சார்டர்ட் அக்கவுன்டன்சி படிப்பு முடித்து சி.ஏ பட்டம் பெறுவது மிகவும் கடினமானது. லட்சம் பேர் எழுதினாலும் சில ஆயிரம் பேர்தான் தேர்ச்சி பெறுகிறார்கள். அவ்வளவு சிக்கலான படிப்பை முடித்து இந்தியாவிலேயே முதலாவது இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ள பிரேமாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும். பிரேமாவின் தந்தை ஒரு ஆட்டோ டிரைவர். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர். பிழைப்புக்காக மும்பை சென்றார். அங்கு மாநகராட்சி பள்ளியில் படித்தார் பிரேமா. நன்றாக படித்து நிறைய மதிப்பெண்கள் எடுத்ததால் கல்லூரியில் பி.காம் படிக்க உதவித்தொகை கிடைத்தது. அப்போதுதான் சி.ஏ படிக்க ஆசை எழுந்தது. 'அதெல்லாம் உன்னால் முடியாது. ரொம்ப கஷ்டம். பாசாவது அபூர்வம்' என்று பல நல்லவர்கள் சொன்ன அறிவுரையை நல்லவேளை பிரேமா கேட்கவில்லை. 'வாழ்க்கையே ஒரு போராட்டம். அதில் தைரியமாக எதிர்நீச்சல் போட்டு இந்த நிலைக்கு வந்திருக்கிறோம். சி.ஏ படிப்பையும் சவாலாக எடுத்துக் கொண்டு ஒரு கை பார்ப்போமே' என்று தோன்றியிருக்கிறது அந்த இளம்பெண் மனதில். அந்த தைரியமும் தன்னம்பிக்கையும் அவரை இன்று உச்சியில் உட்கார வைத்திருக்கிறது. கடினமாக உழைத்தார் என்பதை சொல்ல வேண்டியதில்லை. எல்லாவற்றிலும் மோசமான போட்டி வந்துவிட்ட இன்றைய சூழ்நிலையில் கடினமாக உழைக்காத எவராலும் இருக்கும் இடத்தைக்கூட தக்கவைத்துக் கொள்ள முடியாது. சென்னையில் பள்ளி மாணவிகளை சந்தித்து உரையாடிய பிரேமா, 'நான் அடைய விரும்பும் இலக்கு எது என்பதை முதலில் தீர்மானித்தேன். அப்புறம் அதை அடைவதற்கான வழியை முடிவு செய்தேன். பின்னர் மனம் சிதறாமல் அதில் பயணம் செய்தேன்' என்று தனது வெற்றியின் ரகசியத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.பள்ளியிறுதி பருவத்தை எட்டும் மாணவ மாணவிகளுக்கு இதைவிட சிறந்த மந்திரத்தை யாராலும் போதிக்க முடியாது. பிரேமாவின் தம்பியும் சி.ஏ தேர்வில் பாசாகி இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. வீட்டிலும் பள்ளியிலும் அனைத்து வசதிகளும் இணக்கமான சூழலும் இருந்தால்தான் படிப்பில் சாதிக்க முடியும் என்ற கருத்தையும் இவர்கள் தவிடுபொடி ஆக்கியுள்ளனர். மனம் இருந்தால் மற்றதெல்லாம் தானாக கைகூடும் என்று ஆட்டோ டிரைவரின் மகளும் மகனும் அற்புதமாக நிரூபித்துள்ளனர்.
நன்றி: Dinakaran
No comments:
Post a Comment