Monday, 4 February 2013

இலவசமாக கொடுத்த விஞ்ஞானிகளை விலைக்கு வாங்க அரசு முடிவு

உழைப்புக்கு ஏற்ற ஊதியம் அவசியம். இது அனைத்து வேலைகளுக்கும் பொருந்தும். நேரம், காலம் பார்க்காமல், விடுமுறை கூட எடுக்காமல் வேலை பார்ப்பவர்களையும் இருக்கும் அத்தனை லீவையும் ஒன்று கூட விடாமல் எடுப்பவர்களையும் ஒரே மாதிரி நினைப்பது சரியாக இருக்காது. விஞ்ஞானிகள் முதல் ரகம். அவர்கள் ஓரளவுக்கு கவுரவமான வாழ்க்கை வாழ பணம் அவசியம். அது கிடைப்பதில்லை. அந்த நிலை இனி மாறப்போகிறது.விஞ்ஞானிகளும் மனிதர்கள்தான். அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது. அவர்கள் பணிக்கேற்ற சம்பளம் கிடைப்பதில்லை. ஆராய்ச்சிக்கு தேவையான வசதிகளும் இருப்பதில்லை. அதனால்தான் டாலர்களில் கொட்டிக் கொடுக்கும் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கு பறக்கிறார்கள். அங்கு அவர்கள் ஆராய்ச்சி செய்து  கண்டுபிடிக்கும் தொழில்நுட்பங்களை, தயாரிக்கும் பொருட்களை பல மடங்கு விலை கொடுத்து இந்தியா வாங்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. இப்படி வெளிநாடு பறந்த சிறந்த விஞ்ஞானிகளை அதிக சம்பளம் கொடுத்து மீண்டும் இந்தியாவுக்கே வரவழைக்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. தாயகம் திரும்ப சம்மதிக்கும் விஞ்ஞானிகளுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் டாலர் (ரூ.55 லட்சம்) கவுரவ ஊதியமும், குடியிருக்க அனைத்து வசதிகளுடன் கூடிய வீடும் கிடைக்கும். இங்கு வந¢து போக, தங்கியிருக்க ஆகும் செலவையும் அரசே தரும். ஓராண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை ஆராய்ச்சியில் ஈடுபடலாம். புகழ்பெற்ற கல்லூரிகளில் பாடம் எடுக்கலாம். தேர்வு செய்யப்படும் விஞ்ஞானிகள் உடனே வர முடியாவிட்டாலும் பரவாயில்லை. 3 ஆண்டுகள் வரை கால அவகாசம் உண்டு. அதற்குள் வந்து இந்தியாவில் பணியாற்றலாம். இதன் மூலம் இந்திய ஆராய்ச்சிப் பணிகள் மேம்படும். அதோடு இளைய விஞ்ஞானிகளுக்கும் ஒரு ஊக்கமாக இது இருக்கும் என திட்டக் குழு துணைத் தலைவர் கூறியிருக்கிறார்.இதே போன்ற ஒரு திட்டத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு சீனா அமல்படுத்தியது. கைநிறைய சம்பளம், அதோடு சொந்த நாட்டுக்கு உழைப்பதில் கிடைக்கும் திருப்தி, சந்தோஷம் காரணமாக பல சீன விஞ்ஞானிகள் தாயகம் திரும்பினர். இது சீன அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அதுதான் இந்தியாவிலும் நடக்கப் போகிறது.





நன்றி: Dinakaran 

No comments:

Post a Comment