Wednesday, 2 January 2013

வீட்டுக்கு வீடு துப்பாக்கி

அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தின் நியூ டவுன் மக்களுக்கு மிகவும் மோசமான நாள் அது. அன்றுதான் சாண்டி ஹுக் பள்ளியில் புகுந்த இளைஞன், 20 குழந்தைகள் உள்பட 26 பேரை சுட்டுக் கொன்றான். ம¦ள முடியாத துயரில் மூழ்கியிருக்கிறது அமைதியான அந்த பகுதி. அமெரிக்காவில் வீட்டுக்கு வீடு துப்பாக்கி இருக்கும். அங்கெல்லாம் நிலத்தின் பரப்பளவு அதிகம். மக்கள்தொகை குறைவு. வீடுகளும் நெருக்கமாக இருக்காது. அதனால் கொள்ளையர்களிடமிருந்து தற்காத்துக்கொள்ள துப்பாக்கி அவசியம் என்பார்கள். அதனால் விற்பனையும் அதிகம். எத்தனையோ அப்பாவிகள் தோட்டாவுக்கு பலியானாலும் துப்பாக்கி மோகம் மட்டும் குறையவில்லை. இது குறித்து விமர்சனம் செய்தோ, எதிர்த்தோ யாராவது அரசியல்வாதிகள் கருத்து தெரிவித்தால் அவர்களுக்கு அடுத்த தேர்தலில் ஓட்டு விழுகாது. அந்த அளவுக்கு துப்பாக்கியை நேசிக்கிறார்கள் அமெரிக்கர்கள். அமெரிக்காவின் இந்த துப்பாக்கி கலாசாரத்துக்கு அப்பாவிகள் பலியாவது இது முதன்முறையல்ல. 1999ல் கொலராடோவில் உள்ள கொலம்பியன் பள்ளியில் புகுந்த இரண்டு சிறுவர்கள் சுட்டதில் 13 பேர் பலியானார்கள். 2007ல் வர்ஜீனியா பல்கலைக் கழகத்தில் ஒரு இளைஞன் துப்பாக்கியால் சுட்டதில் 32 பேர் பலியானார்கள். இப்போது 26 பேர். இதில் 20 குழந்தைகளுக்கு 7 வயது கூட நிறையவில்லை என்பதுதான் பரிதாபம். வீட்டில் தாய் நான்சியை சுட்டுக் கொன்றுவிட்டு, பள்ளிக்கு வந்த ஆடம் லான்சா என்ற இளைஞன், பள்ளி வளாகத்தில் 100 முறை சுட்டிருக்கிறான். இறந்த பின்னும் சுட்டிருக்கிறான். இந்த வெறியாட்டத்தில் குழந்தைகளின் உடல்கள் சிதைந்து போனதால், அவர்கள் போட்டிருந்த ஐ.டி. கார்டை வைத்துத்தான் பெற்றோரை அடையாளம் காட்டச் சொல்லியிருக்கிறார்கள் போலீசார். லான்சா மன நலம் பாதிக்கப்பட்டவனாக இருக்கலாம் என்கிறார்கள் போலீசார். அப்படியானால் அவன் கையில் கிடைக்கும் வகையில் துப்பாக்கிகளை வைத்திருக்கலாமா? நான்சியிடம் போலீசார் பயன்படுத்தும் 2 கைத் துப்பாக்கிகள், ராணுவத்தில் பயன்படுத்தப்படும் எம்4 துப்பாக்கி உள்பட 5 துப்பாக்கிகள் இருந்துள்ளன. ஆசிரியை பணியில் இருந்தவருக்கு எதற்கு இத்தனை துப்பாக்கிகள் என்பதை யார் விளக்குவார்கள்? துப்பாக்கிகளுக்கு எதிராக அமெரிக்காவில் மீண்டும் எதிர்ப்புக் குரல் கிளம்பியிருக்கிறது. இந்த முறை மக்களிடம் இருந்தே. அதனால் பலன் இருக்கும் என நம்பலாம்.




நன்றி: Dinakaran

No comments:

Post a Comment