காணும் பொங்கலன்று சென்னையில் 105 குழந்தைகள் காணாமல் போயிருக்கின்றன. கூட்டத்தில் குழந்தைகள் காணாமல் போவது பெரிய விஷயமில்லை. மாவட்டங்களைவிடவும் தலைநகரில் காணும் பொங்கல் கூட்டம் அதிகமாக இருப்பதால் அது பெரிய எண்ணிக்கையும் இல்லை. மெரினா கடற்கரையில் குவிந்த கூட்டத்தில் 68 குழந்தைகளும், எலியட்ஸ் பீச்சில் 2, தீவுத்திடல் பொருட்காட்சியில் 35 குழந்தைகளும் பெற்றோரை விட்டு எப்படியோ பிரிந்துவிட்டன. காவல்துறையின் சிறப்பான ஏற்பாடுகளால் அந்த குழந்தைகள் ஒரு மணி நேரத்துக்குள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது பாராட்டுக்குரியது. 75 மீட்டருக்கு ஒரு கோபுரம் வீதம் அமைத்து பைனாகுலர் மூலம் கூட்டத்தை கண்காணித்துள்ளனர். இரு கோபுரங்களுக்கு இடையே ஒரு இன்ஸ்பெக்டர் + நான்கு கான்ஸ்டபிள்கள் ரோந்து சென்றுள்ளனர். ஒலிபெருக்கி மூலம் இடைவிடாத எச்சரிக்கை. இதனால் வழி தவறிய குழந்தைகள் உடனடியாக காவலர்களின் வசம் வந்தன. எல்லாம் 4 முதல் 10 வயது குழந்தைகள். அவர்களுக்கு பிஸ்கட், சாக்லெட், தண்ணீர் கொடுத்து பயம் போக்கி விசாரித்துள்ளனர். ஐந்தாறு வயது குழந்தைகளுக்கு பெற்றோர் பெயரை சொல்ல தெரியவில்லை. தன் பெயரை மறக்கவில்லை. ஆனால் மழலை உச்சரிப்பால் குழப்பம். மைக்கில் சரியான தகவலை சொல்ல முடியவில்லை. அப்போதுதான் ஒரு காவலருக்கு அந்த யோசனை பிறந்திருக்கிறது. அப்பா அம்மா செல்போன் நம்பர் தெரியுமா என்று கேட்டிருக்கிறார். குழந்தைகள் உற்சாகமாக தலையசைத்து 10 இலக்க போன் நம்பரை கரெக்டாக சொல்லியிருக்கின்றனர். ஒலிபெருக்கியின் உதவி இல்லாமலே பெற்றோரை சுலபமாக வரவழைத்து குழந்தையை ஒப்படைத்திருக்கின்றனர். சிலர் மட்டும் நன்றி கூறாமல் சிடுசிடுப்புடன் இழுத்துச் சென்றுள்ளனர். தவற விடுவதற்கென்றே கடற்கரைக்கு அழைத்து வந்தார்களோ என்று போலீசை சிந்திக்க வைத்தவர்கள் அவர்கள்.
பெயரை விட நம்பர் குழந்தைகள் மூளையில் ஆழமாக பதிகிறதா அல்லது மன ரீதியாக இதில் ஏதாவது உள்ளர்த்தம் இருக்கிறதா என்பதை ஆராய்ச்சிகள்தான் தெளிவுபடுத்த முடியும். ஆனால், வில்லங்கமான செய்திகளுக்கே பழகிப்போன சென்னை போலீஸ், பொதுமக்களின் பாராட்டை பெறும் வகையிலும் செயல்பட முடியும் என்பதை இந்த நிகழ்வு நிரூபிக்கிறது.
நன்றி: Dinakaran
No comments:
Post a Comment