Monday, 4 February 2013

கட்கரி போய் ராஜ்நாத்

நிதின் கட்கரி இரண்டாவது முறையாக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக அறிவிக்கப்பட இருந்ததை வெற்றிகரமாக தடுத்து விட்டார்கள். யார் தடுத்தார்கள் என்பதில் கருத்தொற்றுமை இல்லை. காங்கிரஸ்தான் வருமான வரி துறையை ஏவி கட்கரிக்கு சொந்தமான நிறுவனங்களில் சோதனையிட வைத்து அவரது வாய்ப்பை தடுத்து விட்டதாக பாரதிய ஜனதா மேலிடம் கூறுகிறது. கட்சியில் அவருக்கு எதிரான கோஷ்டி சாமர்த்தியமாக காய் நகர்த்தி தடுத்ததாக காங்கிரஸ் சொல்கிறது. இரண்டுமே உண்மை என்றால் தவறில்லை. கட்கரி பெரும் தொழிலதிபர் என்பது ரகசியமல்ல. முதல் முறை தலைமை பதவிக்கு வர அது அவருக்கு பயன்பட்டது. ஆனால் அவரது நிறுவனங்கள் முறைகேடாக செயல்பட்டு லாபம் ஈட்டியதாக புகார்கள் எழுந்தபோது அவர் கொடுத்த விளக்கம் போதுமானதாக இல்லை. இதனால் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பியது. ஊழலின் பெயரால் காங்கிரசை கடுமையாக விமர்சிக்கும் பிரதான எதிர்க்கட்சியின் தலைவரே ஊழல் பேர்வழி என்று தெரிந்தால் யார் மதிப்பார்கள் என்று ஜெத்மலானி தொடங்கி பல தலைவர்கள் பகிரங்கமாக கண்டித்தனர். கட்சி பிளவு படும் சூழ்நிலையில் கட்கரி  பதவி விலக முன்வந்தார். ஆனால், மீண்டும் அவரையே தலைவராக்கும் திட்டத்தின் ஒரு  அத்தியாயம்தான் அந்த விலகல் என்று தெரிய வந்ததும் அதிருப்தீ பரவியது. இனிமேல் ஊ என்ற எழுத்தில் தொடங்கும் சொல்லையே நாம் உச்சரிக்க முடியாது என மூத்த தலைவர்கள் கலங்கினர். ஆனால் ஆர்.எஸ்.எஸ் பின்புலம் கொண்ட  கட்கரிக்கு எதிராக கொடிதூக்க அவர்களுக்கு துணிவில்லை. மகேஷ் ஜெத்மலானி போன்ற மூன்றாம் தலைமுறையினர் கட்கரியை எதிர்த்து போட்டியிட முனைந்தனர். இந்த நேரத்தில்தான் வருமான வரி அதிகாரிகள் நுழைகின்றனர். கிளைமாக்சில் திருப்பம். கட்கரி ஒதுக்கப்பட்டு ராஜ்நாத் சிங் தலைவராகிறார். 'உள்துறை அமைச்சர் ஷிண்டேயை நீக்காவிட்டால் நாடாளுமன்றம் நடக்க விடமாட்டோம்' என்று அவர் முழங்குகிறார். 'நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் இந்த (வருமான வரி) அதிகாரிகளை சும்மா விடமாட்டோம்' என்று கட்கரி மிரட்டுகிறார். அரசியல் மாற்றத்துக்காக ஏங்கும் பொதுமக்களின் பொறுமை வேகமாக கரைந்து கொண்டிருப்பதை பாரதிய ஜனதாவும் உணர மறுப்பது உண்மையில் பரிதாபம்.





நன்றி: Dinakaran 

No comments:

Post a Comment