Monday, 4 February 2013

பிரதமராக வரக்கூடிய தகுதி யாருக்கு இருக்கிறது ?

அடுத்த பிரதமராக வரக்கூடிய தகுதி யாருக்கு இருக்கிறது என்ற விவாதம் சூடு பிடிக்கிறது. இவருக்கு என்று தெளிவான முடிவு வருவது சந்தேகம். இவருக்கு இல்லை என்று கூறுவதில்  தெளிவாக இருக்கிறார்கள். மன்மோகன் இன்னொரு முறை நாற்காலியில் அமரப் போவதில்லை என்பதிலும் ஒருமித்த கருத்து தெரிகிறது. மொத்த இடங்களில் பாதிக்கு மேல் வெற்றி பெற்ற கட்சியின் தலைவரை ஜனாதிபதி அழைத்து ஆட்சி அமைக்க சொல்லும் நடைமுறை ராஜிவ் காலத்தோடு முடிந்து விட்டது. இது கூட்டணி யுகம். காங்கிரஸ், பாரதிய ஜனதா தலைமையில் இரண்டு  கூட்டணிகள் இருக்கின்றன. மூன்றாவது அணி என்று அவ்வப்போது பேச்சு எழுந்து மறையும். இரு அணிகளிலும் சேராத கட்சி எத்தனை இடங்களில் ஜெயித்திருந்தாலும் இதர கட்சிகள் பட்டியலில்தான் இடம் பெறும். ஆனால், இரு அணிகளுமே பெரும்பான்மை பெறாத நிலையில் இதர கட்சிகளின் செல்வாக்கு  எகிறும். எதிர்பாராத திருப்பமாக இந்த கட்சிகளில் ஒன்றின் தலைவருக்கு பிரதமராகும் அதிர்ஷ்டம் அடிக்கலாம். காங்கிரசை பொருத்தவரை ராகுல்தான் பிரதமர் வேட்பாளர். பாரதிய ஜனதாவில் பல பேருக்கு ஆசை. வெவ்வேறு தலைவர்களின் விருப்பமாக வெளிப்படுகிறது. அத்வானி ஒதுங்கி விட்டதால் மோடி பெயர் முன்னணியில். ஆனால் சுஷ்மா மேல் என்கிறது சிவசேனா. நிதிஷ் குமாருக்கு என்ன குறைச்சல் என்று ஐக்கிய ஜனதா தளம் கேட்கிறது. வெங்கய்யா வேண்டாமென்று சொல்லிவிட்டார்.எல்லா தகுதிகளும் கொண்டவர் சரத் பவார் மட்டுமே என்கிறது தேசியவாத காங்கிரஸ். பிரதமர் பதவியை வேண்டாம் என தள்ள மாட்டேன் என்று மாயாவதி பணிவுடன் கூறிவிட்டார். எல்லாருமாக என்னை அதில் அமரவைத்தால் மறுக்கவா முடியும் என்று முலாயம் சிங் சலித்துக் கொள்கிறார். 

பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டை அமைதிப் பூங்காவாக மாற்ற ஜெயலலிதாவை விட்டால் ஆளில்லை என்று அதிமுகவினர் நம்புகின்றனர். மம்தா அவசரப்படவில்லை என்று திருணாமுல் வட்டாரங்கள் கூறுகின்றன. எடியூரப்பா இன்னும் ஷெட்டரை விட்டு வைத்திருப்பதற்கு காரணமே டெல்லி வாய்ப்புதான் என்கிறார்கள். கட்சிகளுக்கு இடையே கொள்கைகளில் பெரிய வித்தியாசம் இல்லை என்றான பிறகு தலைவர்களின் தகுதிகளாவது விவாதத்துக்கு வருவது நல்லதுதானே.




நன்றி: Dinakaran 

No comments:

Post a Comment