தமிழகத்தில் சாலை விபத்துகளில் மட்டும் கடந்த ஆண்டில் 15 ஆயிரத்து 900 பேர் பலியாகி உள்ளனர். சராசரியாக தினமும் 43 பேர். 91 சதவீத விபத்துகளுக்கு காரணம் டிரைவரின் கவனக் குறைவு மற்றும் தவறுதான் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. மோசமான சாலைகள், பழைய வாகனங்கள், மோசமான வானிலை, அதிக வேகம் போன்றவையும் விபத்துகளுக்கு காரணங்கள். முக்கிய காரணம் டிரைவர்கள்தான். ஒன்வேயில் ஓட்டுவது, ரயில் வருவதற்குள் போய் விடலாம் என ஆளில்லாத லெவல் கிராஸிங்கில் செல்ல முயல்வது, போட்டி போட்டுக் கொண்டு முந்தி செல்வது போன்றவற்றால் நடக்கும் விபத்துகள் அதிகம். முறையான பயிற்சி பெறாத டிரைவர்களும் பயிற்சி பெற்றிருந்தும் மது அருந்திவிட்டு ஓட்டுவதற்கு தகுதி இல்லாத நிலையில் ஓட்டுபவர்களும் அதிக எண்ணிக்கையில் விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். அதிக வேகம் ஆளைக் கொல்லும் எனத் தெரிந்திருந்தும் சாலைகளில் பறக்கிறார்கள். அதனால்தான் நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகம் விபத்து நடக்கிறது. 22 ஆயிரத்து 168 பேர் உயிரை விட்டிருக்கிறார்கள். மாநில நெடுஞ்சாலைகளில் 20 ஆயிரத்து 920 பேர்.வாகனங்களை பொறுத்து 10 அல்லது 15 ஆண்டுகள் பழையதாகி விட்டால் அவற்றை கழித்து விட வேண்டும். ஆனால் ரிப்பேர் பார்த்து ரிப்பேர் பார்த்து அதை ஓட்டிக் கொண்டே இருப்பதால் ஒருநாள் விபத்தில் சிக்கவைத்து விடுகிறது. சமீபத்தில் திருச்சியில் பழுதான கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அடுத்தடுத்து மூன்று பைக்குகளில் மோதியதில் 4 பேர் பரிதாபமாக இறந்து போனார்கள். உடலுக்கு நல்லது இல்லை எனத் தெரிந்தும் பால், குழம்பு, எண்ணெய் என அனைத்து உணவு பொருட்களையும் சூடு பண்ணி, சூடு பண்ணி பயன்படுத்துபவர்கள் நாம். பல லட்சம் மதிப்புள்ள வாகனங்களை அவ்வளவு சீக்கிரம் கழித்து விடுவோமா என்ன?தூங்கும் நேரம், வேலை பார்க்கும் நேரம் தவிர வாழ்க்கையின் 30 சதவீதத்தை சாலைகளில்தான் கழிக்கிறோம். ஓட்டத் தெரியாத, சாலை விதிகளை மதிக்காத டிரைவர்களால் உயிரை பணயம் வைத்து பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. இவர்கள் உருவாக காரணம் பொறுப்பில்லாத போக்குவரத்து அதிகாரிகள். ஒவ்வொரு குடும்பத்திலும் இழப்பு ஏற்படும் வரை காத்திருக்கிறார்களா அவர்கள்?
நன்றி: Dinakaran
No comments:
Post a Comment