தலைகீழாகிப் போனது. நம்பி நாராயணன் மீது தவறில்லை என நிரூபிக்கப்பட்டு விட்டது. அப்படியானால் அவர் மீது பொய் வழக்கு போட்டது யார்? ஏன் போட்டார்கள்? அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? இப்படி விடையில்லா பல கேள்விகள். குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றவாளியா, இல்லையா என கண்டுபிடிப்பதோடு வழக்கு முடியக் கூடாது. உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிப்பதுதான் வழக்கின் முடிவாக இருக்க வேண்டும்.





நன்றி: Dinakaran