Tuesday, 14 May 2013

சர்வதேச ரீதியாக ஆதித்தமிழர்களின் கடல்பயண நிபுணத்துவம்

பழந்தமிழர்கள் ஆமைகளின் வழித்தடத்தைப் பின்பற்றி கடல்வழிகளைக் கண்டறிந்து உலகம் முழுவதும் கடல்வழிப் பயணம் மேற்கொண்டனர் என்று ஒருங்கிணைந்த பெருங்கடல் கலாசார ஆய்வு அறக்கட்டளை தலைவர் சிவ. பாலசுப்பிரமணி என்ற ஒரிசா பாலு தெரிவித்தார். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் மாதாந்திர கருத்தரங்கு எழும்பூர் தமிழ் வளர்ச்சித் துறை வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தொல்லியல்துறை ஆணையர் (பொறுப்பு) சீ.வசந்தி தலைமை வகித்தார். இதில் ஆமைகளின் கடல் வழியில் -கடலோடி தமிழர்களின் தொன்மை" என்ற தலைப்பில் ஒரிசா பாலு பேசியதாவது: ஆமைகள் இனப்பெருக்கத்துக்காக, கடல் நீரோட்டங்களைப் பயன்படுத்தி 150, 180 நாட்கள் பயணிக்கின்றன.
இதை அவதானித்த தமிழர்கள், ஆமைகளைப் பின்பற்றி கடல் நீரோட்டங்களைக் கண்டறிந்து மத்திய தரைக்கடல், தென் கிழக்கு ஆசியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளுக்கும் கடல் வழிப் பயணம் மேற்கொண்டனர். முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் என சோழர் காலக் கல்வெட்டுகள் கூறுகின்றன. இந்த 20 ஆயிரம் தீவுகளில் 9,000 தீவுகள் நீரில் மூழ்கி விட்டன. இவற்றை சோழர்கள் எப்படிக் கணக்கிட்டார்கள் என்பது வியப்புக்கும் ஆய்வுக்கும் உரியது. கப்பல் கட்டுமானத்துக்கு மற்ற நாட்டவர் 2 மரங்களைப் பயன்படுத்த, தமிழர்கள் 20 வகையான மரங்களைப் பயன்படுத்தியுள்ளனர். பாறைகளில் மோதினால் உடையாமல் இருக்க கப்பலின் அடிப்பகுதியில் கழட்டி விடும்படியான கட்டமைப்பைக் கொண்ட தொழில்நுட்பத்தை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே தமிழர்கள் பின்பற்றி வந்துள்ளனர்.
பிற்காலத்தில்தான் தென்னிந்தியர்களிடம் இருந்து ஐரோப்பியர்கள் கற்றுக் கொண்டனர். தெப்பம் என்ற சொல், பல்வேறு மொழிகளில் படகைக் குறிப்பதாகவே உள்ளது. கிரேக்கத்தில் பாண்டியன்-1, 2 என்ற மன்னர்கள் ஆண்டுள்ளனர். அங்கு சிற்றரசர்களாக பல்லா என்ற வம்சத்தினர் ஆண்டுள்ளனர். பல்லா இனத்தவர் கிழக்கில் இருந்து வந்த வேளாண் தொழில் சார்ந்தவர்கள் என கிரேக்க பழம் நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. தகடூரில் இரும்பு சார்ந்த நாகரிகம் இருந்துள்ளது. அப்பகுதியை ஆண்டவன் அதியமான். அவன் மகன் பெயர் எழினி. துருக்கியில் இரும்பு சார்ந்த பகுதி இன்றும் அதியமான் என அழைக்கப்படுகிறது.
இரும்பு உருக்கும் ஆலைப் பகுதி எழினி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. பிரேசிலில் உறை, வசி, ஊர் என அழைக்கப்படும் பகுதிகள் உள்ளன. ஜப்பானில் குரில் என்ற பகுதியில் மருதை என்ற ஊர் உள்ளது. சீனாவில் 5 ஊர்கள் பாண்டியன் என்ற பெயரில் அமைந்துள்ளன. பாண்டியன் என்ற சொல்லுக்கு சீனத்தில் வேர்ச்சொல் இல்லை. ஆகவே இது தமிழகம் சார்ந்த பெயர் என அறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கொரியாவின் அரசியாக பாண்டிய இளவரசி ஒருவர் இருந்துள்ளார். கி.பி. 45-இல் இந்தோனேசியாவை ஸ்ரீமாறன் என்ற தமிழ் மன்னன் ஆண்டுள்ளான். ஆஸ்திரேலியாவில், குமரி, நான்மாடல், துங்காவி என்ற பெயரில் ஊர்கள் உள்ளன. பெரு, சிலியில் நெடுங்கற்கள் நிறைந்த பகுதிகள் வால்பாறை என அழைக்கப்படுகின்றன. பழந் தமிழரின் கடல் பயணங்களை இவை உறுதிப்படுத்துகின்றன.
ஆமைகளே தமிழரின் கடலோடும் வாழ்வுக்கு பெரும் உதவிகரமாக இருந்திருக்கின்றன. பாண்டியர்கள் காளை, மீன் ஆகியவற்றோடு ஆமை இலச்சினைகளையும் பயன்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் 79 கோயில்களில் கடல் ஆமைச் சிற்பங்கள் உள்ளன. கிரேக்க, பாண்டிய நாணயங்களில் ஆமை உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. தமிழக பெண்கள் மகப்பேறுக்காக தாய் வீடு செல்வர். இந்த வழக்கம் விலங்குகளில் ஆமைக்கு மட்டும் உண்டு. இனப் பெருக்கத்துக்காக ஆமைகள் தாங்கள் பிறந்த பகுதிக்குச் செல்கின்றன. தமிழகத்தில் மட்டும் இந்த பண்பாட்டுக் கூறு உள்ளது ஆராயத்தக்கது. பிராங்ளின் ஜோசப், கொலம்பஸ் ஆகியோர் கண்டறிந்த கடல் வழித்தடங்களும், ஆமைகளின் கடல்வழித்தடமும் ஒன்றுதான். ஆமைகள் இனப்பெருக்கம் செய்யும் கடலோரப் பகுதிகளே பழங்காலங்களில் துறைமுகமாகச் செயல்பட்டுள்ளன. பர்மாவில் இருந்து தேக்கு மரங்களை வெட்டி கடலில் போட்டால் அவை தாமாகவே தனுஷ்கோடி வந்தடைந்துள்ளன. ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்த கடல் நீரோட்டத்தைத் தமிழன் பயன்படுத்தியுள்ளான். கரையோரப் பகுதி வாழ்வியல்கள் இன்னும் ஆழ்ந்த ஆய்வுக்கு உள்படுத்தப்பட வேண்டும் என்றார் பாலசுப்பிரமணி.

Monday, 4 February 2013

இயற்கை முதற்கொண்டு எல்லாத் தரப்பினராலும் ஏமாற்றப்படுபவன்தான் விவசாயி.


