உலகஅளவில் பாதுகாக்கப்பட்டவற்றின் பட்டியல் காண http://win.tamilnool.net/search/worldlist.htmபொள்ளாச்சி நசன் - தமிழம்.வலை. மின் அஞ்சல் pollachinasan@gmail.com. பேச 9788552061நண்பர்களுக்கு வணக்கம்மேலுள்ள இணைப்பில் உலகஅளவில் பாதுகாக்கப்பட்ட நூல்கள் மற்றும் இதழ்களின் பட்டியல் உள்ளது. பட்டியலில் ஒருங்குறியில் தட்டச்சு செய்து பார்க்கவும். பட்டியலைத் தலைப்பு வழியிலும் அகரவரிசைப்படுத்தலாம். ஒரு பக்கத்திற்கு 25 முதல் 500 எண்ணிக்கையிலானவற்றை ஒரே பக்கத்திலும் பார்க்கலாம். விடுபட்ட இதழ்கள் மற்றும் நூல்கள் இருந்தால் அருள்கூர்ந்து திரட்டவும். உலகஅளவில் இயங்குகிற அனைவரது ஒப்புதலுடன் ஒரு முழுமையான காட்சிப்படுத்துதலைப் பின்வரும் காலங்களில் செய்யலாம். ஆனால் அதற்கு முன் உடைந்து போகிற, நூல்களையும் இதழ்களையும் கண்டறிந்து அவற்றை படவடிவக்கோப்புகளாக்குவது நமது முதன்மையான பணியாக இருக்கட்டும். யார் வேண்டுமானாலும் இந்தப் படவடிவக்கோப்பாக்குதலைச் செய்யலாம். விரும்புகிறவர்களுக்கு ஸ்கைப் வழியாகப் பயிற்சியும் தர விழைகிறேன். அச்சடித்த அந்த நூல் உடைந்து போனால் பிறகு அதனைக் காப்பாற்றவே முடியாது. தனியொருவரிடம் இருக்கும் அந்த நூலை படவடிவக்கோப்பாக்கி வைத்தால் அது அழியாமல் பாதுகாக்கப்படும். எனவே நூல் வைத்திருப்பவர்கள் அதனைப் பாதுகாக்கத் திட்டமிடவும். தமிழம் வலை இணையத்தில் உள்ள மேலுள்ள பட்டியல் - என்பார்வைக்கு வந்தவற்றின் பட்டியல் மட்டுமே. விடுபட்டவை இருக்கலாம். தனித்தனியாக உருவாக்கி வைத்திருக்கும் பட்டியலை படவடிவக்கோப்புடன் அனுப்பினால் பட்டியலில் இணைத்துக் கொள்கிறேன். ஏன் இந்தப் பட்டியல் ? இந்தப் பட்டியலால் என்ன பயன் ? இது படிப்பவருக்கானது அல்ல. படவடிவக்கோப்பு உருவாக்குபவருக்கானது. உருவாக்கிய நூல்களையே மீண்டும் உருவாக்காமல், நேரத்தை வீணடிக்காது இயங்க இந்தப் பட்டியல் உதவும். பட்டியலில் விடுபட்டவற்றை உருவாக்கத் திட்டமிட்டால் ஒரு நிலையில் தமிழில் வெளியான அனைத்து நூல்களையும் நாம் படவடிவக்கோப்பு ஆக்கி விடலாம். இதற்கான முன்முயற்சியே இந்தப் பட்டியல். நூல் வைத்திருப்பவர்கள் அருள்கூர்ந்து உதவவும். அந்த நூல் ஆக்கியவரை உயிர்ப்பித்து அடுத்த பல தலைமுறையினருக்கும் காட்சிப்படுத்தலாம். படவடிவக்கோப்பாக்காது வைத்து இருந்தால் 70 - 100 ஆண்டுகளுக்குள் அவை உடைந்து யாருக்குமே பயனற்றதாகிவிடும். அருள்கூர்ந்து திட்டமிடவும்.
