வெளிநாடுகளை சுற்றிப் பார்க்கும்போது பல விஷயங்கள் பிரமிக்க வைக்கும். 'இந்த அளவுக்கு நமது நாடு எப்போது முன்னேறும்?' என்ற ஏக்கம் உண்டாகும். நாடு திரும்பியதும் விமான நிலையத்திலேயே அந்த சிந்தனைகளை அடக்கம் செய்துவிட்டு வழக்கமான வாழ்க்கையில் ஒன்றிவிடுவார்கள் பலர். சிலர் சில நாட்கள் அந்த சிந்தனைகளை சுற்றியிருப்போருடன் அலசிவிட்டு, அதெல்லாம் இங்கே சாத்தியப்படாது என்ற முடிவோடு மறந்துவிடுவார்கள். என்ன தடைகள் இருந்தாலும் அதை தாண்டி மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று களத்தில் இறங்குபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்களில் ஒருவர். நதிகளை இணைக்க வேண்டும் என்பது அவரது பிரதான கனவு. அதை காவிரி, முல்லை பெரியாறு, கிருஷ்ணா போன்ற விவகாரங்களுக்கு முற்றுப்புள்ளியாக அவர் பார்க்கவில்லை. இந்தியாவின் முன்னேற்றத்துக்கு தடைக்கற்களாக விளங்கும் நிலமும் நீரும் சார்ந்த பல்வேறு சமூக, பொருளாதார, அரசியல் பிரச்னைகளுக்கு ஒட்டுமொத்த தீர்வாக நதிகள் இணைப்பு அமைவதற்கான சாத்தியக்கூறை உணர்ந்திருந்தார். அதனால்தான் ஒரே கோஷத்தை முன்வைத்து இரண்டாயிரம் கிலோமீட்டர் பாதயாத்திரையை மேற்கொண்டார். மக்கள் சக்தியை ஓர் இயக்கமாக உருமாற்றும் அவரது முயற்சி வெற்றி பெறவில்லை. எனினும் படித்தவர்கள், பணம் படைத்தவர்கள் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்த தங்களால் இயன்றதை செய்தாலே நாடு முன்னேறிவிடும் என்று அவர் விதைத்த சிந்தனை பல்லாயிரம் உள்ளங்களில் வேர்விட்டு வளர்ந்திருக்கிறது. குழந்தைகளுக்கு ஆங்கிலம் சொல்லித் தருவது, குடிசைக்கு வெளியே வர இயலாத நோயாளிகளை சந்திக்க டாக்டர்களை அழைத்துச் செல்வது, பெண்களுக்கு நவீன தொழில்கள் கற்றுக் கொடுப்பது என்று தமிழகம் முழுவதும் தனியாகவும் குழுக்களாகவும் ஏராளமானவர்கள் பொது சேவையில் ஈடுபட்டிருப்பது அதற்கு சாட்சி. எக்ஸ்னோரா போன்ற அமைப்புகளின் சேவைக்கு சற்றும் குறைந்ததல்ல இவர்களின் பணி. வாரம் ஒருநாள் ஒருமணி நேரம் ஒதுக்கி எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் அடித்தட்டு மக்களுக்கு ஏதோ ஒரு வகையில் உதவுவோம் என்று எல்லோரும் முன்வரும்போது இந்தியாவின் பொற்காலம் உதயமாகும்.
நன்றி: Dinakaran
No comments:
Post a Comment