ஹேப்பி பொங்கல் என்று வாழ்த்து சொல்கிறார்கள்.வீடு தேடி சென்று நேரில் வாழ்த்து சொல்லி சிரித்து மகிழ்ந்த காலம் என்றோ முடிந்து விட்டது. வாழ்த்து அட்டை வாங்கி கையெழுத்து மட்டும் போட்டு ஸ்டாம்ப் ஒட்டி தபால் பெட்டியில் திணித்து விட்டு புன்னகைத்துக் கொண்ட காலகட்டமும் மலையேறி போய்விட்டது. அட, செல்போனில் பேசக்கூட நேரமும் பொறுமையும் இல்லாமல் எஸ்எம்எஸ் வழியாக வாழ்த்து அனுப்புகிறோம். அனுப்பியவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.இருபது வருடத்துக்குள் வாழ்க்கை முறை என்னமாக மாறிவிட்டது. தகவல் தொடர்பு தொழில்நுட்பம் புரட்சிகரமாக வளர்ந்திருக்கிறது. பார்ப்பதும் பேசுவதுமான புலன்வழி தொடர்புகள் அடியோடு அறுந்து போயின. தமிழ் எழுத்துக்களை குறுந்தகவல் சேவையில் உள்ளடக்க செல்போன் கம்பெனிகள் அப்படியொன்றும் ஆர்வம் காட்டாததால் அகத்தியர் காவிரியை கமண்டலத்தில் அடக்கியது மாதிரி 247 எழுத்துக்களை 26க்குள் அடக்கி புதுத்தமிழ் உருவாக்கி இருக்கிறோம். பொங்கும் மங்கலம் எங்கும் நிறையட்டும் என்பது மாதிரியான மரபு வழி வாழ்த்துக் கூற எழுத்து வளம் போதாத காரணத்தால் விஷ் யு எ ஹேப்பி பொங்கல் என்று தமிழர் திருநாள் வாழ்த்து சொல்வது பிரபலமாயிற்று. தவறுக்கு வாய்ப்பு குறைவு. அதனால் தப்பில்லை. மொழியை பார்க்காதீர்கள், பாஸ்.. மனதை பாருங்கள் என்று ஆறுதல் கூறுவதை ஏற்பது தவிர வழியில்லை.என்றாலும், உழவர் திருநாள் வாழ்த்துக்கள் என்ற வாசகம் எங்காவது பார்வையில் பட்டால் மனமும் உறுத்துகிறது.உழவன் எங்கே நன்றாக இருக்கிறான், திருநாள் கொண்டாட? மழை பொய்த்து விட்டது. நதி வறண்டு விட்டது. நிலத்தடி நீர் தாழ்ந்து விட்டது. எஞ்சியதை உறிஞ்சி மேலே கொண்டுவர நினைத்தால் மின்சாரம் கிடையாது. மாய மந்திரம் செய்து மகசூல் பார்த்தால் விலை கிடைக்காது. உழக்கு மிஞ்சாது என்ற பழமொழி மட்டும் பொய்க்காமல் இருக்கிறது. என்ன செய்வான் விவசாயி. எப்படி கொண்டாடுவான் உழவர் திருநாள்?இயற்கை முதற்கொண்டு எல்லாத் தரப்பினராலும் ஏமாற்றப்படுபவன்தான் விவசாயி. காவிரி நதியோரம் நடக்கும் சோக நிகழ்வுகளை பார்ப்பதால் மட்டும் கலங்கவில்லை நம் நெஞ்சம். வைகை, தாமிரபரணி என்று எந்த நதிக்கரையை எடுத்துக் கொண்டாலும் இதுதான் நிதர்சனம்.பேராசைக்கார மனிதன் நீரையும் நிலத்தையும் திருடி இயற்கையை சுரண்டிக் கொழுத்தான். குற்றுயிராக்கப்பட்ட இயற்கை வளங்களால் கைவிடப்பட்டு அடித்தட்டு உழவன் கண்ணீர் வடிக்கிறான். இங்கல்ல. இந்தியா முழுமையிலும் இன்று விவசாயி நிலைமை இப்படித்தான் இருக்கிறது. பெரு நகரங்களில் ஊடகங்களின் வெளிச்சத்தில் நடக்கவில்லை என்பதால் குடும்பம் குடும்பமாக தற்கொலை செய்யும் விவசாயிகளின் முகங்கள் யார் கண்களிலும் படுவதில்லை.ஆனால் நெல்லும் கோதுமையும் கம்பும் கரும்பும் பயிரிட்டு பாதுகாத்து அறுவடை செய்து அதை வயலில் கால் பதித்திராத, நெற்பயிர் எப்படி இருக்கும் என்பதை பார்த்திராத கோடானு கோடி மக்களின் பசிக்கு உணவாகப் படைக்கும் இந்திய உழவன் தன்மானம் மிக்கவன். விதைத்த பயிரெல்லாம் கருகி வயல்கள் கட்டாந்தரையாகி நஷ்டம் தலைக்கு மேல் போனாலும் கவுரவத்தை விட்டு யாரிடமும் கையேந்தி நிற்க மாட்டான். அவன் மானஸ்தன்.அதனாலேயே அவனை எல்லோரும் ஏமாற்றுகிறார்கள்.இதில் அரசாங்கத்தை அரசியல்வாதிகளை அதிகாரிகளை இனம் பிரித்துப் பார்க்க எந்த அவசியமும் கிடையாது. 300 ரூபாய் கூலியுடன் 30 ரூபாய் இனாமை எந்தக் கேள்வியும் இல்லாமல் முடிவெட்ட செலவழித்துவிட்டு சலூனில் இருந்து வெளியே வரும் நடுத்தர வர்க்கத்து அறிவுஜீவிகள், வீடு தேடி கூடை சுமந்து வரும் கீரைக்காரியிடமும் வாழைப்பழ வண்டிக்காரனிடமும் கூச்சமே இல்லாமல் பேரம் பேசி அவர்களின் வயிற்றிலடிக்கும் காட்சிகளை நாள்தோறும் பார்க்கிறோம். சாமானியர்களாக தங்களை சொல்லிக் கொள்ளும் இவர்களை விடவும் போலிகள் எவருமில்லை. சரி. இவ்வாறு அனைத்துத் தரப்பினராலும் ஏமாற்றப்படுவதில் இருந்து தப்ப வேண்டுமானால் நமது விவசாயிகள் என்னதான் செய்ய வேண்டும்?செய்யக்கூடாததை சொன்னால் போதும். விவசாயிகள் வேறு யாரையும் நம்பக்கூடாது. கர்நாடக அரசு, நதிநீர் ஆணையம், நீதிமன்ற ஆணைகள், தடையற்ற மின்சாரம், மானியம், கட்சிகள், வாக்குறுதிகள், வானிலை அறிக்கை… எதையும் யாரையும் நம்பாமல் & நம்பியிருக்காமல் & விவசாயி தன்னைத் தானே மீட்டெடுக்க வேண்டும். காலம் காலமாக கடைப்பிடித்த வழிமுறைகள் இப்போது பலனளிக்காததால் சொந்தக் காலில் நிற்க என்ன செய்யலாம் என்பதை தீர்மானிக்க வேண்டும். அது சுலபம் அல்ல. ஆனால் முடியாதது அல்ல.
ஒருவேளை, முயன்று பார்த்தும் எந்த பலனும் கிட்டவில்லை என்று தெரிய வருமானால், வேளாண்மைத் தொழிலுக்கே விடை கொடுக்கவும் துணிய வேண்டும். அப்போதுதான் மற்றவர்களுக்கு உறைக்கும்.
அதுவரை நாமெல்லாம் கொண்டாடுவது போலிப் பொங்கல்.




நன்றி: Dinakaran 

பலமிருந்தால் மற்றதெல்லாம் துச்சம்தான்.

பாகிஸ்தான் பிரதமரை கைது செய்யுமாறு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிடுகிறது. உத்தரவை நிறைவேற்ற வேண்டிய காவல் துறை  அரசின் அங்கம். அதனால் பிரதமர் பிழைத்தார். அரசு மீது ராணுவத்தின் நிழல் படர்ந்திருக்கிறது. அது விரும்பாதவரை பிரதமருக்கு காப்பு இல்லை. முன்பு இருந்த பிரதமரும் இதே சூழ்நிலையை சந்தித்தார். நீதிமன்றத்தில் ஆஜரானார். உண்மையில் நாட்டின் அதிபர் மீதான வழக்கில் அவர் பகடைக்காய் ஆனார். அதிபர் மீது நடவடிக்கை எடுக்க அரசியல் சாசனம் அனுமதிக்கவில்லை.  அதனால் பிரதமர் தொல்லைக்கு ஆளானார்.   அதற்கும் முன்பாக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தவரை அன்றைய அதிபர் பதவி நீக்கம் செய்ததால் பெரிய போராட்டம் வெடித்தது. அதன் முடிவில் த.நீ மீண்டும் பதவிக்கு வந்தார். அன்று தொடங்கிய அரசு & நீதிமன்றம் மோதல் இன்னும் முடியவில்லை.இலங்கையிலும் தொடங்கி இருக்கிறது. ஷிராணி பண்டாரநாயக தலைமை நீதிபதியாக இருந்தார். அரசுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியதால் ஆளும் கட்சிக்கு கோபம். 117 எம்.பி.க்கள் அவர் மீது புகார் கொடுத்தனர். அதன் பேரில் அவரை பதவி நீக்க தீர்மானம் நிறைவேறியது. அதை ஏற்று அதிபர் ராஜபக்ச ஷிராணியை  நீக்கியுள்ளார். நாடாளுமன்றத்தின் தெரிவுக் குழு அதற்கான அதிகாரம் படைத்தது அல்ல என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை ராஜபக்ச பொருட்படுத்தவில்லை. பல நாடுகளின் எச்சரிக்கையையும்தான். அவர் இதையெல்லாம் பொருட்டாக நினைப்பதில்லை என்பது நமக்கு தெரியும்தானே.என்றாலும் சில விஷயங்கள் நெருடுகின்றன. ஷிராணி ஒருபோதும் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்டவர் அல்ல. சட்டக் கல்லூரி பேராசிரியராக இருந்தவரை அன்றைய அதிபர் சந்திரிகா உச்ச நீதிமன்ற நீதிபதி ஆக்கினார். தலைமை நீதிபதியாக உயர்த்தியவர் ராஜபக்ச. எனவே இப்போது அவர் நியமித்துள்ள மோகன் பீரிஸ் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாகவே இருந்ததில்லை என்ற விமர்சனம் மக்கள் மத்தியில் எடுபடாது. 
பாகிஸ்தானில் அரசு பலவீனம். எனவே அது மண்டியிட வேண்டும் என நீதிமன்றம் எதிர்பார்க்கிறது. இலங்கையில் அரசு வலுவானது. எனவே நீதிமன்றம் தலைவணங்க வேண்டும் என விரும்புகிறது.
பலமிருந்தால் மற்றதெல்லாம் துச்சம்தான்.




நன்றி: Dinakaran 

காணாமல் போனவர்கள்

காணும் பொங்கலன்று சென்னையில் 105 குழந்தைகள் காணாமல் போயிருக்கின்றன. கூட்டத்தில் குழந்தைகள் காணாமல் போவது பெரிய விஷயமில்லை. மாவட்டங்களைவிடவும் தலைநகரில் காணும் பொங்கல் கூட்டம் அதிகமாக இருப்பதால் அது பெரிய எண்ணிக்கையும் இல்லை. மெரினா கடற்கரையில் குவிந்த கூட்டத்தில் 68 குழந்தைகளும், எலியட்ஸ் பீச்சில் 2, தீவுத்திடல் பொருட்காட்சியில் 35 குழந்தைகளும் பெற்றோரை விட்டு எப்படியோ பிரிந்துவிட்டன. காவல்துறையின் சிறப்பான ஏற்பாடுகளால் அந்த குழந்தைகள் ஒரு மணி நேரத்துக்குள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது பாராட்டுக்குரியது. 75 மீட்டருக்கு ஒரு கோபுரம் வீதம் அமைத்து பைனாகுலர் மூலம் கூட்டத்தை கண்காணித்துள்ளனர். இரு கோபுரங்களுக்கு இடையே ஒரு இன்ஸ்பெக்டர் + நான்கு கான்ஸ்டபிள்கள் ரோந்து சென்றுள்ளனர். ஒலிபெருக்கி மூலம் இடைவிடாத  எச்சரிக்கை. இதனால் வழி தவறிய குழந்தைகள் உடனடியாக காவலர்களின் வசம் வந்தன. எல்லாம் 4 முதல் 10 வயது குழந்தைகள். அவர்களுக்கு பிஸ்கட், சாக்லெட், தண்ணீர் கொடுத்து பயம் போக்கி விசாரித்துள்ளனர். ஐந்தாறு வயது குழந்தைகளுக்கு பெற்றோர் பெயரை சொல்ல தெரியவில்லை. தன் பெயரை மறக்கவில்லை. ஆனால் மழலை உச்சரிப்பால் குழப்பம். மைக்கில் சரியான தகவலை சொல்ல முடியவில்லை. அப்போதுதான் ஒரு காவலருக்கு அந்த யோசனை பிறந்திருக்கிறது.  அப்பா அம்மா செல்போன் நம்பர் தெரியுமா என்று கேட்டிருக்கிறார். குழந்தைகள் உற்சாகமாக தலையசைத்து  10 இலக்க போன் நம்பரை கரெக்டாக சொல்லியிருக்கின்றனர். ஒலிபெருக்கியின் உதவி இல்லாமலே பெற்றோரை சுலபமாக வரவழைத்து குழந்தையை ஒப்படைத்திருக்கின்றனர். சிலர் மட்டும் நன்றி கூறாமல் சிடுசிடுப்புடன் இழுத்துச் சென்றுள்ளனர். தவற விடுவதற்கென்றே கடற்கரைக்கு அழைத்து வந்தார்களோ என்று போலீசை சிந்திக்க வைத்தவர்கள் அவர்கள்.

