லட்டு சாப்பிட்டதும் கொஞ்சம் மிக்சர் எடுத்து வாயில் போட்டுக் கொள்ளும் வழக்கம் நமக்கு பழக்கமானது. மத்திய அரசு அதைத்தான் செய்திருக்கிறது. மானிய விலையில் 6 சிலிண்டர்தான் என்பதை 9 ஆக உயர்த்தியது. பரவாயில்லையே என்று சொல்ல மக்கள் நினைத்தபோது டீசல் விலையை 45 பைசா உயர்த்தி விட்டது. மிக்சருக்கு பதில் மிளகாய் பொடி. ஏதோ ஒரு நல்லது நடந்திருக்கிறது என்று ஒரு நாள்கூட மக்கள் மெத்தனமாக இருந்துவிட கூடாது என்பதில் மேலிடத்தில் யாரோ கவனமாக இருப்பது புரிகிறது.உறுதியான எந்த முடிவும் எடுக்காமல் காலத்தை ஓட்டுவது; எந்த எச்சரிக்கையும் தராமல் அதிரடியாக முடிவை அறிவிப்பது. இப்படி இரண்டு தொலைமுனைகளில் ஒன்றை வழிமுறையாக பின்பற்றுவது அரசுக்கு அழகல்ல. டீசல் விலை உயர்வால் 15,000 கோடி கூடுதலாக கிடைக்கும். சிலிண்டர் எண்ணிக்கை உயர்வதால் 10,000 கோடி கூடுதல் செலவாகும். மீதி?ரயில்வே, அரசு போக்குவரத்து கழகங்கள், ராணுவம் போன்றவை லிட்டருக்கு 10 ரூபாய் அதிகம் கொடுத்து டீசல் வாங்குவதால் அரசுக்கு ஏற்படும் சுமையில் அந்த மீதி கரைந்துவிடும். ரயில்வேக்கு மட்டும் செலவு 2,700 கோடி அதிகரிக்கும். நிதியமைச்சர் தெளிவாக கூறிவிட்டார்: இந்த உயர்வு மூலம் கிடைக்கும் கூடுதல் வருவாய் எனது பட்ஜெட்டுக்கு பயன்படப்போவதில்லை. பிறகேன் இந்த வீண் வேலை. மானியங்களால் ஆயில் கம்பெனிகளுக்கு ஒன்றரை லட்சம் கோடிக்கு மேல் இழப்பு. அதை குறைக்க முதல்கட்டமாக பெட்ரோல் விலையை சந்தை விலைக்கு சமமாக்கியது அரசு. சர்வதேச விலைக்கு ஏற்ப அது ஏறி இறங்குகிறது. அக்டோபரில் 56 பைசா குறைந்தது. நவம்பரில் 95. நேற்று 25 பைசா.
இதற்கு மக்கள் பழகிவிட்டனர். டீசலையும் அப்படி மாதம் 40,45 பைசா வீதம் ஏற்ற கம்பெனிகளுக்கு அனுமதியாம். 9 ரூபாய் 60 பைசாவை சரிக்கட்ட 19 மாதம் இப்படி உயர்த்த வேண்டும். அதோடு லாரி, பஸ், ரயில் கட்டணமும் சிமென்ட், காய்கறி விலைகளும் அதிகரிக்கும்போது மக்கள் என்னாவது? அடுத்த 16 மாதத்துக்குள் 10 சட்டமன்றங்களுக்கும் நாடாளுமன்றத்துக்கும் தேர்தல் நடக்க இருக்கும் சூழலில் இந்த நடவடிக்கை அசட்டு துணிச்சலாக தோன்றுகிறது.
நன்றி: Dinakaran
No comments:
Post a Comment