பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வழி வகுக்கும் மசோதாவுக்கு நேர்ந்த கதி லோக் பால் மசோதாவுக்கும் ஏற்படும் வாய்ப்பு அதிகரித்து வருகிறது. லஞ்ச ஊழலுக்கு முடிவு கட்ட லோக் பால் அமைப்பை நிறுவ வேண்டும் என்று போர்க்கொடி தூக்கி போராடியவர்களே அதற்கான மசோதாவை கொன்று விடுவார்கள் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. தேசிய அளவில் லோக் பால், மாநிலங்களில் லோக் அயுக்தா அமைப்புகளை ஏற்படுத்த வகை செய்யும் மசோதா 2011 டிசம்பர் 27ல் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மேலவையும் அப்படியே நிறைவேற்றி இருந்தால் இந்நேரம் அது சட்டமாகி ஒரு சிலர் விசாரணையையும் தண்டனையையும் எதிர்கொண்டிருக்கலாம்.ஆனால் அந்த மசோதா மிகவும் பலவீனமான லோக் பால் அமைப்பையே உருவாக்கும் என எதிர்க்கட்சிகள் குறை கூறின. எனவே மசோதாவில் நிறைய திருத்தங்கள் , மொத்தம் 187 , கொண்டுவர முனைந்தன. மேலவையில் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இல்லை. எனவே 12 மணி நேரம் விவாதம் நடந்தபின் நள்ளிரவு ஆகிவிட்டதை காரணம் காட்டி மசோதா மீது வாக்கெடுப்பு நடக்காமலே சபை ஒத்திவைக்கப்பட்டது. 2012 மே 21ல் அதே சபையின் தெரிவுக் குழுவுக்கு மசோதாவை அனுப்பும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த குழு அளித்த 16 பரிந்துரைகளில் 14 அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அதற்கேற்ப மசோதா திருத்தப்பட்டு மேலவைக்கு வருகிறது. அங்கு ஒப்புதல் கிடைத்தால் மறுபடியும் மக்களவை ஒப்புதல் பெற வேண்டும். அப்புறம் ஜனாதிபதி கையெழுத்துதான். மத்திய புலனாய்வு நிறுவனமான சி.பி.ஐ.யின் இயக்குனரை பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், தலைமை நீதிபதி ஆகியோர் கொண்ட குழு தேர்வு செய்யும் என்பது அரசு ஏற்றுக் கொண்டுள்ள முக்கிய பரிந்துரைகளில் ஒன்று. 'இதெல்லாம் போதாது.
சி.பி.ஐ.க்கும் அரசுக்கும் சம்பந்தமே இருக்கக்கூடாது. லோக் பாலுக்குதான் எல்லா அதிகாரமும் தரவேண்டும்' என்று அன்னா ஹசாரே அணி சொல்கிறது. மேதைகள் இணைந்து உருவாக்கிய அரசியல் சாசனமே நூறு முறை திருத்தப்பட்டுள்ள நிலையில், கிரண் பேடி சொல்வதுபோல் இந்த மசோதாவை ஒரு நல்ல ஆரம்பமாக எடுத்துக் கொண்டு நிறைவேற்றுவதுதான் அர்த்தமுள்ள நடவடிக்கையாக இருக்கும்.
நன்றி: Dinakaran
No comments:
Post a Comment