பெயரை விட நம்பர் குழந்தைகள் மூளையில் ஆழமாக பதிகிறதா அல்லது மன ரீதியாக இதில் ஏதாவது உள்ளர்த்தம் இருக்கிறதா என்பதை ஆராய்ச்சிகள்தான் தெளிவுபடுத்த முடியும். ஆனால், வில்லங்கமான செய்திகளுக்கே பழகிப்போன சென்னை போலீஸ், பொதுமக்களின் பாராட்டை பெறும் வகையிலும் செயல்பட முடியும் என்பதை இந்த நிகழ்வு நிரூபிக்கிறது.




நன்றி: Dinakaran 

மத்திய அரசு நடவடிக்கை - அசட்டு துணிச்சல்

லட்டு சாப்பிட்டதும் கொஞ்சம் மிக்சர் எடுத்து வாயில் போட்டுக் கொள்ளும் வழக்கம் நமக்கு பழக்கமானது. மத்திய அரசு அதைத்தான் செய்திருக்கிறது. மானிய விலையில் 6 சிலிண்டர்தான் என்பதை 9 ஆக உயர்த்தியது. பரவாயில்லையே என்று சொல்ல மக்கள் நினைத்தபோது டீசல் விலையை 45 பைசா உயர்த்தி விட்டது. மிக்சருக்கு பதில் மிளகாய் பொடி. ஏதோ ஒரு நல்லது நடந்திருக்கிறது என்று ஒரு நாள்கூட மக்கள் மெத்தனமாக இருந்துவிட கூடாது என்பதில் மேலிடத்தில் யாரோ கவனமாக இருப்பது புரிகிறது.உறுதியான எந்த முடிவும் எடுக்காமல் காலத்தை ஓட்டுவது; எந்த எச்சரிக்கையும் தராமல் அதிரடியாக முடிவை அறிவிப்பது. இப்படி இரண்டு தொலைமுனைகளில் ஒன்றை வழிமுறையாக பின்பற்றுவது அரசுக்கு அழகல்ல. டீசல் விலை உயர்வால் 15,000 கோடி கூடுதலாக கிடைக்கும். சிலிண்டர் எண்ணிக்கை உயர்வதால் 10,000 கோடி கூடுதல் செலவாகும். மீதி?ரயில்வே, அரசு போக்குவரத்து கழகங்கள், ராணுவம் போன்றவை லிட்டருக்கு 10 ரூபாய் அதிகம் கொடுத்து டீசல் வாங்குவதால் அரசுக்கு ஏற்படும் சுமையில் அந்த மீதி கரைந்துவிடும். ரயில்வேக்கு மட்டும் செலவு 2,700 கோடி அதிகரிக்கும். நிதியமைச்சர் தெளிவாக கூறிவிட்டார்: இந்த உயர்வு மூலம் கிடைக்கும் கூடுதல் வருவாய் எனது பட்ஜெட்டுக்கு பயன்படப்போவதில்லை. பிறகேன் இந்த வீண் வேலை. மானியங்களால் ஆயில் கம்பெனிகளுக்கு ஒன்றரை லட்சம் கோடிக்கு மேல் இழப்பு. அதை குறைக்க முதல்கட்டமாக பெட்ரோல் விலையை சந்தை விலைக்கு சமமாக்கியது அரசு. சர்வதேச விலைக்கு ஏற்ப அது ஏறி இறங்குகிறது. அக்டோபரில் 56 பைசா குறைந்தது. நவம்பரில் 95. நேற்று 25 பைசா. 

இதற்கு மக்கள் பழகிவிட்டனர். டீசலையும் அப்படி மாதம் 40,45 பைசா வீதம் ஏற்ற கம்பெனிகளுக்கு அனுமதியாம். 9 ரூபாய் 60 பைசாவை சரிக்கட்ட 19 மாதம் இப்படி உயர்த்த வேண்டும். அதோடு லாரி, பஸ், ரயில் கட்டணமும் சிமென்ட், காய்கறி விலைகளும் அதிகரிக்கும்போது மக்கள் என்னாவது? அடுத்த 16 மாதத்துக்குள் 10 சட்டமன்றங்களுக்கும் நாடாளுமன்றத்துக்கும் தேர்தல் நடக்க இருக்கும் சூழலில் இந்த நடவடிக்கை அசட்டு துணிச்சலாக தோன்றுகிறது.




நன்றி: Dinakaran 

இலவசமாக கொடுத்த விஞ்ஞானிகளை விலைக்கு வாங்க அரசு முடிவு

உழைப்புக்கு ஏற்ற ஊதியம் அவசியம். இது அனைத்து வேலைகளுக்கும் பொருந்தும். நேரம், காலம் பார்க்காமல், விடுமுறை கூட எடுக்காமல் வேலை பார்ப்பவர்களையும் இருக்கும் அத்தனை லீவையும் ஒன்று கூட விடாமல் எடுப்பவர்களையும் ஒரே மாதிரி நினைப்பது சரியாக இருக்காது. விஞ்ஞானிகள் முதல் ரகம். அவர்கள் ஓரளவுக்கு கவுரவமான வாழ்க்கை வாழ பணம் அவசியம். அது கிடைப்பதில்லை. அந்த நிலை இனி மாறப்போகிறது.விஞ்ஞானிகளும் மனிதர்கள்தான். அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது. அவர்கள் பணிக்கேற்ற சம்பளம் கிடைப்பதில்லை. ஆராய்ச்சிக்கு தேவையான வசதிகளும் இருப்பதில்லை. அதனால்தான் டாலர்களில் கொட்டிக் கொடுக்கும் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கு பறக்கிறார்கள். அங்கு அவர்கள் ஆராய்ச்சி செய்து  கண்டுபிடிக்கும் தொழில்நுட்பங்களை, தயாரிக்கும் பொருட்களை பல மடங்கு விலை கொடுத்து இந்தியா வாங்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. இப்படி வெளிநாடு பறந்த சிறந்த விஞ்ஞானிகளை அதிக சம்பளம் கொடுத்து மீண்டும் இந்தியாவுக்கே வரவழைக்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. தாயகம் திரும்ப சம்மதிக்கும் விஞ்ஞானிகளுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் டாலர் (ரூ.55 லட்சம்) கவுரவ ஊதியமும், குடியிருக்க அனைத்து வசதிகளுடன் கூடிய வீடும் கிடைக்கும். இங்கு வந¢து போக, தங்கியிருக்க ஆகும் செலவையும் அரசே தரும். ஓராண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை ஆராய்ச்சியில் ஈடுபடலாம். புகழ்பெற்ற கல்லூரிகளில் பாடம் எடுக்கலாம். தேர்வு செய்யப்படும் விஞ்ஞானிகள் உடனே வர முடியாவிட்டாலும் பரவாயில்லை. 3 ஆண்டுகள் வரை கால அவகாசம் உண்டு. அதற்குள் வந்து இந்தியாவில் பணியாற்றலாம். இதன் மூலம் இந்திய ஆராய்ச்சிப் பணிகள் மேம்படும். அதோடு இளைய விஞ்ஞானிகளுக்கும் ஒரு ஊக்கமாக இது இருக்கும் என திட்டக் குழு துணைத் தலைவர் கூறியிருக்கிறார்.இதே போன்ற ஒரு திட்டத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு சீனா அமல்படுத்தியது. கைநிறைய சம்பளம், அதோடு சொந்த நாட்டுக்கு உழைப்பதில் கிடைக்கும் திருப்தி, சந்தோஷம் காரணமாக பல சீன விஞ்ஞானிகள் தாயகம் திரும்பினர். இது சீன அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அதுதான் இந்தியாவிலும் நடக்கப் போகிறது.





நன்றி: Dinakaran 

மம்தாவின் அமுதமொழி

சுஷில் குமார் ஷிண்டே பேச்சால் எழுந்த பரபரப்பில் மம்தாவின் அமுதமொழி அமுங்கி விட்டது. இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருக்கிறோம் என்பதை மறந்து விட்டாரோ என்று ஷிண்டேயை விமர்சிக்கிறார்கள். மேற்கு வங்காளத்தின் முதலமைச்சராக இருப்பது நினைவில்லையோ என்று மம்தாவை கேட்க தோன்றுகிறது. '10 தடவை பிரதமரை கேட்டு விட்டேன். இதற்கு மேல் என்ன செய்வது? அடிக்கவா முடியும்?' என்று பேசுபவரை பார்த்தால் வேறெப்படி தோன்றும். மத்திய அரசிடம் மேற்கு வங்க அரசு வாங்கிய கடன்கள் மீதான வட்டியை தள்ளுபடி செய்யுங்கள்; கடனை திருப்பி செலுத்துவதிலும் மூன்று வருடம் இடைவெளி தாருங்கள் என்று மம்தா கேட்டு வருகிறார். இந்த கோரிக்கையை பிரதமரிடம் பல முறை வலியுறுத்தியும் அவர் கண்டு கொள்ளவில்லையாம். அதைத்தான் பொதுக்கூட்டத்தில் மேற்கண்டவாறு வெளிப்படுத்தியுள்ளார். பிரதமரை அடிப்பது என்று ஒரு முதல்வர் பேசுவதா என்று உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும்.  வங்காளிகள் அதிர்ச்சி அடைய மாட்டார்கள். அவர்களுக்கு தெரியும். 'வருமான வரி சுங்க வரி அது இது என்று என் மாநில மக்களின் பணம் 40,000 கோடியை மத்திய அரசு பிடுங்கிக் கொள்கிறது. வெறும் 18,000 கோடிதான் நமக்கு தருகிறது. இது போக வாங்கிய கடனுக்கு வருடம் 26,000 கோடி வட்டி + தவணை கேட்கிறது. என்ன அநியாயம் பாருங்கள்' என்று மக்களிடம் முறையிட்டார். பெரிய சலசலப்பு ஏதுமில்லை. அடுத்த அம்பு எய்தார். 'இதுவரை இருந்த மார்க்சிஸ்ட் அரசு தான் கடன் வாங்கியது. அந்த கட்சிதான் திருப்பி செலுத்த வேண்டும். என்னிடம் கேட்பது என்ன நியாயம்?' என்று குமுறினார். அரசு வாங்கிய கடனை கட்சி எப்படி செலுத்த முடியும் என்றால் அதற்கும் பதில் வைத்திருக்கிறார். 