அன்புடன்
--
தமிழ்க்கனல் - பேச: 9788552061 - www.thamizham.net
ஹேப்பி பொங்கல் என்று வாழ்த்து சொல்கிறார்கள்.வீடு தேடி சென்று நேரில் வாழ்த்து சொல்லி சிரித்து மகிழ்ந்த காலம் என்றோ முடிந்து விட்டது. வாழ்த்து அட்டை வாங்கி கையெழுத்து மட்டும் போட்டு ஸ்டாம்ப் ஒட்டி தபால் பெட்டியில் திணித்து விட்டு புன்னகைத்துக் கொண்ட காலகட்டமும் மலையேறி போய்விட்டது. அட, செல்போனில் பேசக்கூட நேரமும் பொறுமையும் இல்லாமல் எஸ்எம்எஸ் வழியாக வாழ்த்து அனுப்புகிறோம். அனுப்பியவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.இருபது வருடத்துக்குள் வாழ்க்கை முறை என்னமாக மாறிவிட்டது. தகவல் தொடர்பு தொழில்நுட்பம் புரட்சிகரமாக வளர்ந்திருக்கிறது. பார்ப்பதும் பேசுவதுமான புலன்வழி தொடர்புகள் அடியோடு அறுந்து போயின. தமிழ் எழுத்துக்களை குறுந்தகவல் சேவையில் உள்ளடக்க செல்போன் கம்பெனிகள் அப்படியொன்றும் ஆர்வம் காட்டாததால் அகத்தியர் காவிரியை கமண்டலத்தில் அடக்கியது மாதிரி 247 எழுத்துக்களை 26க்குள் அடக்கி புதுத்தமிழ் உருவாக்கி இருக்கிறோம். பொங்கும் மங்கலம் எங்கும் நிறையட்டும் என்பது மாதிரியான மரபு வழி வாழ்த்துக் கூற எழுத்து வளம் போதாத காரணத்தால் விஷ் யு எ ஹேப்பி பொங்கல் என்று தமிழர் திருநாள் வாழ்த்து சொல்வது பிரபலமாயிற்று. தவறுக்கு வாய்ப்பு குறைவு. அதனால் தப்பில்லை. மொழியை பார்க்காதீர்கள், பாஸ்.. மனதை பாருங்கள் என்று ஆறுதல் கூறுவதை ஏற்பது தவிர வழியில்லை.என்றாலும், உழவர் திருநாள் வாழ்த்துக்கள் என்ற வாசகம் எங்காவது பார்வையில் பட்டால் மனமும் உறுத்துகிறது.உழவன் எங்கே நன்றாக இருக்கிறான், திருநாள் கொண்டாட? மழை பொய்த்து விட்டது. நதி வறண்டு விட்டது. நிலத்தடி நீர் தாழ்ந்து விட்டது. எஞ்சியதை உறிஞ்சி மேலே கொண்டுவர நினைத்தால் மின்சாரம் கிடையாது. மாய மந்திரம் செய்து மகசூல் பார்த்தால் விலை கிடைக்காது. உழக்கு மிஞ்சாது என்ற பழமொழி மட்டும் பொய்க்காமல் இருக்கிறது. என்ன செய்வான் விவசாயி. எப்படி கொண்டாடுவான் உழவர் திருநாள்?இயற்கை முதற்கொண்டு எல்லாத் தரப்பினராலும் ஏமாற்றப்படுபவன்தான் விவசாயி. காவிரி நதியோரம் நடக்கும் சோக நிகழ்வுகளை பார்ப்பதால் மட்டும் கலங்கவில்லை நம் நெஞ்சம். வைகை, தாமிரபரணி என்று எந்த நதிக்கரையை எடுத்துக் கொண்டாலும் இதுதான் நிதர்சனம்.