ஒரு பொருளுக்கு ஆளுக்கு ஒரு விலை வைக்க முடியாது. எல்லோருக்கும¢ ஒரே விலைதான். சில்லரை விற்பனையில் விலை அதிகமாகவும் மொத்த விற்பனைக்கு குறைவாகவும் இருக்கும். இதுதான் நடைமுறை. ஆனால் எந்த பொருளாதார சித்தாந்தத்தின்படியும் ஏற்றுக் கொள்ள முடியாத வகையில், அதிகமாக வாங்கும் ரயில்வே, அரசு போக்குவரத்து கழகங்கள் டீசலுக்கு அதிக விலை தர வேண்டும் என அறிவித்திருக்கிறது மத்திய அரசு. சென்னையில் பெட்ரோல் விலை ரூ. 70.26. டீசல் ரூ. 50.68. ஏறக்குறைய ரூ. 20 குறைவு. இதனால் ரூ. 35 லட்சம் முதல் ரூ. 50 லட்சம் வரை விலை கொடுத்து கார் வாங்கும் பணக்காரர்கள் டீசல் மாடலையே தேர்வு செய்கிறார்கள். இத்தனைக்கும் டீசல் மாடலுக்கு ரூ. 7 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை விலை அதிகம். இருந்தாலும் டீசல் விலை குறைவு என்பதால் இந்த சிக்கனம். இவர்கள் பெட்ரோல் பங்க்கில் ஒரு லிட்டர் டீசல் ரூ. 50.68 கொடுத்தே வாங்கலாம். அரசு பஸ் கட்டணத்தை விட ஏறக்குறைய 2 மடங்கு வசூலிக்கும் ஆம்னி பஸ்களுக்கும் இதே விலைதான். ஆனால் ஏழைகள், நடுத்தர மக்கள் அதிகம் பயணம் செய்யும் ரயில், அரசு பஸ்களுக்கு டீசல் விலை ரூ. 61. லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு இயங்கும் நிறுவனங்களுக்கு இந்த விலை உயர்வு பெரிய விஷயமில்லை. ஆனால் சேவை நோக்கில் செயல்படும் ரயில்வே, அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு இந்த விலை உயர்வு பேரிடி.சென்னையில் மட்டும் 3650 எம்டிசி பஸ்கள் ஓடுகின்றன.
தமிழகம் முழுவதும் 22,000. இவை அனைத்தும் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 20 லட்சம் லிட்டர் டீசலை பயன்படுத்துகின்றன. ஒரு லிட்டருக்கு ரூ. 11 அதிகம் கொடுத்தால், தினமும் ரூ.2.2 கோடிக்கும் மேல் கூடுதல் செலவாகும். ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் அதிகம் செலவிட வேண்டியிருக்கும். இந்த பணத்தை ஏழைகளின் பையில் இருந்துதான் எடுக்க வேண்டியிருக்கும். ஏற்கனவே ரயில், பஸ் கட்டண உயர்வால் தத்தளித்துக் கொண்டிருக்கும் பொதுஜனத்தால் இதை தாங்க முடியாது.இருப்பவனிடம் எடுத்து இல்லாதவனுக்கு கொடுப்பதுதான் நியாயம். இல்லாதவனிடம் எடுத்து இருப்பவனிடம் கொடுப்பது சுரண்டல். சுரண்டலை தடுக்க வேண்டிய அரசே இந்த வேலையை செய்யக் கூடாது.
நன்றி: Dinakaran
No comments:
Post a Comment