'அந்த கட்சிக்கு நிறைய கட்டிடங்கள், சொத்துகள் இருக்கின்றன. அவற்றை ஏலத்தில் விற்று எடுத்துக் கொள்ளுங்கள்' என்று மத்திய அரசுக்கு யோசனை கூறியுள்ளார். 2002ம் ஆண்டிலேயே  அவர் கேட்டார். 'ஏழை தொழிலாளர்களின் கட்சி என்று சொல்லிக் கொள்பவர்கள் ஊருக்கு ஊர் இவ்வளவு சொத்து வாங்கி குவிப்பது ஏன்?' என்று கேள்வி எழுப்பி,  அதை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்த அளவுக்கு புரட்சிகரமான பொருளாதார சிந்தனைக்கு காது கொடுத்தால் பிரதமருக்கு பாவம் எங்கிருந்து பேச்சு வரும்?




நன்றி: Dinakaran 

பொற்கால உதயம்

வெளிநாடுகளை சுற்றிப் பார்க்கும்போது பல விஷயங்கள் பிரமிக்க வைக்கும்.  'இந்த அளவுக்கு நமது நாடு எப்போது முன்னேறும்?' என்ற ஏக்கம் உண்டாகும்.  நாடு திரும்பியதும் விமான நிலையத்திலேயே அந்த சிந்தனைகளை அடக்கம் செய்துவிட்டு வழக்கமான வாழ்க்கையில் ஒன்றிவிடுவார்கள் பலர். சிலர் சில நாட்கள் அந்த சிந்தனைகளை சுற்றியிருப்போருடன் அலசிவிட்டு, அதெல்லாம் இங்கே சாத்தியப்படாது என்ற முடிவோடு மறந்துவிடுவார்கள். என்ன தடைகள் இருந்தாலும் அதை தாண்டி மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று களத்தில் இறங்குபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்களில் ஒருவர். நதிகளை இணைக்க வேண்டும் என்பது அவரது பிரதான கனவு. அதை காவிரி, முல்லை பெரியாறு, கிருஷ்ணா போன்ற விவகாரங்களுக்கு முற்றுப்புள்ளியாக அவர் பார்க்கவில்லை. இந்தியாவின் முன்னேற்றத்துக்கு தடைக்கற்களாக விளங்கும் நிலமும் நீரும் சார்ந்த பல்வேறு சமூக, பொருளாதார, அரசியல் பிரச்னைகளுக்கு ஒட்டுமொத்த தீர்வாக நதிகள் இணைப்பு அமைவதற்கான சாத்தியக்கூறை உணர்ந்திருந்தார். அதனால்தான் ஒரே கோஷத்தை முன்வைத்து இரண்டாயிரம் கிலோமீட்டர் பாதயாத்திரையை மேற்கொண்டார். மக்கள் சக்தியை ஓர் இயக்கமாக உருமாற்றும் அவரது முயற்சி வெற்றி பெறவில்லை. எனினும் படித்தவர்கள், பணம் படைத்தவர்கள் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்த தங்களால் இயன்றதை செய்தாலே நாடு முன்னேறிவிடும் என்று அவர் விதைத்த சிந்தனை பல்லாயிரம் உள்ளங்களில் வேர்விட்டு வளர்ந்திருக்கிறது. குழந்தைகளுக்கு ஆங்கிலம் சொல்லித் தருவது, குடிசைக்கு வெளியே வர இயலாத நோயாளிகளை சந்திக்க டாக்டர்களை அழைத்துச் செல்வது, பெண்களுக்கு நவீன தொழில்கள் கற்றுக் கொடுப்பது என்று தமிழகம் முழுவதும் தனியாகவும் குழுக்களாகவும் ஏராளமானவர்கள் பொது சேவையில் ஈடுபட்டிருப்பது அதற்கு சாட்சி. எக்ஸ்னோரா போன்ற அமைப்புகளின்  சேவைக்கு சற்றும் குறைந்ததல்ல இவர்களின் பணி. வாரம் ஒருநாள் ஒருமணி நேரம் ஒதுக்கி எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் அடித்தட்டு மக்களுக்கு ஏதோ ஒரு வகையில் உதவுவோம் என்று எல்லோரும் முன்வரும்போது இந்தியாவின் பொற்காலம் உதயமாகும்.





நன்றி: Dinakaran 

கட்கரி போய் ராஜ்நாத்

நிதின் கட்கரி இரண்டாவது முறையாக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக அறிவிக்கப்பட இருந்ததை வெற்றிகரமாக தடுத்து விட்டார்கள். யார் தடுத்தார்கள் என்பதில் கருத்தொற்றுமை இல்லை. காங்கிரஸ்தான் வருமான வரி துறையை ஏவி கட்கரிக்கு சொந்தமான நிறுவனங்களில் சோதனையிட வைத்து அவரது வாய்ப்பை தடுத்து விட்டதாக பாரதிய ஜனதா மேலிடம் கூறுகிறது. கட்சியில் அவருக்கு எதிரான கோஷ்டி சாமர்த்தியமாக காய் நகர்த்தி தடுத்ததாக காங்கிரஸ் சொல்கிறது. இரண்டுமே உண்மை என்றால் தவறில்லை. கட்கரி பெரும் தொழிலதிபர் என்பது ரகசியமல்ல. முதல் முறை தலைமை பதவிக்கு வர அது அவருக்கு பயன்பட்டது. ஆனால் அவரது நிறுவனங்கள் முறைகேடாக செயல்பட்டு லாபம் ஈட்டியதாக புகார்கள் எழுந்தபோது அவர் கொடுத்த விளக்கம் போதுமானதாக இல்லை. இதனால் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பியது. ஊழலின் பெயரால் காங்கிரசை கடுமையாக விமர்சிக்கும் பிரதான எதிர்க்கட்சியின் தலைவரே ஊழல் பேர்வழி என்று தெரிந்தால் யார் மதிப்பார்கள் என்று ஜெத்மலானி தொடங்கி பல தலைவர்கள் பகிரங்கமாக கண்டித்தனர். கட்சி பிளவு படும் சூழ்நிலையில் கட்கரி  பதவி விலக முன்வந்தார். ஆனால், மீண்டும் அவரையே தலைவராக்கும் திட்டத்தின் ஒரு  அத்தியாயம்தான் அந்த விலகல் என்று தெரிய வந்ததும் அதிருப்தீ பரவியது. இனிமேல் ஊ என்ற எழுத்தில் தொடங்கும் சொல்லையே நாம் உச்சரிக்க முடியாது என மூத்த தலைவர்கள் கலங்கினர். ஆனால் ஆர்.எஸ்.எஸ் பின்புலம் கொண்ட  கட்கரிக்கு எதிராக கொடிதூக்க அவர்களுக்கு துணிவில்லை. மகேஷ் ஜெத்மலானி போன்ற மூன்றாம் தலைமுறையினர் கட்கரியை எதிர்த்து போட்டியிட முனைந்தனர். இந்த நேரத்தில்தான் வருமான வரி அதிகாரிகள் நுழைகின்றனர். கிளைமாக்சில் திருப்பம். கட்கரி ஒதுக்கப்பட்டு ராஜ்நாத் சிங் தலைவராகிறார். 'உள்துறை அமைச்சர் ஷிண்டேயை நீக்காவிட்டால் நாடாளுமன்றம் நடக்க விடமாட்டோம்' என்று அவர் முழங்குகிறார். 'நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் இந்த (வருமான வரி) அதிகாரிகளை சும்மா விடமாட்டோம்' என்று கட்கரி மிரட்டுகிறார். அரசியல் மாற்றத்துக்காக ஏங்கும் பொதுமக்களின் பொறுமை வேகமாக கரைந்து கொண்டிருப்பதை பாரதிய ஜனதாவும் உணர மறுப்பது உண்மையில் பரிதாபம்.





நன்றி: Dinakaran 

இல்லாதவனிடம் எடுத்து இருப்பவனிடம் கொடுப்பது சுரண்டல்

ஒரு பொருளுக்கு ஆளுக்கு ஒரு விலை வைக்க முடியாது. எல்லோருக்கும¢ ஒரே விலைதான். சில்லரை விற்பனையில் விலை அதிகமாகவும் மொத்த விற்பனைக்கு குறைவாகவும் இருக்கும். இதுதான் நடைமுறை. ஆனால் எந்த பொருளாதார சித்தாந்தத்தின்படியும் ஏற்றுக் கொள்ள முடியாத வகையில், அதிகமாக வாங்கும் ரயில்வே, அரசு போக்குவரத்து கழகங்கள் டீசலுக்கு அதிக விலை தர வேண்டும் என அறிவித்திருக்கிறது மத்திய அரசு. சென்னையில் பெட்ரோல் விலை ரூ. 70.26. டீசல் ரூ. 50.68. ஏறக்குறைய ரூ. 20 குறைவு. இதனால் ரூ. 35 லட்சம் முதல் ரூ. 50 லட்சம் வரை விலை கொடுத்து கார் வாங்கும் பணக்காரர்கள் டீசல் மாடலையே தேர்வு செய்கிறார்கள். இத்தனைக்கும் டீசல் மாடலுக்கு ரூ. 7 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை விலை அதிகம். இருந்தாலும் டீசல் விலை குறைவு என்பதால் இந்த சிக்கனம். இவர்கள் பெட்ரோல் பங்க்கில் ஒரு லிட்டர் டீசல் ரூ. 50.68 கொடுத்தே வாங்கலாம். அரசு பஸ் கட்டணத்தை விட ஏறக்குறைய 2 மடங்கு வசூலிக்கும் ஆம்னி பஸ்களுக்கும் இதே விலைதான். ஆனால் ஏழைகள், நடுத்தர மக்கள் அதிகம் பயணம் செய்யும் ரயில், அரசு பஸ்களுக்கு டீசல் விலை ரூ. 61. லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு இயங்கும் நிறுவனங்களுக்கு இந்த விலை உயர்வு பெரிய விஷயமில்லை. ஆனால் சேவை நோக்கில் செயல்படும் ரயில்வே, அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு இந்த விலை உயர்வு பேரிடி.சென்னையில் மட்டும் 3650 எம்டிசி பஸ்கள் ஓடுகின்றன.

