Monday, 4 February 2013

மம்தாவின் அமுதமொழி

சுஷில் குமார் ஷிண்டே பேச்சால் எழுந்த பரபரப்பில் மம்தாவின் அமுதமொழி அமுங்கி விட்டது. இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருக்கிறோம் என்பதை மறந்து விட்டாரோ என்று ஷிண்டேயை விமர்சிக்கிறார்கள். மேற்கு வங்காளத்தின் முதலமைச்சராக இருப்பது நினைவில்லையோ என்று மம்தாவை கேட்க தோன்றுகிறது. '10 தடவை பிரதமரை கேட்டு விட்டேன். இதற்கு மேல் என்ன செய்வது? அடிக்கவா முடியும்?' என்று பேசுபவரை பார்த்தால் வேறெப்படி தோன்றும். மத்திய அரசிடம் மேற்கு வங்க அரசு வாங்கிய கடன்கள் மீதான வட்டியை தள்ளுபடி செய்யுங்கள்; கடனை திருப்பி செலுத்துவதிலும் மூன்று வருடம் இடைவெளி தாருங்கள் என்று மம்தா கேட்டு வருகிறார். இந்த கோரிக்கையை பிரதமரிடம் பல முறை வலியுறுத்தியும் அவர் கண்டு கொள்ளவில்லையாம். அதைத்தான் பொதுக்கூட்டத்தில் மேற்கண்டவாறு வெளிப்படுத்தியுள்ளார். பிரதமரை அடிப்பது என்று ஒரு முதல்வர் பேசுவதா என்று உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும்.  வங்காளிகள் அதிர்ச்சி அடைய மாட்டார்கள். அவர்களுக்கு தெரியும். 'வருமான வரி சுங்க வரி அது இது என்று என் மாநில மக்களின் பணம் 40,000 கோடியை மத்திய அரசு பிடுங்கிக் கொள்கிறது. வெறும் 18,000 கோடிதான் நமக்கு தருகிறது. இது போக வாங்கிய கடனுக்கு வருடம் 26,000 கோடி வட்டி + தவணை கேட்கிறது. என்ன அநியாயம் பாருங்கள்' என்று மக்களிடம் முறையிட்டார். பெரிய சலசலப்பு ஏதுமில்லை. அடுத்த அம்பு எய்தார். 'இதுவரை இருந்த மார்க்சிஸ்ட் அரசு தான் கடன் வாங்கியது. அந்த கட்சிதான் திருப்பி செலுத்த வேண்டும். என்னிடம் கேட்பது என்ன நியாயம்?' என்று குமுறினார். அரசு வாங்கிய கடனை கட்சி எப்படி செலுத்த முடியும் என்றால் அதற்கும் பதில் வைத்திருக்கிறார். 

'அந்த கட்சிக்கு நிறைய கட்டிடங்கள், சொத்துகள் இருக்கின்றன. அவற்றை ஏலத்தில் விற்று எடுத்துக் கொள்ளுங்கள்' என்று மத்திய அரசுக்கு யோசனை கூறியுள்ளார். 2002ம் ஆண்டிலேயே  அவர் கேட்டார். 'ஏழை தொழிலாளர்களின் கட்சி என்று சொல்லிக் கொள்பவர்கள் ஊருக்கு ஊர் இவ்வளவு சொத்து வாங்கி குவிப்பது ஏன்?' என்று கேள்வி எழுப்பி,  அதை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்த அளவுக்கு புரட்சிகரமான பொருளாதார சிந்தனைக்கு காது கொடுத்தால் பிரதமருக்கு பாவம் எங்கிருந்து பேச்சு வரும்?




நன்றி: Dinakaran 

No comments:

Post a Comment