பேராசைக்கார மனிதன் நீரையும் நிலத்தையும் திருடி இயற்கையை சுரண்டிக் கொழுத்தான். குற்றுயிராக்கப்பட்ட இயற்கை வளங்களால் கைவிடப்பட்டு அடித்தட்டு உழவன் கண்ணீர் வடிக்கிறான். இங்கல்ல. இந்தியா முழுமையிலும் இன்று விவசாயி நிலைமை இப்படித்தான் இருக்கிறது. பெரு நகரங்களில் ஊடகங்களின் வெளிச்சத்தில் நடக்கவில்லை என்பதால் குடும்பம் குடும்பமாக தற்கொலை செய்யும் விவசாயிகளின் முகங்கள் யார் கண்களிலும் படுவதில்லை.ஆனால் நெல்லும் கோதுமையும் கம்பும் கரும்பும் பயிரிட்டு பாதுகாத்து அறுவடை செய்து அதை வயலில் கால் பதித்திராத, நெற்பயிர் எப்படி இருக்கும் என்பதை பார்த்திராத கோடானு கோடி மக்களின் பசிக்கு உணவாகப் படைக்கும் இந்திய உழவன் தன்மானம் மிக்கவன். விதைத்த பயிரெல்லாம் கருகி வயல்கள் கட்டாந்தரையாகி நஷ்டம் தலைக்கு மேல் போனாலும் கவுரவத்தை விட்டு யாரிடமும் கையேந்தி நிற்க மாட்டான். அவன் மானஸ்தன்.அதனாலேயே அவனை எல்லோரும் ஏமாற்றுகிறார்கள்.இதில் அரசாங்கத்தை அரசியல்வாதிகளை அதிகாரிகளை இனம் பிரித்துப் பார்க்க எந்த அவசியமும் கிடையாது. 300 ரூபாய் கூலியுடன் 30 ரூபாய் இனாமை எந்தக் கேள்வியும் இல்லாமல் முடிவெட்ட செலவழித்துவிட்டு சலூனில் இருந்து வெளியே வரும் நடுத்தர வர்க்கத்து அறிவுஜீவிகள், வீடு தேடி கூடை சுமந்து வரும் கீரைக்காரியிடமும் வாழைப்பழ வண்டிக்காரனிடமும் கூச்சமே இல்லாமல் பேரம் பேசி அவர்களின் வயிற்றிலடிக்கும் காட்சிகளை நாள்தோறும் பார்க்கிறோம். சாமானியர்களாக தங்களை சொல்லிக் கொள்ளும் இவர்களை விடவும் போலிகள் எவருமில்லை. சரி. இவ்வாறு அனைத்துத் தரப்பினராலும் ஏமாற்றப்படுவதில் இருந்து தப்ப வேண்டுமானால் நமது விவசாயிகள் என்னதான் செய்ய வேண்டும்?செய்யக்கூடாததை சொன்னால் போதும். விவசாயிகள் வேறு யாரையும் நம்பக்கூடாது. கர்நாடக அரசு, நதிநீர் ஆணையம், நீதிமன்ற ஆணைகள், தடையற்ற மின்சாரம், மானியம், கட்சிகள், வாக்குறுதிகள், வானிலை அறிக்கை… எதையும் யாரையும் நம்பாமல் & நம்பியிருக்காமல் & விவசாயி தன்னைத் தானே மீட்டெடுக்க வேண்டும். காலம் காலமாக கடைப்பிடித்த வழிமுறைகள் இப்போது பலனளிக்காததால் சொந்தக் காலில் நிற்க என்ன செய்யலாம் என்பதை தீர்மானிக்க வேண்டும். அது சுலபம் அல்ல. ஆனால் முடியாதது அல்ல.
ஒருவேளை, முயன்று பார்த்தும் எந்த பலனும் கிட்டவில்லை என்று தெரிய வருமானால், வேளாண்மைத் தொழிலுக்கே விடை கொடுக்கவும் துணிய வேண்டும். அப்போதுதான் மற்றவர்களுக்கு உறைக்கும்.
அதுவரை நாமெல்லாம் கொண்டாடுவது போலிப் பொங்கல்.
ஒருவேளை, முயன்று பார்த்தும் எந்த பலனும் கிட்டவில்லை என்று தெரிய வருமானால், வேளாண்மைத் தொழிலுக்கே விடை கொடுக்கவும் துணிய வேண்டும். அப்போதுதான் மற்றவர்களுக்கு உறைக்கும்.
அதுவரை நாமெல்லாம் கொண்டாடுவது போலிப் பொங்கல்.