 தமிழகம் முழுவதும் 22,000. இவை அனைத்தும் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 20 லட்சம் லிட்டர் டீசலை பயன்படுத்துகின்றன. ஒரு லிட்டருக்கு ரூ. 11 அதிகம் கொடுத்தால், தினமும் ரூ.2.2 கோடிக்கும் மேல் கூடுதல் செலவாகும். ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் அதிகம் செலவிட வேண்டியிருக்கும். இந்த பணத்தை ஏழைகளின் பையில் இருந்துதான் எடுக்க வேண்டியிருக்கும். ஏற்கனவே ரயில், பஸ் கட்டண உயர்வால் தத்தளித்துக் கொண்டிருக்கும் பொதுஜனத்தால் இதை தாங்க முடியாது.இருப்பவனிடம் எடுத்து இல்லாதவனுக்கு கொடுப்பதுதான் நியாயம். இல்லாதவனிடம் எடுத்து இருப்பவனிடம் கொடுப்பது சுரண்டல். சுரண்டலை  தடுக்க வேண்டிய அரசே இந்த வேலையை செய்யக் கூடாது.




நன்றி: Dinakaran 

பழையன கழித்தல்

தமிழகத்தில் சாலை விபத்துகளில் மட்டும் கடந்த ஆண்டில் 15 ஆயிரத்து 900 பேர் பலியாகி உள்ளனர். சராசரியாக தினமும் 43 பேர். 91 சதவீத விபத்துகளுக்கு காரணம் டிரைவரின் கவனக் குறைவு மற்றும் தவறுதான் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. மோசமான சாலைகள், பழைய வாகனங்கள், மோசமான வானிலை, அதிக வேகம் போன்றவையும் விபத்துகளுக்கு காரணங்கள். முக்கிய காரணம் டிரைவர்கள்தான். ஒன்வேயில் ஓட்டுவது, ரயில் வருவதற்குள் போய் விடலாம் என ஆளில்லாத லெவல் கிராஸிங்கில் செல்ல முயல்வது, போட்டி போட்டுக் கொண்டு முந்தி செல்வது போன்றவற்றால் நடக்கும் விபத்துகள் அதிகம். முறையான பயிற்சி பெறாத டிரைவர்களும் பயிற்சி பெற்றிருந்தும் மது அருந்திவிட்டு ஓட்டுவதற்கு தகுதி இல்லாத நிலையில் ஓட்டுபவர்களும் அதிக எண்ணிக்கையில் விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். அதிக வேகம் ஆளைக் கொல்லும் எனத் தெரிந்திருந்தும் சாலைகளில் பறக்கிறார்கள். அதனால்தான் நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகம் விபத்து நடக்கிறது. 22 ஆயிரத்து 168 பேர் உயிரை விட்டிருக்கிறார்கள். மாநில நெடுஞ்சாலைகளில் 20 ஆயிரத்து 920 பேர்.வாகனங்களை பொறுத்து 10 அல்லது 15 ஆண்டுகள் பழையதாகி விட்டால் அவற்றை கழித்து விட வேண்டும். ஆனால் ரிப்பேர் பார்த்து ரிப்பேர் பார்த்து அதை ஓட்டிக் கொண்டே இருப்பதால் ஒருநாள் விபத்தில் சிக்கவைத்து விடுகிறது. சமீபத்தில் திருச்சியில் பழுதான கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அடுத்தடுத்து மூன்று பைக்குகளில் மோதியதில் 4 பேர் பரிதாபமாக இறந்து போனார்கள். உடலுக்கு நல்லது இல்லை எனத் தெரிந்தும் பால், குழம்பு, எண்ணெய் என அனைத்து உணவு பொருட்களையும் சூடு பண்ணி, சூடு பண்ணி பயன்படுத்துபவர்கள் நாம். பல லட்சம் மதிப்புள்ள வாகனங்களை அவ்வளவு சீக்கிரம் கழித்து விடுவோமா என்ன?தூங்கும் நேரம், வேலை பார்க்கும் நேரம் தவிர வாழ்க்கையின் 30 சதவீதத்தை சாலைகளில்தான் கழிக்கிறோம். ஓட்டத் தெரியாத, சாலை விதிகளை மதிக்காத டிரைவர்களால் உயிரை பணயம் வைத்து பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. இவர்கள் உருவாக காரணம் பொறுப்பில்லாத போக்குவரத்து அதிகாரிகள். ஒவ்வொரு குடும்பத்திலும் இழப்பு ஏற்படும் வரை காத்திருக்கிறார்களா அவர்கள்?





நன்றி: Dinakaran 

மனமிருந்தால் போதும்

சார்டர்ட் அக்கவுன்டன்சி படிப்பு முடித்து சி.ஏ பட்டம் பெறுவது மிகவும் கடினமானது. லட்சம் பேர் எழுதினாலும் சில ஆயிரம் பேர்தான் தேர்ச்சி பெறுகிறார்கள். அவ்வளவு சிக்கலான படிப்பை முடித்து இந்தியாவிலேயே முதலாவது இடத்தில்  தேர்ச்சி பெற்றுள்ள பிரேமாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும். பிரேமாவின் தந்தை ஒரு ஆட்டோ டிரைவர். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர். பிழைப்புக்காக மும்பை சென்றார். அங்கு மாநகராட்சி பள்ளியில் படித்தார் பிரேமா. நன்றாக படித்து நிறைய மதிப்பெண்கள் எடுத்ததால் கல்லூரியில் பி.காம் படிக்க உதவித்தொகை கிடைத்தது. அப்போதுதான் சி.ஏ படிக்க ஆசை எழுந்தது. 'அதெல்லாம் உன்னால் முடியாது. ரொம்ப கஷ்டம். பாசாவது அபூர்வம்' என்று பல நல்லவர்கள் சொன்ன அறிவுரையை நல்லவேளை பிரேமா கேட்கவில்லை. 'வாழ்க்கையே ஒரு போராட்டம். அதில் தைரியமாக எதிர்நீச்சல் போட்டு இந்த நிலைக்கு வந்திருக்கிறோம். சி.ஏ படிப்பையும் சவாலாக எடுத்துக் கொண்டு ஒரு கை பார்ப்போமே' என்று தோன்றியிருக்கிறது அந்த இளம்பெண் மனதில். அந்த தைரியமும் தன்னம்பிக்கையும் அவரை இன்று உச்சியில் உட்கார வைத்திருக்கிறது. கடினமாக உழைத்தார் என்பதை சொல்ல வேண்டியதில்லை. எல்லாவற்றிலும் மோசமான போட்டி வந்துவிட்ட இன்றைய சூழ்நிலையில் கடினமாக உழைக்காத எவராலும் இருக்கும் இடத்தைக்கூட தக்கவைத்துக் கொள்ள முடியாது. சென்னையில் பள்ளி மாணவிகளை சந்தித்து உரையாடிய பிரேமா, 'நான் அடைய விரும்பும் இலக்கு எது என்பதை முதலில் தீர்மானித்தேன். அப்புறம் அதை அடைவதற்கான வழியை முடிவு செய்தேன். பின்னர் மனம் சிதறாமல் அதில் பயணம் செய்தேன்' என்று தனது வெற்றியின் ரகசியத்தை  பகிர்ந்து கொண்டிருக்கிறார்.பள்ளியிறுதி பருவத்தை எட்டும்  மாணவ மாணவிகளுக்கு இதைவிட சிறந்த மந்திரத்தை யாராலும் போதிக்க முடியாது. பிரேமாவின் தம்பியும் சி.ஏ தேர்வில் பாசாகி இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. வீட்டிலும் பள்ளியிலும் அனைத்து வசதிகளும் இணக்கமான சூழலும் இருந்தால்தான் படிப்பில் சாதிக்க முடியும் என்ற கருத்தையும் இவர்கள் தவிடுபொடி ஆக்கியுள்ளனர். மனம் இருந்தால் மற்றதெல்லாம் தானாக கைகூடும் என்று ஆட்டோ டிரைவரின் மகளும் மகனும் அற்புதமாக நிரூபித்துள்ளனர்.





நன்றி: Dinakaran 

கற்றல் குறைபாடு யாருடையது?

ஐந்தில் ஒரு மாணவனுக்கு டிஸ்லெக்சியா என்று சொல்லப்படும் கற்றல் குறைபாடு இருப்பதாக அரசுக்கு தெரிய வந்துள்ளது. இது 20 சதவீதம். தமிழக பள்ளிகளில் ஏறத்தாழ இரண்டு கோடி மாணவ மாணவிகள் படிக்கிறார்கள். அப்படியானால் 40 லட்சம் குழந்தைகளுக்கு டிஸ்லெக்சியா இருப்பதாக அர்த்தம். ஆயினும் யாரும் பீதி அடைய தேவையில்லை. ஏனென்றால் டிஸ்லெக்சியா என்பது நோயல்ல. குறைபாடு என்பதும் சரியான விளக்கம் ஆகாது. வித்தியாசமான திறமை கொண்டவர்கள் என்று  கூறுவது ஓரளவு பொருத்தமாக தோன்றுகிறது. தாரே ஜமீன் பர் என்ற அருமையான திரைப்படத்தில் டிஸ்லெக்சியா கொண்ட சிறுவனை ஆமிர் கான் அப்படித்தான் அழகாக சித்தரித்து இருந்தார். வார்த்தைகளில் எழுத்துக்களை இடம் மாற்றி பயன்படுத்துவார்கள். ராதமாஸ் என்று எழுதுவார்கள். எண்களையும் அப்படி. இன்றைய தேதி 30.012.120 என்று. பிழையாக எழுதியதை அவர்களால் சரியாக வாசிக்க முடியும். இவர்களின் மூளை 30 சதவீதம் கூடுதலாகவும் 50 சதவீதம் மேலதிகமாகவும் சராசரி மனிதர்களால் ஊகிக்க முடியாத நாலாவது பரிமாணம் அவர்களுக்கு புலப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். முட்டாள் என முத்திரை குத்தி பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட டிஸ்லெக்சியா மாணவர்கள் பின்னாளில் மிகப்பெரிய விஞ்ஞானியாக, விளையாட்டு வீரனாக, நிர்வாகியாக, படைப்பாளியாக, நட்சத்திரமாக மகாரூபம் எடுத்துள்ளனர். அநேகமாக பெற்றோரும் ஆசிரியர்களும் இந்த செல்வங்களை புரிந்து கொள்வதில்லை. மக்கு என்று கேலி செய்து, கீழ்ப்படியவில்லை என தண்டித்து அவர்கள் மனதிலுள்ள தன்னம்பிக்கையை வழித்தெறிவது வழக்கம். அந்த கொடுமைக்கு முடிவு கட்ட அரசு இப்போதாவது முன்வந்திருப்பதை பாராட்ட வேண்டும். டிஸ்லெக்சியா என்றால் என்ன, யாருக்கு அது இருக்கிறது என்பதை எவ்வாறு கண்டறிவது, அவர்களுக்கு எந்த முறையில் கற்பிப்பது என்று ஆசிரியர்களுக்கு  பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆசிரியர்கள் அதை பெற்றோருக்கு சொல்லிக் கொடுத்து புரிய வைக்கலாம். 

