Monday, 4 February 2013

கற்றல் குறைபாடு யாருடையது?

ஐந்தில் ஒரு மாணவனுக்கு டிஸ்லெக்சியா என்று சொல்லப்படும் கற்றல் குறைபாடு இருப்பதாக அரசுக்கு தெரிய வந்துள்ளது. இது 20 சதவீதம். தமிழக பள்ளிகளில் ஏறத்தாழ இரண்டு கோடி மாணவ மாணவிகள் படிக்கிறார்கள். அப்படியானால் 40 லட்சம் குழந்தைகளுக்கு டிஸ்லெக்சியா இருப்பதாக அர்த்தம். ஆயினும் யாரும் பீதி அடைய தேவையில்லை. ஏனென்றால் டிஸ்லெக்சியா என்பது நோயல்ல. குறைபாடு என்பதும் சரியான விளக்கம் ஆகாது. வித்தியாசமான திறமை கொண்டவர்கள் என்று  கூறுவது ஓரளவு பொருத்தமாக தோன்றுகிறது. தாரே ஜமீன் பர் என்ற அருமையான திரைப்படத்தில் டிஸ்லெக்சியா கொண்ட சிறுவனை ஆமிர் கான் அப்படித்தான் அழகாக சித்தரித்து இருந்தார். வார்த்தைகளில் எழுத்துக்களை இடம் மாற்றி பயன்படுத்துவார்கள். ராதமாஸ் என்று எழுதுவார்கள். எண்களையும் அப்படி. இன்றைய தேதி 30.012.120 என்று. பிழையாக எழுதியதை அவர்களால் சரியாக வாசிக்க முடியும். இவர்களின் மூளை 30 சதவீதம் கூடுதலாகவும் 50 சதவீதம் மேலதிகமாகவும் சராசரி மனிதர்களால் ஊகிக்க முடியாத நாலாவது பரிமாணம் அவர்களுக்கு புலப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். முட்டாள் என முத்திரை குத்தி பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட டிஸ்லெக்சியா மாணவர்கள் பின்னாளில் மிகப்பெரிய விஞ்ஞானியாக, விளையாட்டு வீரனாக, நிர்வாகியாக, படைப்பாளியாக, நட்சத்திரமாக மகாரூபம் எடுத்துள்ளனர். அநேகமாக பெற்றோரும் ஆசிரியர்களும் இந்த செல்வங்களை புரிந்து கொள்வதில்லை. மக்கு என்று கேலி செய்து, கீழ்ப்படியவில்லை என தண்டித்து அவர்கள் மனதிலுள்ள தன்னம்பிக்கையை வழித்தெறிவது வழக்கம். அந்த கொடுமைக்கு முடிவு கட்ட அரசு இப்போதாவது முன்வந்திருப்பதை பாராட்ட வேண்டும். டிஸ்லெக்சியா என்றால் என்ன, யாருக்கு அது இருக்கிறது என்பதை எவ்வாறு கண்டறிவது, அவர்களுக்கு எந்த முறையில் கற்பிப்பது என்று ஆசிரியர்களுக்கு  பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆசிரியர்கள் அதை பெற்றோருக்கு சொல்லிக் கொடுத்து புரிய வைக்கலாம். 

புரிதல் என்பது மனிதனுக்கு மனிதன் மாறுபடக்கூடியது. அதை புரிந்து கொள்ள மறுப்பவர்களே கற்றலில் குறைபாடுள்ள மனிதர்கள்.




நன்றி: Dinakaran 

No comments:

Post a Comment