புரிதல் என்பது மனிதனுக்கு மனிதன் மாறுபடக்கூடியது. அதை புரிந்து கொள்ள மறுப்பவர்களே கற்றலில் குறைபாடுள்ள மனிதர்கள்.




நன்றி: Dinakaran 

பிரதமராக வரக்கூடிய தகுதி யாருக்கு இருக்கிறது ?

அடுத்த பிரதமராக வரக்கூடிய தகுதி யாருக்கு இருக்கிறது என்ற விவாதம் சூடு பிடிக்கிறது. இவருக்கு என்று தெளிவான முடிவு வருவது சந்தேகம். இவருக்கு இல்லை என்று கூறுவதில்  தெளிவாக இருக்கிறார்கள். மன்மோகன் இன்னொரு முறை நாற்காலியில் அமரப் போவதில்லை என்பதிலும் ஒருமித்த கருத்து தெரிகிறது. மொத்த இடங்களில் பாதிக்கு மேல் வெற்றி பெற்ற கட்சியின் தலைவரை ஜனாதிபதி அழைத்து ஆட்சி அமைக்க சொல்லும் நடைமுறை ராஜிவ் காலத்தோடு முடிந்து விட்டது. இது கூட்டணி யுகம். காங்கிரஸ், பாரதிய ஜனதா தலைமையில் இரண்டு  கூட்டணிகள் இருக்கின்றன. மூன்றாவது அணி என்று அவ்வப்போது பேச்சு எழுந்து மறையும். இரு அணிகளிலும் சேராத கட்சி எத்தனை இடங்களில் ஜெயித்திருந்தாலும் இதர கட்சிகள் பட்டியலில்தான் இடம் பெறும். ஆனால், இரு அணிகளுமே பெரும்பான்மை பெறாத நிலையில் இதர கட்சிகளின் செல்வாக்கு  எகிறும். எதிர்பாராத திருப்பமாக இந்த கட்சிகளில் ஒன்றின் தலைவருக்கு பிரதமராகும் அதிர்ஷ்டம் அடிக்கலாம். காங்கிரசை பொருத்தவரை ராகுல்தான் பிரதமர் வேட்பாளர். பாரதிய ஜனதாவில் பல பேருக்கு ஆசை. வெவ்வேறு தலைவர்களின் விருப்பமாக வெளிப்படுகிறது. அத்வானி ஒதுங்கி விட்டதால் மோடி பெயர் முன்னணியில். ஆனால் சுஷ்மா மேல் என்கிறது சிவசேனா. நிதிஷ் குமாருக்கு என்ன குறைச்சல் என்று ஐக்கிய ஜனதா தளம் கேட்கிறது. வெங்கய்யா வேண்டாமென்று சொல்லிவிட்டார்.எல்லா தகுதிகளும் கொண்டவர் சரத் பவார் மட்டுமே என்கிறது தேசியவாத காங்கிரஸ். பிரதமர் பதவியை வேண்டாம் என தள்ள மாட்டேன் என்று மாயாவதி பணிவுடன் கூறிவிட்டார். எல்லாருமாக என்னை அதில் அமரவைத்தால் மறுக்கவா முடியும் என்று முலாயம் சிங் சலித்துக் கொள்கிறார். 

பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டை அமைதிப் பூங்காவாக மாற்ற ஜெயலலிதாவை விட்டால் ஆளில்லை என்று அதிமுகவினர் நம்புகின்றனர். மம்தா அவசரப்படவில்லை என்று திருணாமுல் வட்டாரங்கள் கூறுகின்றன. எடியூரப்பா இன்னும் ஷெட்டரை விட்டு வைத்திருப்பதற்கு காரணமே டெல்லி வாய்ப்புதான் என்கிறார்கள். கட்சிகளுக்கு இடையே கொள்கைகளில் பெரிய வித்தியாசம் இல்லை என்றான பிறகு தலைவர்களின் தகுதிகளாவது விவாதத்துக்கு வருவது நல்லதுதானே.




நன்றி: Dinakaran 

லோக்பாலுக்கு சோதனை

பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வழி வகுக்கும் மசோதாவுக்கு நேர்ந்த கதி லோக் பால் மசோதாவுக்கும் ஏற்படும் வாய்ப்பு அதிகரித்து வருகிறது. லஞ்ச ஊழலுக்கு முடிவு கட்ட லோக் பால் அமைப்பை நிறுவ வேண்டும் என்று போர்க்கொடி தூக்கி போராடியவர்களே அதற்கான மசோதாவை கொன்று விடுவார்கள் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. தேசிய அளவில் லோக் பால், மாநிலங்களில் லோக் அயுக்தா அமைப்புகளை ஏற்படுத்த வகை செய்யும் மசோதா 2011 டிசம்பர் 27ல் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மேலவையும் அப்படியே நிறைவேற்றி இருந்தால் இந்நேரம் அது சட்டமாகி ஒரு சிலர் விசாரணையையும் தண்டனையையும் எதிர்கொண்டிருக்கலாம்.ஆனால் அந்த மசோதா மிகவும் பலவீனமான லோக் பால் அமைப்பையே உருவாக்கும் என எதிர்க்கட்சிகள் குறை கூறின. எனவே மசோதாவில் நிறைய திருத்தங்கள் , மொத்தம் 187 , கொண்டுவர முனைந்தன. மேலவையில் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இல்லை. எனவே 12 மணி நேரம் விவாதம் நடந்தபின் நள்ளிரவு ஆகிவிட்டதை காரணம் காட்டி மசோதா மீது வாக்கெடுப்பு நடக்காமலே சபை ஒத்திவைக்கப்பட்டது. 2012 மே 21ல் அதே சபையின் தெரிவுக் குழுவுக்கு மசோதாவை அனுப்பும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த குழு அளித்த 16 பரிந்துரைகளில் 14 அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அதற்கேற்ப மசோதா திருத்தப்பட்டு மேலவைக்கு வருகிறது. அங்கு ஒப்புதல் கிடைத்தால் மறுபடியும் மக்களவை ஒப்புதல் பெற வேண்டும். அப்புறம் ஜனாதிபதி கையெழுத்துதான். மத்திய புலனாய்வு நிறுவனமான சி.பி.ஐ.யின் இயக்குனரை பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், தலைமை நீதிபதி ஆகியோர் கொண்ட குழு தேர்வு செய்யும் என்பது அரசு ஏற்றுக் கொண்டுள்ள முக்கிய பரிந்துரைகளில் ஒன்று. 'இதெல்லாம் போதாது. 

சி.பி.ஐ.க்கும் அரசுக்கும் சம்பந்தமே இருக்கக்கூடாது. லோக் பாலுக்குதான் எல்லா அதிகாரமும் தரவேண்டும்' என்று அன்னா ஹசாரே அணி சொல்கிறது. மேதைகள் இணைந்து உருவாக்கிய அரசியல் சாசனமே நூறு முறை திருத்தப்பட்டுள்ள நிலையில், கிரண் பேடி  சொல்வதுபோல் இந்த மசோதாவை ஒரு நல்ல ஆரம்பமாக எடுத்துக் கொண்டு நிறைவேற்றுவதுதான் அர்த்தமுள்ள நடவடிக்கையாக இருக்கும்.




நன்றி: Dinakaran 

Saturday, 12 January 2013

ரிஸானா

30-01-2007

அல் த்வாத்மி சிறைச்சாலை,

அல் தவாத்மி, சவுதி அரேபியா.


எனது உண்மையான வயது 19. நான் பிறந்த தேதி 02-02-1988. எனது வயது ஏஜெண்ட் அஜிர்தீன் என்பவரால் 02-02-1982 என மாற்றப்பட்டு எனக்காக கடவுச்சீட்டு வழங்கப்பட்டது. 01-04-2005-ல் நான் சவுதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்காக வந்தேன். சுமார் ஒன்றரை மாதங்கள் ஒரு செல்வந்தரின் வீட்டில் வீட்டு வேலை செய்தேன். இந்த வீட்டில் சமைத்தல், பாத்திரங்களை கழுவுதல், நான்கு மாதக் குழந்தையைக் கவனித்துக் கொள்ளுதல் உள்ளிட்ட வேலைகளை நான் பார்த்து வந்தேன்.

குறித்த சம்பவம் நடந்த தினம் எனக்கு நினைவில் இல்லை. அது ஒரு ஞாயிற்றுக் கிழமை பகல் 12-30 மணியிருக்கும். அப்போது யாரும் வீட்டில் இருக்கவில்லை. நான் மட்டுமே இருந்தேன். அங்குள்ள நான்கு மாதக் குழந்தைக்கு நானே பால் கொடுப்பேன். அன்றைக்கும் வழமை போல பால் கொடுத்த போது குழந்தையின் மூக்கிலிருந்து பால் கொட்டியது. அப்போது நான் குழந்தையின் தொண்டையை தடவிக் கொடுத்தேன். குழந்தை கண் மூடியிருந்த படியால் நான் அது அயர்ந்து உறங்குகிறது என நினைத்துக் கொண்டேன்.

குழந்தையின் தாய் எஜமானி சுமார் 1-30 மணியளவில் வந்து சாப்பிட்டு விட்டு குழந்தையைப் பார்த்தார். பின்னர் என்னை செருப்பால் அடித்து விட்டு குழந்தையைத் தூக்கிச் சென்றார்.அப்போது அவர் அடித்ததில் என் மூக்கில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. பின்னர் என்னை போலீசில் ஒப்படைத்தார்கள். அவர்கள் என்னை ஒரு பட்டியில் அடைத்து அடித்தார்கள் குழந்தையின் கழுத்தை நெறித்ததாக எழுதிக் கொடுக்குமாறும், கையொப்பமிடுமாறும் மிரட்டினார்கள். கையெழுத்திடவில்லை என்றால் மின்சார வதை கொடுக்கப் போவதாக மிரட்டிய போது நான் பயந்து போய் அவர்களுக்கு கையொப்பமிட்டுக் கொடுத்தேன். அப்போதுதான் நான் பயங்கரமாக உணர்ந்தேன்.சரியான நினைவு எனக்கில்லை குழம்பிய மன நிலையில் கையொப்பமிட்டேன்.

அல்லாஹ் மீது ஆணையாகச் சொல்கிறேன் நான் அக்குழந்தையின் கழுத்தை நெறிக்கவில்லை"

ரிஸானா நபீக்.

அல் த்வாத்மி சிறைச்சாலை,

அல் தவாத்மி, சவுதி அரேபியா.


இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மூதூர் பகுதி கிராமமொன்றில் ஏழைக் குடும்பத்தில் பிறந்த குழந்தை ரிஸானாவை 17 -வயதில் வீட்டு வேலைக்காக அனுப்புகிறார்கள். தங்களுடைய வறுமையைப் போக இக்குழந்தையை வீட்டு வேலைக்கு அனுப்ப சட்ட ரீதியான சாத்தியங்கள் இல்லாத போது 1998-ல் பிறந்த ரிஸானாவில் பிறந்த நாளை 1982 என மாற்றி வயதை அதிகமாக்கி பாஸ்போர்ட் எடுத்து அனுப்புகிறார்கள். இது இலங்கையில் மட்டுமல்ல அரபு நாடுகளுக்கு இப்படியாக பல ஏழைக் குழந்தைகள் ஏஜெண்டுகள் மூலம் அனுப்பப்படுகிறார்கள். ஏழ்மையைத் தவிற வேறு எந்த காராணங்களையும் சொல்ல முடியாது. ஆனால் தேயிலைப் பயிற் செய்கைக்கு கங்காணிகள் என்ற பெயரில் ஏஜெண்டுகள் எப்படி ஏழைகளை 19-ஆம் நூற்றாண்டில் கடத்திச் சென்று மலைக்காடுகளில் விட்டார்களோ, அப்படியே ஏஜெண்டுகள் இந்த ஏழைகளை கடவுச்சீடுகள் மூலம் அரபு நாடுகளுக்குக் கடத்துகிறார்கள்.

10 பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு 16 வயது ரிஸானா நபீக் சமைக்கிறாள், துணி துவைக்கிறாள், வீட்டைச் சுத்தம் செய்கிறாள், தன் எஜமானியின் நன்கு மாத குழந்தைக்கு ஊட்டுகிறார். கடைசியில் குழந்தையின் கழுத்தை நெறித்துக் கொன்றதாக 17 வயதில் கைது செய்யப்பட்டு இப்போது 24 வயதில் தலை வெட்டப்பட்டு சவூதி மன்னராட்சி அரசால் கொல்லப்பட்டிருக்கிறார்.

தமிழைத் தவிற வேறு மொழியறியாத ஒரு குழந்தை தன்னை விட 17 வயது குறைவான நான்கு மாதக் குழந்தையை கவனித்துக் கொள்கிறது. இடம் புதிது, மொழி தெரியாது. சம்பவம் நடந்த போது வீட்டிலும் எவரும் இல்லை. ஒரு சின்னக் குழந்தையிடம் ஒரு பெரிய குழந்தை துரதிருஷ்டமான ஒரு நேரத்தில் எப்படி நடந்து கொள்ளுமோ அப்படித்தான் ரிஸானாவும் நடந்தாள். ஏனெனில் ஒரு துரதிருஷ்டவசமான சம்பவம் குழந்தைக்கு நடக்கிறது, அதற்கு புரை ஏறி மூச்சுக்குழாய்க்குள் பால் அடைக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் பிராயமோ, புரையேறிய குழந்தையை சரிந்த வாக்கில் படுக்க வைத்து முதுகைத் தட்டிக் கொடுத்தால் ஒரு வேளை சரியாகும் வாய்ப்பு உள்ளது என்பதோ இந்தப் பெரிய குழந்தைக்கு எப்படித் தெரியும் என எதிர்ப்பார்க்க முடியும்?

ஆக மொத்தம் ரிஸானா வறுமையின் நிமித்தம் சவுதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட சில மாதங்களிலேயே சிறைக்குச் சென்று விடுகிறார். சிறையில் கழிந்த இந்த ஏழு ஆண்டுகளில் அவருக்காக ஒரு வழக்கறிஞர் கூட நியமிக்கப்பட்டு வாதாடியதாகத் தெரியவில்லை. நிலப்பிரவுத்துவம் வீழ்ந்து முதலாளித்தும் நமக்கு இந்த நவீன உலகையும் சிந்தனைப் போக்கையும் கொடுத்த பின்னரும் இன்னமும் மன்னராட்சி முறையை சவுதி அரேபியா வைத்திருக்கிறது. வஹாபிசம் எனப்படும் படு பிற்போக்கான சிறிதும் ஜனநாயகமற்ற கடும் ஒழுக்க தேசியவாதப் போக்கைக் கொண்ட சவுதி, அரபுத் தேசியத்தின் அடையாளமாக தன்னை நிறுத்திக் கொள்கிறது.

இம்மாதிரியான தண்டனை முறைகளால் மக்களை நிரந்தரமான அச்சத்துள் வாழ வைப்பதே அதன் ஆன்மா. இஸ்லாத்தின் மேன்மை மிக்கவனாக தன்னை காட்டிக் கொள்ளும் மன்னராட்சி சவுதியில் மூன்றாம் உலக நாடுகளைச் சார்ந்த தொழிலாளார்களில் நிலை மிக பரிதாபம், வறுமையாக இருந்தாலும் ஒப்பீட்டளவில் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகள் சுதந்திரமானவைதான் இங்கிருந்து செல்லும் தொழிலாளர்கள் கொத்தடிமைகளைப் போல நடத்தப்படும் நிலையில் இதிலிருந்து முஸ்லீம் தொழிலாளர்களும் விதிவிலக்கில்லை. பணக்காரன் தன் சாதிக்காரனாக இருந்தாலுமே அவனை ஒரு வர்க்க அடிமையாக மட்டுமே எப்படி நடத்துவானோ அப்படித்தான் இந்த ஏழை முஸ்லீம்கள் மீது கூட வாஹாபிசம் எவ்வித கருணையும் காட்டுவதில்லை. அது சவுதிக்குள் ஏழை பணக்காரன் என்ற வேறு பாடில்லாமல் இந்த தண்டனை முறையைக் கொண்டிருப்பதாக நான் வாசித்தேன். ஆனால் இதே வஹாபிசம் அமெரிக்க , ஐய்ரோப்பிய தேசியத்திடம் மண்டியிட்டுக் கிடக்கிறது. ஐய்ரோப்பாவைச் சார்ந்த எவர் ஒருவரும் இப்படியான தண்டனைகளுக்கு சவுதியில் உள்ளாக முடியாது என்பதெல்லாம் தனிக்கதை. எண்ணெய் வளம் கண்டறியப்பட்டதையொட்டி சவுதி மன்னராட்சி மேற்குலகோடு செய்து கொண்ட தொழிலாளர், மற்றும் வணிக ஒப்பந்தங்கள் சவுதி அரேபியச் சட்டங்களின் படி ஐய்ரோப்பியர்களை தலை வெட்டித் தண்டிக்க முடியாத விலக்கை அளிக்கிறது. ரிஸானா வெள்ளை தேசத்தவராக இருந்தால் நிச்சயம் இந்த தண்டனை அவருக்குக் கிடைத்திருக்காது.


நீதிமன்றங்களோ, அவர்களின் போலீசாரும், அவர்களின் இஸ்லாமிய ஷரியத் சட்டங்களும் என்ன சொல்கிறதோ அதைக் கேட்டு தீர்ப்பு எழுதும். இவர்தான் குற்றவாளி என்பதை எளிதில் தீர்மானித்து விடுகிற நீதிமன்றம். குற்றம் சுமத்தப்பட்டவருக்கு தான் நிரபராதி என்பதை நிரூபிப்பதற்கான வாய்ப்புகளை வழங்குவதில்லை. சவுதியின் பணக்கார முஸ்லீம்களின் வீடுகளில் வீட்டு வேலை செய்ய, கார் ஓட்ட ஏழை முஸ்லீம்கள் தேவைப்படுகிறார்கள். ஏனெனில் முஸ்லீம் அல்லாதவர்களை தங்களின் வீட்டு வேலைகளில் இவர்கள் ஈடுபடுத்திக் கொள்வதில்லை என்று சொல்லப்படுகிறது. ரிஸானா என்னும் சிறுமியைப் பொறுத்தவரை அவருக்கு மொழி பெயர்ப்பாளாராக இருந்தவர்கள் குறித்து அரிய முடியவில்லை. அவர் கைது செய்யப்பட்ட போதும் ஏழாண்டுகள் சிறையில் கழிந்த போதும் தலை துண்டிக்கப்படுவதற்கு சற்று முன்னரும் அந்தக் குழந்தையின் நினைவில் என்ன ஓடியிருக்கும் எனத் தெரியவில்லை. புரையேறி இறந்து போன நான்கு மாதக் குழந்தையின் பெற்றோர் மன்னிப்பளித்திருந்தால் ரிஸானா விடுவிக்கப்பட்டிருப்பார் என்னும் நிலையில் அவர்கள் அந்த மன்னிப்பை இன்னொரு குழந்தைக்கு வழங்க முன் வரவில்லை.

2004-ம் ஆண்டில் இயக்குநர் கமலின் 'பெருமழக்காலம் 'படம் மலையாளத்தில் வந்தது. ரஸியா வின் கணவன் ஒரு விபத்தாக ரகுநாத அய்யர் என்பரைக் கொன்ற கொலைக்குற்றத்தின் பேரில் தலைவெட்டும் தண்டனைகுள்ளாகி வளைகுடா நாட்டில் இருக்க, கொல்லப்பட்ட ரகுநாத அய்யரின் மனைவியிடம் ரஸியா குற்றத்தை மன்னிக் கோருவதுதான் கதை. ரகுவின் மனைவி மன்னித்தால் தன் கணவன் விடுவிக்கப்படுவான் என்பதாகச் செல்லும் கதையில் நுட்பமாக ஒரு உயிரை இழந்த, இன்னொரு உயிரைக் காப்பற்றப் போராடும் இரண்டு பெண்களின் மன உணர்வுகளை மிக நுட்பமாகச் சொல்லியிருப்பார் கமல். இப்படியான வாய்ப்புகள் சினிமாக்களில் மட்டுமே சாத்தியம் என்னும் நிலையில் மன்னிக்கும் தேவையிருந்தும் கூட அந்த வாய்ப்பில்லாமல் வாளால் வீழ்த்தப்பட்டிருக்கிறார் இந்த சிறுமி.கொடூரமான இந்த வாள் வெட்டைத்தான் இந்துப் பாசிஸ்டுகள் இந்தியாவில் நடைமுறைப்படுத்தக் கோருவதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.


அளவற்ற கருணையையும், இரக்கத்தையும், மன்னிப்பையும் பேசும் குரானோ அல்லாவோ இந்த ரிஸான் பற்றி எதுவும் சொல்லப்போவதில்லை. குடும்ப வறுமையைப் போக்கிக் கொள்ள 17 வயதில் கடைசியாக தங்கள் மகளை வழியனுப்பியவர்கள் பிணமாகவேனும் ரிஸானாவைக் காண்பார்களா என்பது தெரியவில்லை. அவர்களின் வறிய வாழ்வும் மாறவில்லை பிள்ளையும் இல்லாமல் போய் விட்டது. எல்லையற்ற அல்லாவின் கருணையில் ரிஸானாவின் இடம் எதுவெனத் தெரியவில்லை. ஏழாண்டுகள் சிறையில் கழிந்த போது அவள் என்ன நினைவுகளோடு வாழ்ந்திருப்பாள். மூதூரை, தன் உறவுகளை, கொஞ்சம் முந்தைய தன் பால்யத்தை, விளையாடிய விளையாட்டை, தன் சகாக்களோடு இட்ட சண்டையை, சிரிப்பின் துளிர்ப்பை, தன் தாய் பட்ட கஷ்டத்தை, தந்தையின் துயரத்தை, ஒரு காதல் கனவை, நடனத்தை, நாடு திரும்புவதை, மூதூரின் வீதிகளின் புதிய மனுஷியாக நடப்பதை, அரபு தேசத்திலிருந்து வாங்கி வந்த மிட்டாய்களை உறவுகளுக்கு கொடுப்பதை, புதுத்துணி எடுத்துக் கொடுப்பதை, குடிசை வீட்டை ஒரு சுவராக மாற்றுவதை, முற்றத்தில் சின்னதாய் ஒரு செம்பருத்தி வளருவதை….. ரிஸானா எதையெல்லாம் கனவு கண்டிருப்பாய்…. ஒரு தனித்த கனவு அல்ல அது ஒரு குடும்பத்தின், ஒரு சமூகத்தின் கனவல்லவா?

அத்தனையும் ஒரு வெட்டில் சிதறிப்போனக் கனவோ…. என் அன்பே

(புகைப்படங்கள் பானுபாரதி விமலின் முகநூல் பக்கத்திலிருந்தும், சில தளங்களிலிருந்தும் எடுத்தாளப்பட்டது

Sunday, 6 January 2013

சித்ரவதையில் பல ரகங்கள் உண்டு

கல்வியின் சிறப்பை பெரியவர்கள் பல வகையில் எடுத்துக் கூறியிருக்கிறார்கள். முட்டாளை அறிவாளியாக்கும், முரடனை மென்மையாக்கும், பொய்யனை சத்தியனாக்கும், திருடனை காவலனாக்கும் என்று கல்வியின் மந்திர சக்தியை படித்தவர்கள் மட்டுமின்றி படிப்பை தவற விட்டவர்களும் சிலாகித்து பேசுகின்றனர். எல்லாம் பொய்யோ என்று எண்ணும் வகையில் அவ்வப்போது சம்பவங்கள் நடைபெறுகின்றன. பயங்கரவாதத்தில் ஈடுபட்டு பிடிபடுகின்றவர்கள் உயர்கல்வி பயின்றவர்களாகவும் ஆராய்ச்சியாளர்களாகவும் இருப்பதாக அறியும்போது கல்வி அதன் சக்தியை இழந்துவிட்டதா அல்லது காலம் தலைகீழாக மாறிவிட்டதா என்று குழம்பிப்போகிறோம். என்றாலும்கூட, ஒரு பேராசிரியர் தனது மனைவியை அம்மிக் குழவியால் அடித்து, நெஞ்சில் ஏறி மிதித்து, கழுத்தை அறுத்து படுகொலை செய்திருக்கிறார் என்ற செய்தியை படிக்கும்போது பலத்த அதிர்ச்சி ஏற்படுகிறது. திருவள்ளூரை அடுத்துள்ள ஒரு கல்லூரியில் எம்.பி.ஏ துறையின் தலைவராக பணியாற்றும் அவர் மாணவனாக இருந்தபோதே  அரசுப் பதக்கங்கள் உட்பட பல விருதுகளை குவித்தவர் என்கிறார்கள். கல்லூரியிலும் நல்ல பெயருடன்தான் முதன்மைப் பேராசிரியராக பணியாற்றி வந்திருக்கிறார். திருமணமாகி 15 ஆண்டுகள் கடந்து, 13 வயதில் மகள் இருக்கும் நிலையில் அவருக்கு இந்த கொலைவெறி எப்படி வந்தது என தெரியாமல் நண்பர்களும் உறவினர்களும் திகைத்துப் போயிருக்கிறார்கள். முதல்கட்ட விசாரணை நடத்திய காவல்துறை அதிகாரிகள் கணவன் , மனைவி இடையே ஆரம்பத்தில் இருந்தே ஈகோ பிரச்னை இருந்து வந்ததாக கூறுகின்றனர். வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த மனைவி, வேறு யாரையாவது மணந்திருந்தால் மகாராணி போல் வாழ்ந்திருப்பேன் என்று அடிக்கடி இவரை சீண்டியதாகவும் கூறுகின்றனர். பேராசிரியர் மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கிய போதிலும், பிச்சைக்காரன்கூட இதைவிட அதிகம் சம்பாதிக்கிறான் என்று குத்திக் காட்டினால் வலிக்கும்தானே. சித்ரவதையில் பல ரகங்கள் உண்டு. அதில் ஆண் பெண் வேறுபாடு கிடையாது. அதேபோல எல்லா காயங்களும் வெளியில் தெரியாது. எனினும், தொடரும் தொல்லையில் இருந்து விடுபட வேண்டுமானால் விலகிச் செல்வதுதான் சரியான வழி என்பதை மெத்தப் படித்தவர் உணராமல்  போனது உண்மையில் துரதிர்ஷ்டம்.





நன்றி: Dinakaran

Wednesday, 2 January 2013

வீட்டுக்கு வீடு துப்பாக்கி

அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தின் நியூ டவுன் மக்களுக்கு மிகவும் மோசமான நாள் அது. அன்றுதான் சாண்டி ஹுக் பள்ளியில் புகுந்த இளைஞன், 20 குழந்தைகள் உள்பட 26 பேரை சுட்டுக் கொன்றான். ம¦ள முடியாத துயரில் மூழ்கியிருக்கிறது அமைதியான அந்த பகுதி. அமெரிக்காவில் வீட்டுக்கு வீடு துப்பாக்கி இருக்கும். அங்கெல்லாம் நிலத்தின் பரப்பளவு அதிகம். மக்கள்தொகை குறைவு. வீடுகளும் நெருக்கமாக இருக்காது. அதனால் கொள்ளையர்களிடமிருந்து தற்காத்துக்கொள்ள துப்பாக்கி அவசியம் என்பார்கள். அதனால் விற்பனையும் அதிகம். எத்தனையோ அப்பாவிகள் தோட்டாவுக்கு பலியானாலும் துப்பாக்கி மோகம் மட்டும் குறையவில்லை. இது குறித்து விமர்சனம் செய்தோ, எதிர்த்தோ யாராவது அரசியல்வாதிகள் கருத்து தெரிவித்தால் அவர்களுக்கு அடுத்த தேர்தலில் ஓட்டு விழுகாது. அந்த அளவுக்கு துப்பாக்கியை நேசிக்கிறார்கள் அமெரிக்கர்கள். அமெரிக்காவின் இந்த துப்பாக்கி கலாசாரத்துக்கு அப்பாவிகள் பலியாவது இது முதன்முறையல்ல. 1999ல் கொலராடோவில் உள்ள கொலம்பியன் பள்ளியில் புகுந்த இரண்டு சிறுவர்கள் சுட்டதில் 13 பேர் பலியானார்கள். 2007ல் வர்ஜீனியா பல்கலைக் கழகத்தில் ஒரு இளைஞன் துப்பாக்கியால் சுட்டதில் 32 பேர் பலியானார்கள். இப்போது 26 பேர். இதில் 20 குழந்தைகளுக்கு 7 வயது கூட நிறையவில்லை என்பதுதான் பரிதாபம். வீட்டில் தாய் நான்சியை சுட்டுக் கொன்றுவிட்டு, பள்ளிக்கு வந்த ஆடம் லான்சா என்ற இளைஞன், பள்ளி வளாகத்தில் 100 முறை சுட்டிருக்கிறான். இறந்த பின்னும் சுட்டிருக்கிறான். இந்த வெறியாட்டத்தில் குழந்தைகளின் உடல்கள் சிதைந்து போனதால், அவர்கள் போட்டிருந்த ஐ.டி. கார்டை வைத்துத்தான் பெற்றோரை அடையாளம் காட்டச் சொல்லியிருக்கிறார்கள் போலீசார். லான்சா மன நலம் பாதிக்கப்பட்டவனாக இருக்கலாம் என்கிறார்கள் போலீசார். அப்படியானால் அவன் கையில் கிடைக்கும் வகையில் துப்பாக்கிகளை வைத்திருக்கலாமா? நான்சியிடம் போலீசார் பயன்படுத்தும் 2 கைத் துப்பாக்கிகள், ராணுவத்தில் பயன்படுத்தப்படும் எம்4 துப்பாக்கி உள்பட 5 துப்பாக்கிகள் இருந்துள்ளன. ஆசிரியை பணியில் இருந்தவருக்கு எதற்கு இத்தனை துப்பாக்கிகள் என்பதை யார் விளக்குவார்கள்? துப்பாக்கிகளுக்கு எதிராக அமெரிக்காவில் மீண்டும் எதிர்ப்புக் குரல் கிளம்பியிருக்கிறது. இந்த முறை மக்களிடம் இருந்தே. அதனால் பலன் இருக்கும் என நம்பலாம்.




நன்றி: Dinakaran